பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பார்ப்பனர்களுக்கு வேறு உண்ணல் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு உண்ணல் இடமும்


 

 

 

தஞ்சை ஜில்லா திருவையாறு வடமொழிக் கல்லூரியில் மாணவர்களுக்கு அளிக்கும் இலவசச் சாப்பாட்டு விடுதியில் பார்ப்பனர்களுக்கு வேறு உண்ணல் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு உண்ணல் இடமும் இருந்து வந்தது. தென் இந்திய ரயில்வே உண்டி நிலையங்களில் இருந்து வந்த மேற்கண்டது போன்ற இடப்பிரிவு பெரியார் முயற்சியின் பயனாய் அகற்றப்பட்டபின் தஞ்சை ஜில்லா போர்டாரும் திருவையாற்றில் நீக்கி இருபிரிவினரும் ஒன்றாய் இருந்து உணவருந்தவேண்டுமென்று கட்டளை இட்டனர். அதன் பின் பார்ப்பனர் கூப்பாடு போட்டனர். போர்டார் அதை சட்டை செய்யவே இல்லை. அதன் பின் பார்ப்பனர் மகாகனம் சாஸ்திரியார் உள்பட சர்க்காரிடமும் தூது சென்றனர். சர்க்காரும் சட்டை செய்யவில்லை.

கடைசியாய் சங்கராச்சாரியார் அவர்கள் பார்ப்பனப் பிள்ளைகளை பார்ப்பன ரல்லாதாருடன் ஒன்றாய் இருந்து உண்ணக் கூடாது என்று ஸ்ரீ முகம் விடுத்து, பார்ப்பனரல்லாத மிராசுதாரர்களிடமிருந்தே பிச்சையேற்று தனிப்பட ஆக்கிப் போட, பார்ப்பனப் பிள்ளைகளை தனிப்பட உண்ணச் செய்தார்.

தஞ்சை ஜில்லாவில் பெரிய மிராசுதாரர்களான தோழர்கள் நாடிமுத்து பிள்ளையும், கிருஷ்ணசாமி வாண்டையாரும் ஒரே உறுதியாய் இருந்து இதுவரை அந்த உத்திரவை மாற்றாமல் பார்த்துக்கொண்டு வந்தார்கள்.

ஆனால், இப்போது அவர்கள் எப்படியோ ஏமாந்து போய் அந்த உத்தரவுக்கு விரோதமாய் நடந்து வருகிறார்களாம். அதாவது பார்ப்பனப்பிள்ளைகளுக்கு உண்டான அரிசி, பருப்பு முதலான சாமான்களை ஆக்காமல் கையில் கொடுத்து விடுகிறார்களாம். இது உண்மையாய் இருந்தால் எவ்வளவு வெட்கக் கேடான காரியம் பாருங்கள். இந்த உத்தரவுக்கு மூல காரணமாயிருந்து, ஜில்லா போர்டுக்குத் தீர்மானம் கொண்டு வந்த அங்கத்தினர்களும், மற்ற அங்கத்தினர்களும் துரௌபதை வஸ்திராகபானத்தின்போது பாண்டவர்கள் இருந்ததுபோல் இந்த உத்திரவைப் பற்றிப் பேசாமல் இருக்கிறார்களாம். இது இயற்கைதான். ஏனெனில் ஒவ்வொரு மெம்பருக்கும் தங்கள் தங்கள் தன்னலத்துக்கும் ஒவ்வொரு காரியம் போர்டு தலைவர்களிடமிருந்து பிச்சைவாங்கவும், கேட்கவும் வேண்டியிருக்கும். ஆதலால் அவர்கள் தங்கள் நலத்தைக் கோரி இனமானத்தைக் கைவிட்டிருக்கலாம்.

தலைவர்களுக்கும் அதுபோலவே பல அவசரங்களுக்கும், பல ஆசைகளுக்கும், பல காரியங்கள் பார்ப்பனர்களால் ஆகவேண்டி யிருக்கும். பார்ப்பனர்களுக்கும் யார் யாரை எப்படி எப்படி ஏய்ப்பது, மயக்குவது, அடிமை கொள்ளுவது என்பனவற்றிற்கு வழி கண்டு பிடிக்கவும், நடந்து கொள்ளவும் புராணங்களில் வழிகாட்டி இருப்பவைகள் இன்னின்னவை எனத் தெரியும். இவற்றால் தலைவர்கள் பார்ப்பனர்க்கு கட்டுப்படவேண்டி இருக்கலாம். ஆகவே பார்ப்பனியத்தைக் கொல்லுவதென்றால் அது இப்படிப்பட்ட தமிழர்களுக்கு இளப்பமான காரியமல்ல என்றே சொல்லுவோம்.

தஞ்சாவூர் போர்டின் இந்தக் காரியமானது மதுரையில் அந்த முனிசிபாலிட்டியார் போட்ட இதுபோன்ற உத்திரவும் மாற்றப்படலாம். பிறகு கோவில்கள் சில யாவருக்கும் பொதுவாய்த் திறந்துவிட்ட உத்தரவும் மாற்றப்படலாம். அப்புறம் ரயிலில் போட்ட உத்திரவும் மாற்றப்படலாம். இவைகளும் மற்றும் இவை போன்றவைகளும் இனிச் சாதாரணமாக நடக்கக்கூடியவைகளேயாகும். ஏனெனில் தமிழர் தலைவர்கள் என்பவர்கள் ஒன்று இரண்டு பேர் நீங்கலாக அநேகமாய் யாவர்களும் தோழர்கள் நாடிமுத்து பிள்ளை, கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியவர்களைப் போன்ற வர்களே ஒழிய, பின்னும் பேசப்போனால், செல்வத்தில் செல்வாக்கில் அவர்களை விடத்தாழ்ந்தவர்கள் என்றுகூடச் சிலரைச் சொல்லலாமே ஒழிய மேற்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

தஞ்சை ஜில்லாவில் தமிழர்களில் செல்வவான்கள் செல்வாக்குள்ளவர்கள், படித்தவர்கள், புத்திகூட உள்ளவர்கள் பலர் இருந்தாலும் இவர்களில் ஒருவருக்கொருவர் சிநேகமுள்ள இருவரைப் பார்ப்பது என்பது குதிரைக் கொம்பைவிடக் கஷ்டமான காரியமாகும் என்பதோடல்லாமல் ஒருவரை ஒருவர் ஒழிக்கத் தருணம் பார்ப்பவர்கள் ஆவார்கள். நம்நாடு முழுவதும் இப்படித்தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும். இதற்குத் தோழர் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் தேர்தல் முடிவே சாட்சி. ஆனாலும், இந்த மாதிரி தன்மான உணர்ச்சி கூட இல்லாமல் பார்ப்பனர்களுக்கு தஞ்சாவூர் ஜில்லாபோர்டு முழுவதுமே அடிமையாகி சூத்திரத் தன்மையை ஏற்றுக்கொள்ளுவது என்பது மிக மிக கேவலமான காரியம் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நமது தாழ்வுக்கும் இழிவுக்கும் நம்மவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஆகிறார்களே அல்லாமல் பார்ப்பனர்கள் மீது பொறுப்பு ஏற்றுவதில் பயனில்லை என்பதற்கு இந்தமாதிரி எடுத்துக் காட்டுதல் போறாதா என்று கேட்கிறோம்.

- ‘குடிஅரசு’

- தலையங்கம் - 20.11.1943

- உண்மை இதழ், 1-15.6.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக