நேயன்
பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தோழர்களே!! தாய்மார்களே!!
இம்மாநாடு திருவள்ளுவர் பேரால் கூட்டப்பட்டிருப்பதையொட்டி, திருவள்ளுவர் பற்றியும் அவரது குறளைப் பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் நம் பெருமையை, திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத்தான் புரியும்; அவர்களுக்குத் தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது.
திருக்குறள் தெய்விகத் தன்மை பொருந்திய ஒருவரால் எழுதப்பட்டது என்பதற்காகவோ, அல்லது மனிதசக்திக்கு மேம்பட்டவரால் சொல்லப்பட்டது என்பதற்காகவோ நாம் அதைப் போற்றவில்லை; அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த கருத்துகளுக்காகத் தான் நாம் அதைப் போற்றுகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் உணர்தல் வேண்டும்.
சிறிது காலத்திற்கேனும் மக்கள் தொடர்ச்சியாகத் திருக்குறளைப் படித்து மனத்தில் ஆழப் பதியவைத்து வருவார்களானால் நம் நாட்டில், நம் மக்கள் வாழ்வில், நம் மக்கள் உள்ளத்தில், ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பதுதான் என் கருத்து.
ஆரியம் இந்நாட்டில் வேகமாகப் பரப்பிவைக்கப்பட்டு வந்த மத்திய காலத்தில் திருக்குறள் மிகச் சாதாரணமாகப் பாவிக்கப் பட்டு விட்டது. சமீப காலமாக, ஒரு கால் நூற்றாண்டுக் காலமாகத்தான் திருக்குறளின் விழுமிய கருத்துகள் சாதாரணமாக மக்களிடையே பழக்க வழக்கத்திலும் பொதுக்கூட்டங்களிலும் பரிமாறும்படியான நிலை ஏற்பட்டு, இன்று அதுவே எதிர்கால ஆசாபாசங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், நல்வாழ்வுக்கு ஏற்றதான உயர்வான எண்ணங்களைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துவிட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருத்துகளை வெளியிட்டதற்காக, திருவள்ளுவரை ஏன் தெய்விகத்தன்மை பொருந்தியவர் என்று கூறக்கூடாது என நீங்கள் வினவலாம்.
இன்றுள்ள மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்விகத்தன்மை என்பதாக ஒரு தன்மை மக்களுக்கு இருக்கிறதென்பதையே என்னால் ஒப்புக்கொள்ள முடியாததால்தான் திருக்குறள் ஆசிரியருக்கு அத்தகைய தெய்விகத் தன்மையைக் கொடுக்க முடியவில்லை.
திருக்குறள் அப்படிப்பட்டதல்ல. அதில் பாவம் என்பதற்காகப் பயப்படும் கோழைத்தனமான கருத்துகளுக்கு இடமில்லை. எத்தகைய பகுத்தறிவுக்குப் புறம்பான ஆபாசக் கருத்துக்கும் அதில் இடமில்லை. அதைக்காட்டி மக்களை ஏய்க்க முடியாது. ஆகவேதான் பெரிய செல்வாக்குப் பெற வசதியோ வாய்ப்போ அதற்கு இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு நூலும், எந்த ஒரு நபருக்கும் ஒரு கூட்டத்தவரால் அதாவது பார்ப்பனக் கூட்டத் தவரால் புகழப்பட்டால்தான் அவற்றிற்கும் புகழ் ஏற்படும். புகழ் வேண்டுமானால் ஒரு பார்ப்பனன்தான் புகழ வேண்டும். இன்றேல் புகழ் கிடையாது. இது தான் இன்றைய நிலை. பழையகால நிலையும் இதுதான்.
திராவிட மக்களின் நிலை அவ்வளவு நாதியற்றுக் கிடக்கிறது. அவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக-சொந்தச் சக்தியில் நிற்க முடியாதவர்களாக- திராவிட மக்களாகிய நாம் இருந்து வருவதால்தான், திருக்குறள் கருத்துகள் கூட ஆரிய நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்ட தர்மங்கள் தான் என்று கூறுவதற்குக்கூட அந்தப் பார்ப்பனர்கள் துணிந்து விட்டார்கள். இத்தகைய மிகக் கஷ்டமான, கடினமான நாதியற்றநிலையில் நாம் இருக்கிறோம். எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100-இல் 1 பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. சாதாரணமாகப் பெரிய அறிவாளிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும். அந்தப்படியே மக்களால் கருதப்பட்டு வருபவர்களும் மேலான தர்மங்களுக்கும் மேலான தத்துவார்த்தங்களுக்கும், கீதையைத்தான் ஆதாரமாக எடுத்துக் கொள்வார்கள்.
வாழ்க்கையில் எந்த அளவுக்கும் உகயோகப்படாத மிகச் சாதாரண அந்த நூலுக்கு அவ்வளவு பெருமை இருக்கக் காரணம் அது ஓர் ஆரிய நூல். ஆரிய தர்மத்தை அதாவது ஆரிய உயர்வை வலியுறுத்தும் நூல் என்பதால்தான். இதை நீங்கள் உணரவேண்டும். திருக்குறளுக்கு அத்தகைய பெருமை இல்லாமற் போனதற்குக் காரணம் இது ஓர் திராவிடநூல் என்பதுதான். இதனையும் நீங்கள் நன்றாக உணரவேண்டும்.
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்!
மேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை -அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.
மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருதமுடிகிறது.
திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச்செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் நான் கருதுகிறேன்.
திருக்குறள்-மக்கள் அனைவரும் ஒரே இனந்தான் பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள் - 972)
திருக்குறளில் - ஒரு இடத்தில் கூட பிராமணன் சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப் பட்டிருக்கிறது - வர்ணாச்சிரம தர்ம வாசனையே கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியா விட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென்பதையும், அதன் மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
(சென்னை, மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகச் சார்பில் தோழர் சோ. லட்சுமிரதன் பாரதி எம். ஏ., பி. எல்., அவர்கள் தலைமையில் 14-.3.-1948-இல் நடைபெற்ற, 3-ஆவது திருவள்ளுவர் மாநாட்டில் திராவிட நாட்டுத் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் ஆற்றிய அருமை வாய்ந்த சொற்பொழிவின் சாரம்)
- ‘விடுதலை’, 25.3.1948.
(தொடரும்...)
- உண்மை இதழ், 1-15.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக