பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? - 5

பாக்கியம்
இது வடசொல் அன்று! வடசொல் அன்று!! பயன் கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன் கொழிக்கும் மருதநிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்கம் என்பது அங்கு தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல் -_ ஓவம். ஓவியம் என்பதைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச்சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம். செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று நினைவிற் கொள்க!
(குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)
கோட்டி
இதைக் கோஷ்டி என்ற வடசொற் சிதைவென்று தமிழர் பலர் எண்ணுவதாய்த் தெரிகின்றது. இது நேர்மாறான எண்ணம். கோட்டி என்ற தூய தமிழ்க் காரணப் பெயரை, வடசொற்காரர் கோஷ்டி என்று சொல்லி வருகின்றார்கள். வேட்டி, முட்டி என்ற தமிழ்ச் சொற்களை வேஷ்டி, முஷ்டி என்று சொல்லிக் கொள்வதுபோல.
கோள்_-கொள்கை: த் எழுத்து பேறும் இ வினை முதற்பொருள் இறுதி நிலையும் பெற்றுக் கோட்டி என முடிந்தது. கொள்கை உடையது, என்பதால் காரணப் பெயர். ஒரு கோட்பாட்டைக் கொண்ட கூட்டத்தைக் குறிப்பது. நாளடைவில் பொதுவாகக் கூட்டத்தையும் குறிப்பதாயிற்று.
கருப்பம்
இது கர்ப்பம் என்ற வட சொல்லின் சிதைவென்பார் வடசொல் வெறியர். கரு, கருப்பம், கார் என்பன கருமை எனப் பண்புப் பெயரடியாய் வருவதை காரணம் என்பது பொருள் கருப்பம் என்பது மை ஒழிந்த கரு, பம் என்ற பண்புப்  பெயர் இறுதிநிலை பெற்றது. நன்மை என்பது நலம் ஆனது காண்க. கார் என்பது தனியாய் நின்று காரணப் பொருள் தருவதில்லை. காரணம் என்பதில் முதனிலையாய் நின்று அப்பொருளைத் தரும்.
(குயில்: குரல்: 1, இசை: 30, 23-12-58)
கூகை
இது கூகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறி வருகின்றார் வடவர். இது பொருந்தாப் புளுகாகும். கூ கூ என்று கத்தலால் கூகை என்றும், கூகம் என்றும் சொல்லப்படும். தூய தமிழ்க் காரணப் பெயர். இது போலவே காகா என்று கத்தலால் காகா, காக்கா, காக்கை, காகம் என்றெல்லாம் காரணப் பெயராக வழங்குவதையும் நோக்க வேண்டும்.
பேது
இது பேதம் என்ற வடசொற் சிதைவென்று வை. மு. கோ. கம்பராமாயண உரையில் கூறியுள்ளார். பேதைமை என்பதன் அடியாக அமைந்த பெயர்ச்சொல் வேற்றுமையைக் குறிக்கும் போதும் என்க. இது பேதை என்றும் பேதைமை உடைய அய்ம்பாற் பொருளைக் குறிக்க வரும். வடமொழயில் பேதம் என்பது தமிழினின்று அவர்கள் எடுத்துக் கொண்டதேயாகும்.
மாணவன்
மாண் பெருமை. அகரச் சாரியையும் அன் ஆண்பால் இறுதிநிலையும் பெற்று மாணவன் ஆயிற்று இதுவே மாணாக்கன் என்றும் மான்+ஆக்கு+அன் பெருமையை உண்டாக்கிக் கொள்பவன் என்று விரித்தும் பொருள் கொள்க! மாணவகன் என்றது வடமொழி என்றும், அதன் சிதைவுதான் மாணவன் என்றும் தமுக்கடிக்கின்றதாம் ஆகாஷ்வாணிக் கூட்டம்.
(குயில்: குரல்: 1, இசை: 31, 30-12-58)
தறை
இது தரா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு வை. மு. கோ. சடாயு உயிர் நீத்த படலம் 73ஆம் செய்யுள் உரையில் கூறினார். இதில் வியக்கத்தக்கது தாரா என்பதை வடசொல் என்று இயம்பியதேயாகும். தரை என்பது தருதல் (ஈனுதல்) என்று பொருள்படும் தொழிற்பெயர். தா என்ற முதனிலை தரு என வேறுபாடுற்றது. வா என்ற முதனிலை வரு என வேறுபாடுற்றது போல, தரு என்ற முதனிலை ஐ என்ற தொழிற்பெயர் இறுதிநிலை பெற்றுத் தரை ஆயிற்று. தருதல் என்பது தல் இறுதிநிலை பெற்றது.
தரை உயிர்த் தொகுதியை ஈனுவது தருவது ஆகிய நிலத்துக்கு ஆனது _ தொழிலாகுபெயர்.
எனவே, தரை தூய தமிழ்க் காரணப்பெயர். தறை என்ற சொல்லுக்கும் தரை என்ற சொல்லுக்கும் தொடர்பே இல்லை. தறை (தறா+ஐ) உறுதி பெறுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயரே. அத்தொழில் பொருளுக் காவதால் தறை தொழிலாகுபெயர் என அறிதல் வேண்டும்.
தரை என்ற தமிழ்ச் சொல்லையே வடவர் தரா என்று திரித்தார்.
(குயில்: குரல்: 1, இசை: 32, 6-11-1959)
-உண்மை இதழ், 1-15.4.16
மனிதர்
இது மனுஷ்யர் என்பதன் திரிபாம். மனு என்பவரின் வழிவந்த காரணத்தால் அப்பெயர் வந்ததாம் எனப் பலவாறு கூறி இடர்படுவார். மனு தோன்றுவதற்கு முன்னும் மன், மன்னுதல், மனம், மானம் என்று வேரும் வினையும் இருந்தன, என்று தோன்றுகின்றது. ஆரிய மறை தோன்று முன், மனு என்ற சொல் இல்லை என்பதால், தமிழன் மன் என்பதை வைத்தே மனுச்சொல் ஆக்கப்பட்டது எனல் வேண்டும்.
மனிதன், மனுசன், மானுயன், மானிடன், மனித்தன் அனைத்தும் மன் என்பதன் அடியாகப் பிறந்தனவே யாகும்.
மன் என்பதற்கு, நிலைதல், உயர்வு என்பன பொருள். மனிதன் மற்ற விலங்கு பறவை முதலியவற்றினும் உயர்வுடையவன் என்பதன் காரணத்தால், மனிதன் எனப்பட்டான்.
மன் முதனிலை, ‘இ’ சாரியை. ‘த’ எழுத்துபேறு. அன் ஆண்பாற் பெயர் இறுதி நிலை என்பது உறுப்பிலக்கணம்.
(குயில்: குரல்: 1, இசை: 32, 6-11-959)
விருத்தம்
இதையும் வடமொழி என்றே பேசியும் எழுதியும் வருகின்றார்கள் வடமொழிக்காரர்கள்.
புதுமை என்ற பொருளுடைய விருந்து விருத்து என இடை த், ந் என வலிந்து, அம் சாரியை பெற்று விருத்தம் ஆயிற்று.
சங்க காலத்தில் விருத்தம் இருந்ததில்லை. அதன்பின் புதிதாக வந்ததால் விருத்தம் எனப்பட்டது.
எனவே விருத்தம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
தூது
இது வடசொல்லா என்று கேட்டு அஞ்சல் எழுதியுள்ளார் ஒரு தோழர்.
தூவல், தூதல், தூது இவையனைத்தும் ‘தூ’ என்ற முதனிலையுடைய தொழிற்பெயர்களே. முறையே இவற்றில் உள்ள அல், தல், து ஆகியவை தொழிற் பெயர் இறுதி நிலைகளே
தூது எனில் பொருள்? ஒருபாற் கருத்தை மற்றொரு பால், சென்று தூவுவது என்பதே.
இது ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தூதன், தூதுவன் எனவரும். அம் சாரியைப் பெற்றுத் தூதம் எனவும் வருவதுண்டு. தூதி பெண்பால். எனவே தூது தூய தமிழ்க் காரணப் பெயர்.
சுவர்க்கம்
இது துறக்கம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர்ச் சொல்லின் சிதைவு. அவ்வாறு வடவர் சிதைத்து எடுத்தாண்டார்கள். நம் பழந்தமிழ் இலக்கியத்தினின்று.
துறக்கம் - --விட்டநிலை, உள்ளத்தின் நிலை, ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள். எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம். பரனை நினைத்த இம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு, என்ற நம் ஔவை மூதாட்டியார் அருளிய செய்யுட் பொருளை உற்றுக் காண்க. குடும்பத் தொல்லையைத் துறந்த உள்ளப் பாங்கே துறக்கம் என்றான் தமிழன். இந்திரன் முதலியவர்க்குக் கள்ளையும், ஆட்டையும், மாட்டையும் கொடுத்துப் பெறுவதோர் மேலுலகம் என்றும் அதைச் செத்த பிறகே அடைய முடியும் என்றும் ஆரியர் புரட்டை ஒத்துக் கொள்ளாதவன் தமிழன்.
இன்னும் அறிய வேண்டுவது, அதாவது நினைவில் வைக்க வேண்டியது, தமிழன் இந் நாட்டில் என்றும் உள்ளவன். அவன் அன்றே நன்று வாழ்ந்தவன். ஆரியன் தமிழினிடத்தினின்றே பிச்சை எடுத்திருக்க வேண்டும்.
ஏன் இதை இவ்வளவாய் விடுத்தோம் எனின், கம்பராமாயணத்துக்குப் பொருள் கூற வந்த ஒரு பார்ப்பனப் பேதை, துறக்கம் சுவர்க்கம் என்ற வடசொல்லின் சிதைவு என்றாள். பொந்து தேடி ஓடிவந்த ஆரியக் குரங்கு பொன்னாடை கட்டி வந்தது என்பதை நிகர்க்கும் இது.
(குயில்: குரல்: 1, இசை: 34, 27-1-1959)
-உண்மை இதழ், 16-30.4.16, 

தேவர்

இது வடசொல் அன்று. தெவ்வுப் பகையாகும் என்ற (தொல். உரி. 349) செய்யுளால் தெவ் என்பது பகை என்ற பொருளுடையது என்பதை அறிக! தெவ் என்பது முதனீண்டு அர் இறுதிநிலை பெற்றது. எனவே தேவர் எனில் பகைவர் என்பதே பொருள். தெவ் என்பதே தே என்றும் தேவு என்றும் வருவதுண்டு. தேவன் என்பது ஆண்பால் ஒருமை, இதன் பெண்பாலே தேவி என்க. தேவி என்பது கூட வடமொழியென்றே ஏமாற்றுவர். தே என்பது அப்படித்தானாம்!

தேவன் பகைவனா- - தேவர் பகைவரா என்ற வினாவுக்கு விடை காண்போம்.

அறிவு நிரம்பாத நாளில் மழையையும், வெயிலையும், காட்டாற்றையும், காட்டு கனலையும் தெவ் என்றும் தெய் என்றும் நேரிட்டு அழைத்தான் தமிழன். அறிவு பெற்ற நிலையில் அவற்றின் அருமை தெரிந்து அதனை வாழ்த்தலானான். தெய் என்றும் தெவ் என்றும் கூறி வெறுத்த செங்கதிரையும், திங்களையும் செங்கதிர் போற்றுதம், திங்களைப் போற்றுதும் என்றெல்லாம் கூறியது கேட்டோமன்றோ தெவ் என்பதன் அடியாகப் பிறந்த தேவன், தேவர், தே, தேவு என்பன கண்ணையும் மனத்தையும் கவர்வனவற்றையும் பயன்படு பொருள்களையும் குறிப்பனவே என அறிவோம். எனவே, இது தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 1, இசை: 35, 3-2-59)

அவி

அவிதல், அவியல் என்பனவற்றின் முதனிலைத் தொழிற் பெயரே அவி என்பது. வேவுதல் என்பது இதன் பொருள்.

இனி, அவி என்பது தொழிலாகுபெயர். வேவுதல் உடைய ஒரு பொருளைக் குறித்தது. அந்த வேவற்பொருள் எது? தேவர் உணவு என்று மழுப்பற் பொருள் கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆரியச் சார்பினர். ஆடுமாடுகளின் ஊன் என்றும், நிணம் என்றும் வெளிப்படையாகவே கூறுவார்கள்?

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற குறட்பாவுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர், அவி என்பதற்கு நெய் முதலியவைகள் என்று கூறி மழுப்புகின்றார். கொலை வேள்வியும், தம் இனத்தார்க்கு உள்ள புலால் வெறியும் பரிமேலழகர்க்கே நாணத்தை உண்டாக்குகின்றன. வெளிப்படைப் பொருளை அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்!

கா. சுப்பிரமணியனார் (எம்.எல். பிள்ளை) திருக்குறள்- - --பொழிப்புரையுள் அவி என்பதற்கு ஊன் என்றே பொருள் கூறியருளியுள்ளார்.

ஆட்டைப் பல பார்ப்பனர் அமிழ்த்திப் பிடித்துக் கொள்வார்கள். அதன் விதையைப் பிசைந்து உயிர் போக்குவார்கள். மற்றும் சில கொலைகாரப் பார்ப்பன பசங்கள் எதிரில் உள்ள தீயில் அதை எடுத்துப் போடுவார்கள். அந்த ஆட்டின் நிணமே- - -கொழுப்பே அத் தீயை மூண்டெழச் செய்கின்றது. அந்த நிணத்திலேயே அந்த ஆட்டுடல் வேகுகின்றது. இந்தத் திருப்பணியில் பெரிதாக எண்ணப்படுவன இவ் விரண்டுமே! ஒன்று தீ எரியச் செய்கின்றது நிணம். கறியை வேகச் செய்கின்றது நிணம் என்பது மற்றொன்று. இவைகளைக் கருதித்தான் அவி “சொரிந்து” என்றார் வள்ளுவர்.

இனி, அவி என்ற சொல்லை வடமொழி நூற்களிற் கண்ட சில தமிழ் விபூடணர், இது வடமொழிச் சிதைவென்று கூறி மானமிழப்பர். தமிழ் நூலில், தமிழ் நாட்டில் அவி எனக் காணும் தமிழர்

தமிழிலக்கணத்தால்-தமிழ்மனத்தால் அச் சொல்லை நோக்க வேண்டுமேயன்றி ஆரியமனத்தினின்று நோக்குவது என்ன காலக்கோளாறோ நாம் அறியோம். எனவே, அவி தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 37, 17-2-59)

வாவி

இது வாபீ என்ற வடசொல் என்று கூறுவர். ஏமாறுகின்றவர் இருக்கும் வரை ஏமாற்றுகின்றவர் இருப்பர்.

வாவுதல் - --பரவுதல், தேங்குதல் என்று, வாவுதலையுடையது வாவி.
எனவே, வாவி தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 40, 10-3-1959)
-உண்மை இதழ், 1-15.5.16, 
பலி
வாய் என்பதன் அடியாகப் பிறந்த வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உண் என்பதன் அடியாகப் பிறந்த உண்மைபோலவும், கண் என்பதன் அடியாகப் பிறந்த கணம் போலவும், பல் என்பதன் அடியாகப் பிறந்தது பலி என்று அறிக. பலி- - --பல்லினால் வலிந்து உண்ணத் தகும் உணவுக்கும் நாளடைவில் பல்வகை உணவுப் படையலுக்கும் வழங்கிற்று.
முதலில் விலங்கு முதலியவற்றை மூடவழக்கத்தால் தெய்வப் படிவங்களில் முன் வைத்து வெட்டிக் கொலை புரிந்தார்கள். அதை தெய்வங்களே நேரில் பல்லினால் கடித்து உண்டதாக சிறப்புறுத்தினார்கள்.
பின்னர் நாகரிகமிக்க தமிழர்களின் வெறுப்புக்கு அஞ்சி, தெய்வத்துக்குத் தருவன எவற்றையும் பலி என்ற பெயராலேயே கூறத் தொடங்கினர் ஆரியப்பாவிகள். எனவே, பலி தூயத் தமிழ் காரணப் பெயர் என்று கடைபிடிக்க!
(குயில்: குரல்: 1, இசை: 39, 3-3-1959)
தாமரை
இது தாமரசம் என்ற வடசொல்லின் சிதைவென்று ஏதுங் கெட்ட வடமொழியாளர் இயம்பி மகிழ்வர்.
மரு என்றால் தமிழில் மணத்திற்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி நிலையை முற்று அற்று ஒரோ வழி என்ற இலக்கணத்தால் மரையாயிற்று. மரை மணமுடையது. அதாவது மலர். அது இனம் விளக்க தாம் என்பதைப் பெற்றுத் தாமரை என வழங்கும். மரை என்றே வழங்குவதும் உண்டு. தாம் என்பதன் பொருள் என்ன எனில் அஃது தரவு என்பதன் ஈற்றுயிர் மெய் கெட்ட பெயரெச்சம். கொடி நீண்டது அன்றோ தாமரை! கொடி நீட்சியால் அயலிடம் தாவுகின்ற பூ! எனவே
தாமரை.தாமரை தூய தமிழ்க் காரணப்பெயர். இதைத் தாமரசம் என எடுத்தாண்டனர் வடவர் என அறிதல் வேண்டும்.
துளசி
இது துழாய் என்ற தூய தமிழ்ச் சொல்லின் சிதைவு. இவ்வாறு சிதைத்து எடுத்தாண்டனர் வடவர்.
இந்த திருட்டு அவர்களிடம் நிலைத்து விடவே, இன்று துழாய் என்பதே துளசியினின்றும் வந்தது என்கின்றனர். துழாய் இருக்க, அவர்களால் ஒலி மாற்றம் செய்யப்பட்ட துளசி என்ற சொல்லை நாம் ஏன் எடுத்தாள வேண்டும்.
துழா - --பரவுதல். மணம் பரவுதல் என்க.
ய். பெயர் இறுதிநிலை.
(குயில்: குரல்: 1, இசை: 40, 10-3-1959)
இலட்சம்
இது இலக்கம் என்ற தூய தமிழ்ச் சொற் சிதைவு. ஒன்றினும் ஒளியுடையது பத்து, பத்தினும் ஒளியுடையது ஆயிரம். ஆயிரத்தினும் ஒளியுடையது பத்தாயிரம், பத்தாயிரத்தினும் ஒளியுடையது நூறாயிரம். ஒளி - --புகழ், கவர்ச்சி அடையத் தக்கது.
எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம். இலக்கம் என்பது அம் சாரியையின்றி இலக்கு என நிற்பதும் உண்டு.
லட்சம் என்ற வடசொல்லினின்று இலக்கம் வந்தது என்று ஏமாற்றுவார். சொற்கள் கான்றுமிழத்தக்கவை.
தமிழன் வடசொற்காரர் சிதைத்தபடி, லட்சம் என்றோ இலட்சம் என்றோ எழுதாமல் இலக்கம் என்ற சிதையா தூய தமிழ்க் காரணப் பெயரையே எழுதுக. பேசுக.
கோடி
இதையும் வடசொற்காரர் வடசொல் என்று கூறிப் பிழைப்பர். எண்ணின் உச்சி என்பது பொருள். ஆதலின் கோடி. (நூறு இலக்கம்) தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 43, 17-3-1959)
மலம்
இது வடசொல் அன்று. மல மல என்பது ஒலிக்குறிப்பு. மலம் கழித்தற் காலத்தில் ஏற்படுவதன்றோ மலமல என்பதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயரே மலம் என்பது. சல சல என்ற ஒலிக் குறிப்புச் சொல்லினடியாகச் சலம் தோன்றியதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதை வந்தவர் எடுத்தாண்டனர்.
(குயில்: குரல்: 1, இசை: 43, 24-3-1959)
-உண்மை இதழ், 16-31.5.16, 
ஆயுள் 

இது ஆயுசு என்ற வடசொல்லின் சிதைவென்றுசொல்லி ஏமாற்றி வருகின்றனர் வடவர். அவ்வாறே ஏமாந்து கிடக்கின்றனர் தமிழர்.
ஆயுள் என்பது ஆவுள் என்பதன் மரூஉ. ஆவுள் - -உள் என்னும் தொழிற் பெயர் இறுதி நிலை பெற்ற ஆதல் என்னும் பொருட்டாய தொழிற் பெயரேயாகும். இதை வந்தவர் எடுத்தாண்டனர்.
வாழ் நாள் ஆய்க்ª£ண்டே - -கழிந்து கொண்டே போவது என்ற காரணம் பற்றி வந்தது ஆயுள் என்பது.
எனவே, ஆயுள் தூய தமிழ்க் காரணப் பெயரே.

பசு

இதையும் வடசொல் என்றே நம்புகின்றனர். படித்த தமிழரும். பசைதல் என்னும் சொல்லுக்கு அன்புறுதல், ஒட்டுதல், பொருளுட்டமுடைமை என்பன வெல்லாம் பொருள். பால் என்னும் பொருளுட்ட முடையது பசு - பசை பண்புப் பெயர், அதன் முதனிலையாகிய பசு என்பதில் இறுதிநிலை. ‘இ’ புணர்ந்து கெட்டதென்க.
பசு வென்ற தமிழ்க் காரணப் பெயரை வடவர் எடுத்தாண்டனர். தட்டிக் கேட்க ஆள் இல்லாதபோது தம்பி! தடபுடல் செல்லுமன்றோ!
(குயில்: குரல்: 1, இசை: 43, 24-3-1959)

பதம்

இது வடசொல்லன்று. பகுதலின் மரூஉவாகிய பதல் என்பதன் அடியாகிய பது, அம்முச்சாரியை பெற்றுத் தகரத் தொகுத்தல் உற்றது. பதம் சிறப்பாய் உயர் பதத்தைக் குறிக்கும் - --ஒரு நிலையினின்று மற்றொரு நிலையடைந்த ஒன்றையும் குறிக்கும். பதம் சோற்றுக்கும் பெயர். சோறு நிலைதிரிந்ததன்றோ. மற்றும் இடம் இன்பம் முதலியவைகளைக் குறிக்கும்போதும் இவ்வாறே காரணம் அறியப்படும். எனவே பதம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
இதை வடவர் தமிழினின்று எடுத்-தாண்டனர்.

கலசம்

கலயம் என்ற தமிழ்ச் சொல் கலசம் என வடவரால் திரிக்கப்பட்டது. எனவே கலயம் என்பதினின்று கலசம் தோன்றியது.
கல்+அகம்=கல்லகம். இதன் மரூஉ கலம். கல்+அகடு=கலடு. கன்னிலம் ஆனது நோக்குக. கலம் இடை யகரம் பெற்றுக் கவசம் ஆனது. கல்லைக் குழிவு செய்தது கலம், கலயம் என்று காரணம் கண்டுகொள்க. குழிவு கல்லைக் குழிவு செய்தது என்ற இடத்துப் போல, கல்லை என்பதும் கல்லியது என்ற பொருள் அமைந்ததே ஆகும். வடவர் திரித்ததால் நாம் அதை மேற்கொள்ள வேண்டா. கலயம், கலம் என்றே எழுதுக.

குண்டம்

தூய தமிழ்க் காரணப் பெயரே, தமிழினின்று வடவர் எடுத்தாண்டனர், ஓமகுண்டம் என்பதில் காண்க.
குண்டு - --குளம் அதுபோல அமைந்தது, குண்டை - --குண்டுசட்டி, குண்டான், குண்டம்! குண்டம்- - -ஆழக்கல்லிய இடம்.
(குயில்: குரல்: 1, இசை: 43, 31-3-59)

சூது

இது வடசொல் அன்று. தூயதமிழ்க் காரணப்பெயர். சூழ் வினை முதனிலை, தல் என்ற தொழில் இறுதிநிலை பெற்றுச் சூழல் என்றும், வு என்ற தொழிலிறுதி நிலை பெற்றுச் சூழ்து என்றும் வரும். எனினும் சூழ்தல், சூழல், சூழ்து அனைத்தும் பொருளால் ஒன்றே.

சூழ்து - ---விரகு (உபயம் என்பர் வடசொல்லார்) சூது, இடைக்குறை. எனவே சூது விரகால் பிறர் பொருள் பறித்தல் என்பது. சூது, அம்சாரியைப் பெற்றுச் சூதம் எனவும் வருவதுண்டு. குன்று குன்றம், மன்று மன்றம் என்பவற்றைப் போல.

இனிச் சூழ்து என்பது சூது என இடையிலுள்ள ‘ழ்’ இல்லாதொழிந்தது எப்படி எனில், அது இடைக்குறை என்னும் தமிழிலக்கணம். போழ்து என்பது போது என்று ஆனது போல.
எனவே சூது தூயதமிழ்க் காரணப்பெயர். வடநூலில் வரும் ‘த்யூத்’ என்பதன் திரிபல்லவா சூது என்று கேட்பது முடிச்சு மாறித்தனம் எனவிருக்க.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)
-உண்மை இதழ், 1-15.6.16, 
தமிழ்
‘யாம் வந்தவர் மொழியா, செந்தமிழ்ச் செல்வமா?’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வரும் ஆராய்ச்சி பற்றி அடிக்கடி அஞ்சல்கள் வருகின்றன. அவையனைத்தும் நம் தமிழர்களா-லேயே எழுதப்பட்டவையாகும்.
அவ்வாறு தம் தமிழர்கள் எழுதும் அஞ்சல்களில் காணப்படுவன பெரும்பாலும், அவ்வாரியன் இவ்வாறு தங்கள் சொல் விளக்கத்தை வெறுத்தான், அப் பார்ப்பான் இப்படி மறுத்தான் என்பனவேயாகும்.
சிறுபான்மையாக, இன்ன தமிழ்ப் புலவர் முன்னமே இப்படி எழுதியிருக்கிறார். இன்ன பேராசிரியர் இப்படி முன்னமே எழுதியுள்ளார். அவைகள் அனைத்தும் உங்கள் கருத்துக்களை எதிர்க்கின்றன என்பனவேயாகும்.
ஆயினும், எந்த ஆரியனும், எந்தப் பார்ப்பானும் எமக்கு நேரில் எந்த மறுப்பை-யேனும் தெரிவிக்கத் துணிந்தானா எனில், இல்லவே இல்லை.
எந்தத் தமிழ்ப் புலவராவது, எந்தத் தமிழ்ப் பேராசிரியராவது  தம் நிலையில் நின்றோ, பார்ப்பனரைச் சார்ந்து நின்றோ நம் ஆராய்ச்சிகளை மறுத்துள்ளார்களா எனில், இல்லவே இல்லை.
சிங்கையிலிருக்கும் ஒரு பார்ப்பனக் கீழ்மகன் தன் அண்டையிலிருக்கும் தமிழனை நெருங்கி, அந்தத் தமிழனின் மூளையைக் குழப்பினாலே போதும் என்று கருதி, இன்ன சொல் தமிழ்ச் சொல்லன்று, அது ஆரியமே என்பான்.
ஏனடா பார்ப்பனனே! உனக்கென்னடா தெரியும். தெரிந்தால் காரணத்தோடு மறுப்பு எழுதடா என்று கேட்க நம் தமிழனுக்கும் போதிய துணிவும் கையிருப்பும் இருப்பதில்லை, இது வருந்தத்தக்கது. தமிழ்ப் புலவர்களும், பேராசிரியர்களும் இன்று எதை அடைந்து மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள் எனில் அது சிறை அன்று! அண்ணாந்தாள்!
எனக்கு நான் தலைவன், எவனுக்கும் நான் கட்டுப்பட்டேனில்லை. ஆழத்தில் புதைக்கப்-படுகின்ற என் அன்னைக்குத் -  தமிழுக்கு நான் தொண்டு செய்வதில் என்னவரினும் அஞ்சேன் -  இஃதோர் பெரும்பதம். இதை நம் தமிழ்ப் புலவர்கள், பேராசிரியர்கள் அடைந்தால் அந்த நாள் தமிழகத்தின் மீட்சி நாளாகும்.
‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்பது கொட்டை எழுத்தால் அமைந்த தலைப்பு, தலைப்பே பிழை. இந்தத் தலைப்புடைய நூலோ அதற்கு முன்னிருந்த ஓர் ஆரிய நூலின் பார்த்தெழுதல். இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இருந்ததில்லை. ஆனால் நேரு பல்லாயிரம் வெண்பொற் காசுகளை இதற்குப் பரிசாக வழங்கினார். ஏன்? எழுதியவரின் மகள் காந்தியின் மருமகள்.
இங்குத் தமிழ்ப் புலவர், பேராசிரியர் என்ன நினைக்கின்றனர். பார்ப்பானை மகிழப் பண்ணினால் பரிசு கிடைக்குமே என்பதுதான். எடுத்துக்காட்டாக இதைக் கூறினோம். தமிழ்ப் புலவர், பேராசிரியர் அண்ணாந்தாளைக் காண்க! ஆயினும் தமிழருக்கு எந்த பார்ப்-பானாலும் அண்ணாந்தாள் பூட்டிவிட முடியாது. தமிழரே அதை ஆக்கி அணிந்து கொண்டு பணிந்து செல்கின்றார்கள்.
ஆரிய மறையிலேனும் அதன்பின் வந்த காளிதாசன், பாரவி செய்த இராமாயணம், கிருதார்ச்சுனியத்திலேனும் மற்றெந்த நூல்களி-லேனும் பெரும்பான்மைத் தமிழ்ச் சொற்களே யன்றித் தனியாரியத்தைக் காண முடியாது என்ற உண்மை எம் தமிழ்ப் புலவர்க்கும், பேராசிரியர்க்கும் தெரியும். ஆனால், அதை இன்றளவும் உரக்கக் கூறியவர்கள் உண்டா எனில் இல்லவே இல்லை. மறைமலையடிகளும் சைவம் எனும் ஒன்றுக்கு அடிமைப்பட்டு சில உண்மைகளைக் கூறாமல் இருக்கின்றார்.
இன்றைய நிலைமை வேறு, அது தமிழர் வாழ்வதா? சாவதா? என்பதாகும்.
இந்நிலையிலும் தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் விழிகள் திறக்க முடியாமலிருக்-கலாம். தமிழர்கள் சாகத் துணிய வேண்டும், அதனால் வாழ்வை நிலை நாட்ட வேண்டும். தமிழனின் கண்ணும் கருத்தும் தமிழின் வேரை நோக்கட்டும்! அதன் பழமையைப் பார்க்கட்டும், தமிழன்றி இந்த நாவலந்தீவில் எது மொழி? - எத்தனை மொழிக்கு?-எந்தெந்த நாட்டு மொழிக்கு நம் தமிழ், தாய்? என்பதை எண்ணட்டும்.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)
-உண்மை இதழ், 16-30.6.16, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக