பக்கங்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

தந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்! -2

- தந்தை பெரியார்

 


 

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் முதலியவையும், அவை போன்றவையும் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, உயர்வுக்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல.


குறளில் ஏதோ சில குறைகள் இருக்கலாம். இருக்கமுடியும். ஏனென்றால் அது 1950ஆவது வருடத்திய (இன்றைய) மாடல் அல்ல. 2000 வருடத்திற்கு முந்திய சங்கதி. திருவள்ளுவர் திரிகாலமுணர்ந்த முனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னர் ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் எலக்ட்ரிக் லைட், ஒலிபெருக்கி, மோட்டார் முதலியவைகளைக் கண்டிருப்பானா? மதவாதிகள் வேண்டுமானால் எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர் என்று பலரை விளம்பரப்படுத்தலாம். ஆனால் அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருஷரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.

திருவள்ளுவர் நல்ல அறிவாளி, ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில் தான் ஒத்துக்கொள்ள முடியும்.

அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா? இன்றைய நிலைக்கு நான் பேசும் கொள்கைகள் சரி, என் திட்டங்கள் சரி என்றால் எனக்குப் பிறகும், இன்னும் 100, 200, 1000 வருடங்களுக்குப் பிறகும் என் கொள்கைகள், நான் வகுத்த திட்டங்கள் கொஞ்சங்கூட மாற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டுமே என்பது என்ன நியாயம்? அந்தப்படி இருக்க முடியுமா?

திருக்குறள் ஒரு மதத்தைத் தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்கு ஆகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே கையாள வேண்டிய வழி, வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது. குறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் 1,330 பாட்டுகளிலும் ஓர் இடத்திலாவது இந்து என்ற சொல் காணப்படவேயில்லை.

அதுமட்டுமல்ல; குறளாசிரியர் கடவுளையும், மோட்ச, நரகத்தையும் ஒத்துக் கொள்ளவில்லை. குறளில் நீங்கள் அறம், பொருள்,  இன்பம் என்ற அளவில்தான் காண முடியுமே தவிர, வீடு, மோட்சம் பற்றி அவர் கூறியிருப்பதாக இல்லை.  அறம், பொருள்,  இன்பம் என்றுதான் முப்பிரிவு கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு.

திருவள்ளுவர் கடவுளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறினேன். திருக்குறளின் முதல் அத்தியாயத்தில் கடவுள் வாழ்த்து என்று ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கக் கொள்கைகள் இடம் பெறவில்லை. மேலும் இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழ் பாசுரம் அந்தப் பத்துப் பாட்டுகளிலும் கிடையாது.

சிலர் கூறுகிறார்கள், குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப்பாக்கள் இடைச் செறுகல் என்று. சிலர், அப்படியெல்லாம் இல்லை, வள்ளுவர் பாடியதுதான் என்று கூறுகிறார்கள்.  நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் வாழ்த்துப்பாக்களை வள்ளுவரே பாடியதாகவே வைத்துக் கொண்டாலும், ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்காக வள்ளுவர் வாழ்த்துக் கூறினாரா? இல்லை கடவுள் வாழ்த்து கூறப்படும் பத்துப் பாட்டிலும் ஒரு பாட்டிலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லை கையாளவில்லை. திராவிடர்களுக்கு எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த என்பதான கடவுளைக் குறிக்க கடவுள் என்ற ஒரு சொல்லைத் தவிர, வேறு சொல் கிடையவே கிடையாது. அந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குறளில் கை வைக்கவில்லை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் கையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல; குறள் முழுவதிலுமே 1,330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது வள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம், உயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர் கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவில்லை. திருக் குறளுக்கு முந்திய நூல் என்று சொல்லப்படுகிற தொல் காப்பியத்திலும் கடவுள் என்ற வார்த்தையே கிடையாது.

அடுத்தபடியாக வள்ளுவர் ஆரியர் செய்யும் வேள்வியைக் கண்டிக்கிறார்.

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர்செகுத் துண்ணாமை நன்று’’ என்கிறார்.

அதாவது கடவுள் பெயர் கூறி உயிர்க் கொலை புரியும் கொடுஞ் செயலைக் கண்டிக்கிறார். நாட்டிலே நாலு வர்ணத்தை நிலைநிறுத்துவதற்கு ஆகவும், ஆரியர்களின் உயர் வாழ்வுக்கு ஆதாரமாயும் இருந்து வரும் வேதங்களையும், அதாவது வேதத்தைப் படிக்காவிட்டாலும் குற்றமில்லை, ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்று வள்ளுவர் வேதியத் தன்மையைக் கண்டிக்கிறார்.

இந்தப்படியாக மதம், கடவுள், வேதம், வேள்வி ஆகிய அத்தனையையும், ஆரியத்தின் உயர்வுக்கும் நம்மவர் இழிநிலைக்கும் ஆதாரமாய், காரணமாய் நின்று  நிலவும் அவற்றை வள்ளுவர் வெகு தீவிரமாகக் கண்டிக்கிறார். இந்தப்படியாக வள்ளுவர்  ஆரியக் கருத்துகளை எதிர்த்து விட்டு கண்டித்து விட்டு தனக்கு என்று யாதொரு ‘புது மத உபதேசமும்’ அவர் புரியவில்லை. ‘உன் அறிவைக் கொண்டு சிந்தித்து, ஆராய்ந்து உண்மை கண்டு உலகம் ஒப்ப நடந்து கொள்’ என்கிறார். யார் ஒருவர், ‘உன் அறிவின்படி உலகம் ஒப்ப நட’ என்கிறாரோ, அவர் எந்த மதத்தையும் சேர்ந்தவராகார்.

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

  மானங் கருதக் கெடும்’’ என்று கூறுகிறார்.

அதாவது ஒரு மனிதன் தன் இனத்தவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தாரானால், அதாவது பொதுநலத்துக்குப் பாடுபட வேண்டும் என்று முன் வந்தால் அவன் அந்தக் காரியத்திற்கு ஏற்ற நல்ல காலம் வரட்டும் என்று காத்திருக்கக் கூடாது. “இரண்டாவதாகவும் இந்தக் காரியத்தில் இறங்குகிறோமே, இதனால் இன்னின்ன கஷ்டங்கள் வருமே. நமக்கு பல விதத்திலும் அவமானம் ஏற்படுமே, மானம் போய்விடுமே’’ என்று கவலைப்படக் கூடாது. அந்தப்படியாக வெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், பொது வாழ்வில் நாம் செய்யப் புகும் காரியமே கெட்டு விடும் என்று மிகப் புரட்சி கரமாகக் கூறுகிறார்.

இந்தப்படியாக வள்ளுவர் மக்களுக்கு நல்வாழ்வின் வழியையும், நல்லொழுக்கத்தையும் கூறுகிறார். இன்றையத் தினம் திராவிடர்களுக்கு நல்ல நூல் குறள்தான். மற்ற வேறு எதுவும் இல்லை. பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் முதலியவையும், அவை போன்றவையும் திராவிடரின் ஒழுக்கத்திற்கோ, உயர்வுக்கோ, மான வாழ்வுக்கோ ஏற்றபடி எழுதப்பட்ட நூல்கள் அல்ல. அவையெல்லாம் ஆரியர்கள், தங்களின் உயர்வுக்கு ஆக, தங்களின்  மேல்ஜாதித் தன்மையை நிலை நிறுத்தி, அதனால் லாபம் அடைவதற்கு ஆக ஏற்பட்ட வர்ணாசிரம தர்மத்தை வலியுறுத்தி  எழுதி வைத்துக் கொண்டதல்லாமல், பொதுவாக மனிதர்கள், உலக மக்களின் நலனுக்கு ஏற்ற முறையில் எதையும் கூறவில்லை.

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக