பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..? -9

கொஞ்சம்
இது கிஞ்சித் என்ற வடசொற் சிதைவென்று வாய் புளித்ததோ _ -மாங்காய் புளித்ததோ என ஆராயாது கூறுவோர் இருக்கின்றார் போலும்.
கொஞ்சுதல் _ என்பது நிரம்பாப் பேச்சு, சிறிது பேசுதல் -இதன் முதனிலை கொஞ்சு, இது சிறிது, குறைந்த அளவு என்ற பொருளுடையதே.
இக் கொஞ்சு என்பதுதான் அம்முப் பெற்றுக் கொஞ்சம் ஆயிற்று. மிஞ்சு, மிஞ்சல், மிச்சம் என்றதிற் போல.
எனவே கொஞ்சம் தூய தமிழ்க் காரணப் பெயராதல் பெறப்படும்.
பாடம்
இதுபோன்ற ஒலி வடவரிடமும் இருக்கலாம். வடவர் பாடத்திற்கும், தமிழ்ப் பாடத்திற்கும் தொடர்பில்லை. தானம் என்பது போல.
பாடு என்றால் பெருமை, அப் பாடு என்ற நெடிட்றொடர்க் குற்றுகர முதநிலை, அம் என்ற இறுதிநிலை பெற்றுப் பாடம் ஆயிற்று. பாடம் பெருமைப்படுவது. ஆசிரியர் சொல்வதை மனத்தில் கொள்வது.
பாடம் : பெருமை, இது பிறவற்றிற்கும் வரும்.
எனவே பாடம் தூய தமிழ்க் காரணப் பெயர்!
படம்
இதையும் வடசொல் என்பர், எதையும் வடசொல் என்று கூறி மகிழும் ஒரு கூட்டத்தார்.
படு என்ற முதநிலைக்கு ஓவியன் மனத்துள்ளது ஏட்டில் படுவது என்ற பொருள் ஆவது காண்க.
படு+அம்=படம் “முற்றும் அற்று ஒரோ வழி’’ என்பதால் இவ்வாறு புணர்ந்தது.
படம், படல்-இது தொழிற் பெயர், தொழிலாகு பெயராய்ப் படமாகிய பொருளை உணர்த்தியது.
எனவே, படம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 2, இசை: 30-31, 16-2-1960)
கன்னி
கன்யா என்பது வடமொழியில் இளம் பெண்ணுக்கு வழங்குகின்றது. அதே வட சொற் சிதைவே கன்னி என்பதும் என வடமொழியாளர் சொல்லுவார்கள். கன்யாவுக்கும் கன்னி என்பதற்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. கன்யா என்பது தமிழில் கன்னியை, கன்னிகை என்றெல்லாம் வந்திருக்க வேண்டும். ஆங்கு அது வடசொல் எனின் ஒக்கும்.
கன்னி என்பது இளமை குறித்துத் தமிழிலக்கியங்களில் பெரிதும் பயின்று வந்துள்ளது.
கன்றுக்குட்டி என்பதன் வேர்ச்சொல்லையும் நோக்குக. நோக்கவே கன்றுதல் கன்னுதல் என்றால் இளமை, வளர்ச்சியின்மை, அழிவு பெறுதல் என்று பொருள்படும்.
கன்றுதலின் வேர்ச் சொல்லாகிய-முதனிலையாகிய கன்னு, இகரப் பெயர் இறுதிநிலை பெற்றதே கன்னி என உணர்தல் வேண்டும்.
கன்று என்ற முதனிலை இகரப் பெண்ணால் இறுதி பெற்று இளம் பெண்ணுக்கு ஆகும்.
கன்று என்பது அஃறினை ஒன்றன் பால் இறுதி பெற்று இளமை உடையது என அஃறிணை ஒன்றன் பெயராகும். கன்னி என்பது தென்பால் உள்ள ஓர் ஆற்றைக் குறித்ததும் காண்க.
கன்னி என்பது தென்பால், ஆற்றுக்கு, முளைக்கு ஆகும்போது அழிந்தது அறிவு பெற்றது என்ற பொருளில் அமைந்ததாகும்.
இனிக் கன்னியாகுமரி என்று வழங்கும் ஒரு தொடரைக் காட்டி அதில் கன்னியா என நிற்பது வடச்சொல் என்பாரும் உளர்.
அஃது அவ்வாறன்று. கன்னி குமரி என்பதன் இடை ஆகாரம் சாரியை ஆடு தொடா இலை என்பதில் உள்ள ஆடு அடா என ஆகாரச் சாரியை பெற்றது போல. இவ்வாறு ஆகாரம் சாரியையாக வருவது தமிழில் பெரு வழக்கே.
எனவே
கன்னி தூய தமிழ்க் காரணப் பெயர் என உணர்க.
- பாரதிதாசன்
(குயில்: குரல்: 2, இசை: 32, 23-2-60)
- உண்மை இதழ், 1-16.4.17
 
கன்னம்
கன்னம் - -தட்டு, தட்டுப் போன்ற கன்ன உறுப்பு. கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றை ஒட்டி இடப்படும் கோட்டுக்கு நடுப்பகுதி தட்டுப் போல் அமைந்திருப்பதை நோக்குக. கன்னம் என்ற உறுப்பு தட்டுப்போல் அமைந்திருந்ததால் அவ்வுறுப்பை கன்னம் என்றனர் பண்டைத் தமிழர். கன்னம் தராசுத் தட்டுக்குப் பெயராகும். கன்னப்பொறி என்பது காதுக்கும் பெயர். அது கன்னத்தின் அருகே அமைந்திருப்பதால் அப் பெயர் பெற்றது.
கன்னம் என்பது கர்னம் என்ற வட சொல்லின் சிதைவென்று கூறுவோர் அறியாதாரும், திருடரும் ஆவார் என்க. காதை ஒட்டி இது (கன்னம்) அமைந்திருக்கும் காரணத்தால், காதையும் கன்னம் என்று கூறுவார். இவ்வாறு கூறுவதும் பிழை என்று காதின் பெயராக கன்னம் என்று கூறும் போதும், கன்னம் வட சொல் அன்று, அதாவது கர்னத்தின் சிதைவாகிய சொல்லன்று.
எனவே, கன்னம் என்ற தூய தமிழ்ச் சொல்லானது, கன்ன உறுப்பு குறிக்கும் போதும், கன்னம் இடுதலைக் குறிக்கும் போதும், தராசுத் தட்டை குறிக்கும் போதும், கன்னம் குறிக்கும் போதும், யானைச் செவியை குறிக்கும் போதும் வடசொற் சிதைவன்று, தூய தமிழ் காரணப் பெயரே என்று கடைபிடிக்க. கதுப்பு என்பதும் கன்னத்தின் பெயர் என்று அறிக. கன்னம் செந்தமிழ்ச் செல்லவமே!
பாது
பாதுகாத்தல் என்ற தொடரிலுள்ள, பாது என்பதை தமிழ் அல்லாது வேறு சொல் என்று, தமிழ் மாணவரிற் சிலர் எண்ணுவதாகத் தெரிகிறது. பகுத்தல், பகுதல், பாதல், பார்த்தல், பாத்திடு என்பவை நோக்குக. பாதல் என்றதில் தல் என்ற இருதினை நிலை இல்லை. முதநிலை மட்டும் நின்றது. பாது என்ற சொல்லின் பொருள் பங்கு பகுதி என்பன. அது நாளடைவில் அது தன்னை அடுத்து வரும் வினையை சிறப்புறுத்துவதோர் சொல்லாய் வழங்குகின்றது. பாதுகாத்தல் என்றால், நன்கு காத்தல் என்பது பொருள் என்க.
பாது தூய தமிழ்க் காரணப் பெயர். வந்தவர் மொழியன்று.
(குயில்: குரல்: 2, இசை: 39, 7-6-1960)
சக்கரம்
இது வடசொல் என்பார் உரை பொருந்துவதன்று. அவ்வாறு செப்புவோர் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் வடமொழியினின்றே வந்தவை என்று கூறும் முந்தா நாளைய விருந்தினர்.
செம்மை என்பதன் அடியாகப் பிறந்த செக்கு என்ற முதனிலையும், அரவு என்றதன் திரிபாகிய அரம் என்ற இறுதிநிலையும் சேர்ந்தது செக்கரம் என அறிக. செக்கரம் என்பது சக்கரம் ஆகியது எப்படி எனின், கூறுவோம்.
தமிழில் முதல் நாளில் மொழி முதலில் சகரம் வராது. பிற்காலத்தில்தான் சகரம் மொழிக்கு முதலில் வருவதாயிற்று அவ்வாறு வரத்தலைப்பட்டபோதுதான் செக்கரம் சக்கரம் ஆயிற்று.
செம்மையின் அடியாகச் செக்கு வருமா எனின், செம்மையின் அடியாக- - செவப்பு, சிவப்பு, சிவம், செவ்வானம், செக்கார், செம்பு முதலிய சொற்கள் வந்தது அறிக. எனவே செக்கு என்பதும் செம்மையின் அடியாகப் பிறந்த சொல்லே என்க.
இனி,
செம்மை என்ற சொற்பொருள் : செந்நிறம், நடுவுநிலை, வட்டம்.
சக்கரம் வட்டமாக இருத்தல் நோக்குக. எனவே, சக்கரம்- - வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்வமேயாகும்.
(குயில்: குரல்: 2, இசை: 33, 14-6-1960)
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
- உண்மை இதழ், 1-16.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக