தமிழை சரியாய் எழுத வல்லெழுத்து மிகாத இடங்கள் (4)
சுக்கு, பட்டு, பாட்டு, முத்து, காப்பு, நேற்று இவைகள் வன்றொடர்க் குற்றியலுகரங்கள். நாட்டு புகழ் என்பதன் பொருள் நாட்டுகின்ற புகழ் அல்லது நாட்டும் புகழ் அல்லது நாட்டிய புகழ்.
ஆகையால் நாட்டு என்பது வினைத்தொகை. இந்த நாட்டு என்பதன் முன் வல்லெழுத்து வந்தால் மிகாது. இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
நாட்டு + புகழ் = நாட்டு புகழ்.
கூப்பு கை என்பதும் அதுவே. எனவே கூப்பு என்பதன் முன்வரும் வல்லெழுத்து மிகாது. இயல்பாகும்.
கூப்பு + கை = கூப்பு கை.
சங்கு, பஞ்சு, மாண்பு, பந்து, வம்பு, ஒன்று இவைகள் மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்!
இவற்றின் முன்வரும் வல்லெழுத்து மிகாது; இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
சங்கு + பிறந்தது = சங்கு பிறந்தது
பஞ்சு + காய்ந்தது = பஞ்சு காய்ந்தது
பண்பு + குறைந்தது = பண்பு குறைந்தது
பந்து + பறந்தது = பந்து பறந்தது
வம்பு + பண்ணினான் = வம்பு பண்ணினான்
ஒன்று + செய்தான் = ஒன்று செய்தான்
பெய்து, சார்பு, போழ்து, தெள்கு இவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது; இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
பெய்து + தந்தான் = பெய்து தந்தான்
சார்பு + பற்றியது = சார்பு பற்றியது
சால்பு + கண்டோம் = சால்பு கண்டோம்
போழ்து + புலர்ந்தது = போழ்து புலர்ந்தது
தெள்கு + நடித்தது + தெள்கு நடித்தது
‘தெள்கு’ என்பது தெள்ளுப்பூச்சி.
நாகு, காசு, நாடு, காது, நூறு இவை நெடிற் றொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன் வலி மிகாது. இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
நாகு + பெரிது = நாகு பெரிது
காசு + கொடு = காசு கொடு
பாடு + படு = பாடு படு
நூறு + பணம் = நூறு பணம்
‘நாகு’ என்றால் என்ன தெரியுமா? எருமை.
எஃகு, கஃசு, அஃது.
கஃசு என்றால் ‘கால் பலம்‘ இவை ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம். இவற்றின் முன் வரும் வலி மிகாது இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
எஃகு + கடிது = எஃகு கடிது
கஃசு + கொடு = கஃசு கொடு
அஃது + பெரிது = அஃது பெரிது
எஃகு என்றால் இரும்பு.
அறுகு, இரிசு, குறடு, பெரிது, தருபு, தவறு இவை உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்கள்.
இவற்றின் முன் வலி மிகாது, இயல்பாகும்.
எடுத்துக்காட்டு
அறுகு + பெருத்தது = அறுகு பெருத்தது
இரிசு + கழன்றது = இரிசு கழன்றது
குறடு + பெரிது = குறடு பெரிது
பெரிது + கொடுத்தான் = பெரிது கொடுத்தான்
தருபு + தந்தான் = தருபு தந்தான்
தவறு + செய்தான் = தவறு செய்தான்
‘அறுகு’ என்றால் அறுகம் புல்.
‘தருபு’ என்றால் தருவது.
- ‘குயில்’: சென்னை 1-8-62
- விடுதலை ஞாயிறு மலர், 16.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக