- தந்தை பெரியார்
நேயன்
வள்ளுவரின் மூன்று பிரிவு வேறு! வடவரின் நான்கு பிரிவு வேறு!
மற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்’’ என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம- அர்த்த - காம- மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க முடியுமா என்று கேட்கிறேன். காமத்தின் தன்மை என்ன? இன்பத்தின் நிலை என்ன? காமம், கெட்ட குணங்களில் ஒன்று. ஆசை அல்லது ஒரு நோய் (பலவீனம்). காமம் என்பது கண்டவுடன் காட்சி விகாரத்தால் தோன்றுவது. காமம் என்பதானால், கண்ட இடமெல்லாம் கண்டவாறு, மனத்தின் கண்ணே காட்சியளித்து, வெறியையுண்டாக்கி, நேர்மையை அழிக்கத்தக்கது ஆதலால் அதிலிருந்து விடுபட வேண்டும். அதனால் பெரிதும் கேடுதான்- அழிவுதான் பயனாக இருக்க முடியும்.
ஆனால் இன்பமும், அன்பும் அப்படியல்ல. அவை என்றும் நீடித்திருப்பது- இருக்க வேண்டியது. காமத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றதேயாகும். எனவே வள்ளுவர் வகுத்த இன்பத்துக்கு கேவலம் காமத்தை ஒப்பாகச் சொல்வது, ஒட்ட முயற்சிப்பது அறிவுக்கோ, அனுபவத்துகோ ஏற்றதல்ல என்றே கூறுவேன். அன்பைப்பற்றி வள்ளுவர் தனிப்படக் கூறியிருக்கிறார்.
இவ்வாறாகவுள்ள திருக்குறளைச் சிலர் தங்களது சொந்த நலனுக்கும் ஆதிக்கத்துக்கும் ஏற்றவாறு, குறுகிய மனப்பான்மையில் வியாக்கியானம் செய்தும் உரை எழுதியும் வருகின்றனர். இந்தப் பித்தலாட்டங்களை யெல்லாம் ஒழிக்கவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பேரறிஞர்கள், காவலர்கள், பேராசிரியர் களுடையதல்லவா?
இன்பம் என்பதைக் காமமென்பதனோடு ஒப்பிட்டுக் கூறுவதை நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ, எப்படி அறிவுக்கு ஏற்றுக் கொள்ளத் தகாததாயிருக்கின்றதோ அதே போன்று, வீடு - மோட்சம் என்பதையும் தமிழர்கள் ஒப்புக்கொள்ள முடியாததாகும். வள்ளுவர் வகுத்திருக்கும் “அறம், பொருள், இன்பம்’’ என்கிற மூன்றின் மூலமாக, மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்கு அவர் வழி வகுத்து விட்டார். அறம் என்பது மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய மனிதனின் ஒழுங்குமுறை - கடமை. பொருள் என்பது மனித வாழ்க்கைச் சாதனம். இன்பம் என்பது மனிதன் அனுபவிக்கும் நற்பேறு. இந்த அடிப்படையில் இந்த மூன்று பிரிவைத் தவிர, நாலாவது பிரிவு என்று சொல்லப்படுகிற மோட்சத்தைப் பற்றியோ, மறு பிறவி, முன் ஜன்மம், காமம் என்பவைகளையோ குறளில் காணவேமுடியாது.
“கடவுள் எப்பொழுது உருவம் பெற்றதோ, அப்பொழுதே கேடும் உருவானது!’’
சமதர்ம ஞானி வள்ளுவர்!
வள்ளுவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்மவாதியாவார் என்றுகூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடமையின் அடிப்படையை நாம் குறளில் காண முடிகிறது.
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான்’’ என்று ஒரு குறளில் கூறுகின்றார். “ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டிய நிலையிருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஓழி!’’ என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். மக்களை _- உலகத்தைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றோ, அப்படி அவன் இருப்பதனாலும் மக்கள் நடத்தைக்கும், கருத்துக்கும், தன்மைக்கும், பண்புக்கும் அவனேதான் காரணமானவன் என்றோ, அவர் எங்கும் கருதினதாகவோ, நமக்குக் காட்டுவதாகவோ குறளில் சொல்லவே இல்லை. இதிலிருந்து வள்ளுவரின் கடவுள் தன்மை, எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறியக் கூடும். குறளுக்கீடான பொதுவுடைமை சமதர்மக் கருத்து, வேறு எந்தத் தமிழ் நூலில், எங்கிருக்கிறது? எவ்வளவு தலைகீழ் மாறுதல்! ஆகவே ஆரியத்தை - மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட, வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது. மேலும் வள்ளுவர், பொதுநலத் தொண்டு ஆற்றுவதின் மேன்மையை மிக மிகச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறுகிறார்.
குறளில், மக்களின் நல் வாழ்க்கைக்கும், நல்லாட்சிக்கும், மக்கள் பூரண மனிதத் தன்மையையடைவதற்கும் ஏற்ற வழிவகைகள் குவிந்து கிடக்கின்றன. உலகக் கேடுகள் ஒழிவதற்கும் வழிவகை குறளில் இருக்கின்றன. ஆரிய மத நூல்களில், அவர்களது கடவுள் தன்மை எனக் கூறப்படும் புராண இதிகாசங்களில் இவைகளுக்கு மாறுபாடான கருத்துக்களே மலிந்து கிடக்கின்றன. ஆதலால் தான் குறளைப் படியுங்கள், ஆரியநீதி நூல்களை- கோட்பாடுகளை அறவே விலக்குங்கள் என்று வற்புறுத்திக் கூறிவருகிறோம்.
திருவள்ளுவர் தலைசிறந்த சமுதாயவாதி ஆனதால்தான் ஒரு துறையையும் பாக்கி விடாமல் சகலத்தையும் தொகுத்துக் கூறியிருக்கிறார். திருக்குறள் முனிசாமி அவர்கள் சொன்னார்கள். “அறிஞன் சொல்கிறானே என்றுகூட நம்பிவிடாதீர்கள். அவனிடத்தும் குறைபாடுகள் உண்டு’’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு அறிவு இருக்கிறது. திருவள்ளுவரைவிட அதிக அனுபவமும் உங்களுக்கிருக்கிறது. திருவள்ளுவர் கண்டிராத ஒலிபெருக்கியை நீங்கள் காண்கிறீர்கள். அவர் பேசியறியாத டெலிபோனில் நீங்கள் பேசுகிறீர்கள். அவர் கேட்டறியாத வானொலி இசையை நீங்கள் கேட்கிறீர்கள். அவர் பார்த்தறியாத படக் காட்சிகளை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆகவே அவரைவிட உங்களுக்கு அனுபவம் அதிகமாய்த்தானே இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் அவரை இழிவுபடுத்துகிறேன் அல்லது அவர் கால மக்களைத் தாழ்வுபடுத்துகிறேன் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். அந்தக் காலத்திய அறிவாளிகளில் அவர் பெரிய அறிவாளிதான்; அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசிதான். ஆழ்ந்த அறிவு படைத்தவர்தான். ஆகவேதான் அவரால் எல்லா காலத்திற்கும் பொருந்தும்படியான சில உண்மைகளைக் கூற முடிந்திருக்கிறது. இன்றுள்ள அநேகம் அன்றில்லை. அன்று இவை தேவைப்படவும் இல்லை. மின்சாரம் அன்றில்லை. அணுகுண்டும் அன்றில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனித சமுதாயத்துக்கு எவை தேவைப்படவில்லையோ அவை நமக்குத் தேவைப்படுகின்றன. அதுபோல் அவர்களுக்கு எவை மிகவும் தேவைப்பட்டனவோ, அவை நமக்கு மிகவும் தேவையற்றனவாகிவிட்டன இன்றுள்ள அறிவு நிலையில் நாம் ஒவ்வொரு தேவையையும் சிந்தித்துப் பார்க்கிறோம். வாழ்க்கையை வளம்படுத்துவன எவை, வாழ்க்கையைக் கெடுப்பன எவை என்று சிந்தித்துப் பார்க்கிறோம். வளம்படுத்தக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு, கேடு செய்ய கூடியவற்றைத் தள்ளி விடுகிறோம். இன்று தேவையாக இருப்பவை நாளை தேவையற்றுப் போகும். இன்று சிலாமணியாகும் கொள்கைகள், நாளை சிலாமணியாகாமல் போகலாம். இதுதான் உண்மைத் தத்துவம், இதுதான் அறிவு வளர்ச்சித் தத்துவம்.
(தொடரும்...)
- உண்மை இதழ், 16-31.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக