பக்கங்கள்

புதன், 22 ஆகஸ்ட், 2018

பிழைஇன்றி எழுதுவீர்! (10)

தளை


இதுவரைக்கும் எழுத்து, அசை, சீர் என்பன பற்றிப் பார்த்தோம். இனித், தளை பற்றிக் கூறப்படும். சீர் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருவது தளை. நேர் நேரோடும், நிரை நிரையோடும் பொருந்தி வருவதும் நேர் நிரையோடும், நிரை நேரோடும் பொருந்தி வருவதும் தளை ஆயின.

“அம்மா என்றன் ஆசை என்றன்” என்பது அகவல் அடி. அதில் அம்மா என்பது நேர் நேர்; அதாவது தேமா. என்றன் என்பது நேர் நேர். அதாவது தேமா.

எனவே,  நேர் என்பதோடு நேர் ஒன்றிய தளை! நேர் நேர் என்பதில் கடைசியில் நேர் இருப்பது காண்க.

இன்னும்,

"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்” என்பது வெண்பா அடி.

வாக்குண்டாம் என்பது தேமாங்காய். அதாவது நேர் நேர் நேர். அதனோடு நல்ல அதாவது தேமா நேர் நேர் வந்தது.

இதைக் காயுடன் - அதாவது நேர் நேர் நேருடன் நேர் வந்து ஒன்றியது - இதையும் தளை என்று காண்க.

தளை என்பது பற்றி இவ்வளவு மட்டும் தெரிந்து கொண்டால் போதும்.

அடி

இனி அடியைப் பற்றிச் சொல்லப்படும். அடி என்பது மேற்சொன்ன தளை ஒன்றை ஒன்று அடுத்து வருவது.

செய்யுட்களில் இருசீர் கொண்ட அடியும், முச்சீர் கொண்ட அடியும், நற்சீர் கொண்ட அடியும், அய்ஞ்சீர் கொண்ட அடியும், அய்ந்துக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடியும் வரும். மேலும் செய்யுட்களில், | இரண்டடி கொண்ட செய்யுட்களும், மூன்றடி கொண்ட செய்யுட்களும், நான்கடி கொண்ட செய்யுட்களும், பல அடிகள் கொண்ட செய்யுட்களும் உண்டு.

அடிபற்றி இவ்வளவே தெரிந்து கொண்டாற் போதும். சுருக்கமாக இதுவரைக்கும் சொல்லி வந்தவற்றை மறக்கா மல் இருக்க வேண்டும்.

தொடை

இனி, இப்படி அமைந்தது இன்ன செய் யுள் என்றும், இப்படி அமைய வேண்டும் இன்ன செய்யுள் என்பன வற்றைச் சொல்ல ப்படும். தொடை என்பது பற்றி இனிக் காண்போம்.

வெண்பா

காய்முன் நேர் வரவேண்டும். மாமுன் நிரை வர வேண்டும்.

வாக்குண்டாம் நல்ல - என்பதில் வாக்குண்டாம் என்பது தேமாங்காய்.

நல்ல என்பதில் முதலில் நேர் இருக்கிறது. இதைத் தான் காய்முன் நேர் வரவேண்டும் என்பது.

நல்ல மனமுண்டாம் என்பதில் நல்ல என்பது மா மனமுண்டாம் என்பதன் முதலில் நிரை இருக்கின்றது. இதைத் தான் மாமுன் நிரை வரவேண்டும் என்றது.

இவ்வளவு சொல்லிவிட்டால் போதாது. வெண்பாவில் நேரிசை வெண்பா என்பது ஒன்று. வாக்குண்டாம் என்று தொடங்கும் பாட்டெல்லாம் வெண்பாதான். அதிலும் அதுதான் நேரிசை வெண்பா.

நேரிசை வெண்பாவிற்கு நான்கு அடி வரும். அந்த நாலடியில் முதலடி நாற்சீரடி. அடுத்த அடி முச்சீரடி. அந்த முச்சீரடியை அடுத்து ஒரு தனிச்சொல். அதன்பிறகு நாற்சீரடி. அதன் பிறகு முச்சீரடி.

வாக்குண்டாம் நல்ல

மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி

நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு.

இதில் முதலடி நாற்சீரடியாக இருப்பது காண்க. அடுத்த அடி முச்சீரடியும், தனிச்சொல்லும் ஆனது அறிக. அதற்கு அடுத்த அடி நாற்சீரடி ஆனதறிக. கடைசி அடி முச்சீரடியாய் இருப்பதறிக.

வெண்பாவைப் பற்றி இவ்வளவு மட்டும் சொல்லி விட்டால் போதாது.

வாக்குண்டாம் என்பது முதலடி. அடுத்த அடி நோக்குண்டாம் என்று இருப்பதை நோக்க வேண்டும். அப்படி எதுகை வைத்துத் தொடங்க வேண்டும். இரண்டாம் அடியை வாக் என்பதற்கு நொக் என்பது எதுகையல்ல, நோக் என்பதுதான் எதுகை. முதலெழுத்து நெட்டெழுத்தாய் இருக்க வேண்டும். அடுத்த எழுத்து க் என்றிருந்தால் அடுத்த அடியின் அடுத்த எழுத்தும் க் என்றே வரவேண்டும்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

எண், கண் என எதுகை வந்திருப்பதைக் காண்க.

எண் என்பதற்குக் கண் எதுகையே தவிர காண் என்பதோ, கண என்பதோ எதுகை அல்ல.

முதலடியும் இரண்டாம் அடியும் எதுகை உடையவை களாயிருந்தால் மட்டும் போதாது. தனிச் சொல்லும் எதுகையுடையதாய் இருக்க வேண்டும்.

வாக்குண்டாம் நல்ல

மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி

நுடங்காது - பூக்கொண்டு

என்பதில் வாக்-நோக்-பூக் என எதுகை வருதல் காண்க. கடைசி இரண்டடிகளும் எதுகையோடு வரவேண்டும்.

“துப்பார் திருமேனி

தும்பிக்கை யான்பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு”

துப் என்றும் தப் என்றும் வந்தது காண்க.

நேரிசை வெண்பா என்பது நாலடி கொண்டது.

எடுத்துக்காட்டு

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பது வும்தீதே - தீயார்

குணங்க ளுரைப்பதுவும் தீதே அவரோ

டிணங்கி இருப்பதுவும் தீது.

‘குறள் வெண்பா’ என்பது இரண் டடியில் வருவது.

எடுத்துக்காட்டு

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிபெற்றுப் பலவாறு வரும்.

எடுத்துக்காட்டு

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகல் வைகுமென் றின்புறுவார்

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.

இது ஒரே வகை எதுகையால் வந்த இன்னிசை வெண்பா. மேலும் இதில் தனிச்சொல் இல்லை.

இன்றுகொல், அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை! ஒல்லும் வகையாம்

மருவுமின் மாண்டார் அறம்!

இது முதலிரண்டடி ஒரே எதுகையும் பின் இரண்டடி ஒரே எதுகையும் கொண்டு வந்து, தனிச்சொல் இல்லை. இவ்வாறு பலவாறு வரும்.

இனிப் பஃறொடை வெண்பா பல அடிகள் கொண்டு வரும்.

குறிப்பு: எழுதி வருவதை ஊன்றி நோக்கவேண்டும். முன் கூறியதைப் பின் மறத்தல் கூடாது. பாட்டுக்கு இலக்கணம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றியமை யாதது.

- குயில்: சென்னை 15.7.62

தொடரும்

- விடுதலை ஞாயிறு மலர், 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக