பக்கங்கள்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?- 7


காவிரி (காவேரி)
இது வடமொழி தந்திதப் பெயர் என்று கூறி, அதற்காகவே ஒரு பொய்க் கதையும் கட்டிவிட்டனர். கவேரன் மகள் ஆதலின் காவிரியாயிற்றாம். இது மட்டுமன்று. அகத்தியன் தூக்குக் குவளையில் இருந்த நீரை, இந்திரன் வேண்டுகோளால், யானைமுகன் காக்கை உருக்கொண்டு கவிழ்க்க, அது ஆற்றின் உருவாய்ப் பரவிற்றாம். இவ்வாறு அதன் தோற்றத்தைக் கூறி-தமிழகத்தின் நாகரிகத்துக்கே அகத்தியன் காரணம் என்ற பொய்ம் மூட்டைக்கு அரணாக்குவர்.... காவிரி, காவேரி என்பன தூய தமிழ்க் காரணப் பெயர்கள்.
கா-- - -சோலை, விரி-- - --விரிந்தது. சோலை சூழ்ந்து கா-- - --ஏரி சோலையின் வளமுள்ள ஏர் போன்ற மற்றும் பல பொருளில் வரும் காவேர் காவிரி என்ற சொற்களில் குறிக்கப்படும் ஆறானது. ஆரியரும் ஆரியமும் இத்தென்னகத்தில் கால் வைக்குமுன் - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னமே இருந்ததென்று தமிழ்த் தொன்னூல்களால் அறிகின்றோம்.
ஆதலின் காவிரி, காவேரி தூய தமிழ்க் காரணப்பெயர்கள்.
(குயில்: குரல்: 2, இசை: 6, 14-7-1959)
ஆலாபனம் - ஆலாபனை
என்பவை வடசொற்கள் அல்ல, தமிழ்ச் சொற்களே ஆளத்தி என்பது ஆலாபனம் ஆலாபனை என மருவிற்று.
ஆளத்தி- - இசைகளை ஆளும் முறை, காரணப் பெயர். ஆளத்தியை வக்காணம் என்றும் கூறும். வக்கணை இழி வழக்கு.
உவணம்
அவண் இவண் உவண் என்பவற்றில் உவண் என்பது உயரத்தைக் குறிப்பதோர் சுட்டுப் பெயர். இது அம்சாரியை பெற்று உவணம் என வழங்கும். உவணம் உயரத்திற்குப் பெயராகவே பின் அது உயரத்திற் பறக்கும் பருந்துக்கும் ஆகு பெயராயிற்று. உவணம்- - உயரம், பருந்து.
இதை வடவர் வடமொழி என்று ஏமாற்றுவர். தூய காரணப் பெயராதல் அறிந்து உவக்க.
சமம்
இது தமிழ்ச் சொல், வடசொல் அன்று. இது ஈம் எனவும் தொல்காப்பியத்தில் வந்துள்ளது. ஈமம் - சுடுகாடு.
ஏமம்
இது வடசொல் அன்று, தூய தமிழ்ச்சொல். ஏமம் - நள்ளிரவு. பொன், இன்பம், காலல், பொருள். ஏமம் என்பதை ஹேம ஆக்கி அதைப் பொன்னுக்கு இட்டழைத்தார்கள் சொல்லறியராகிய வடவர்!
தடம்
இதை வடசொல் என்று புளுகினர் வடவர். இது தூய தமிழ்ச் சொல்லாதனை - -தடவும் கயவும் நளியும் பெருமை என்ற தொல்காப்பியத்தாலறிக. தடம் - குளம். கயம் - குளம். தடம் - அகலமுடையது.
(குயில்: குரல்: 2, இசை: 8, 1-9-1959)
உமை
இது உமா என்ற வடசொல்லின் திரிபு என்பர் தமிழின் தொன்மைநிலை தோன்றப் பெறாதவர். அம்மை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே உமை என்பது.
ஆணவம்
வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். அது ஆளுதல் என்பதன் அடியாகப் பிறந்தது. உயிரைத் தன் வழிப்படுத்தி ஆளுவதோர் ஆற்றலின் பெயர் ஆட்சி. ஆளுதல், ஆண்மை, ஆட்கொளல் ஆகியவற்றை
நோக்குக.
ஆணவம் என்னும் சொல்லுக்கும், ஆணவ மலம் என்னும் பொருள் பழைய வடநூல்களில் யாண்டும் வழங்கப்படவில்லை என்ற பன்மொழிப் பேராசிரியர் மறைமலையடிகள் அருளிச் செய்தமையும் இங்கு நோக்கத்தக்கது. ஆண்+அ+அம்=ஆண் - -ஆள். அ சாரியை. அம் பண்புப் பெயர் இறுதிநிலை.
(குயில்-, குரல்: 2, இசை: 9, 8-9-59)
-உண்மை இதழ், 16-31.10.16

 
யாமம்
இது வடமொழி அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர், யா - -காட்டு, அதனடியாகப் பிறந்த தொழிற் பெயர் யாமம். யா என்ற அடி ம் என்ற சாரியையும், அம் என்ற தொழிற்பெயர் இறுதிநிலையும் பெற்றது.
சேது
அணைக்கும் செய்கரைக்கும் சிவப்புக்கும் பெயர். செம்மையின் அடியாகப் பிறந்த தூய காரணப் பெயர். தேக்கம் சிதையாமல் செம்மைப்படுத்தப்பட்டது என அணைக்குச் சேது என்று பெயர் வந்ததை நோக்குக. செய் கரைக்கும் அவ்வாறு. செம்மை சிவப்பு ஆதல் தெளிவு.
இதை யறியாது சேது என்பது, வடசொல் என்பர். சொல்லுவார் சொல்லினும் கேட்பார்க்கு மதியிருத்தல் வேண்டுமே.
(குயில்-, குரல்: 2, இசை: 9, 8-9-59)
திருடன்
இது த்ருஷ்டி, அதாவது பிறர் பொருளில் கண் வைப்பவன் என்று காரணம் கூறி, திருஷ்டி என்றதன் அடிப்படையாகப் பிறந்து திருடன் ஆதலால் அது வடசொல் என்று மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுவர் வடவர்.
திரு செல்வம், பிறர் செல்வமே கருதி வாழ்வோன் திருவன். திருவன் என்பதே திருடன் எனத் திரிந்தது என அறிதல் வேண்டும். தமிழ்ச் செய்யுட்ளில் திருவன் என்று வருவதே பெருவழக்கு.
மூலம்
வடசொல்லன்று, மூ - மூத்த தன்மை. காரணம் மூ என்பதன் அடியாக மூலம் என்ற சொல் தோன்றிற்று. மூ+அம்=மூலம். தமிழில் வகரம் லகரமாக வழங்கும், ஆவம், ஆலம் என வழங்கியது போல. ஆலம், ஆவம், அம்பின் கூடு.
வேர் என்பது மரத்தின் காரணம் ஆம்போது வேர் மூலமாம். மற்றும் பிற.
அருச்சனை
அருந்தல்-- -உண்ணல். உட்கொள்ளல், மனநிறைவு பெறல், இது தன்வினை.
அருத்தல் - -உண்ணச் செய்தல், உட்கொள்ளச் செய்தல், மன நிறைவு பெறச் செய்தல். இது பிறவினை. இந்த அருந்தல் என்பது அருந்து+அன்+ஐ என இடையில் அன் சாரியையும் ஐ தொழிற் பெயர் இறுதிநிலையும் பெற்று வருதல் தமிழில் பெருவழக்கு, பொருத்தனை என்பது காண்க.
இனி அருத்தளை என்பதன் போலி அருச்சனை என்பது, இது இளைஞரும் அறிந்ததே. பொரிந்து - -பொரிச்சு, விரித்து- - விரிச்சு என்பவற்றையும் நோக்குக.
அருச்சனை எங்கள் வடசொல் என்று எவன் சொல்வான், எவன் கேட்கான்.
எனவே அருச்சனை தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடிக்க.
(குயில்: குரல்: 2, இசை: 11, 22-9-1958)
வண்ணம்
இது வர்ணம் என்ற வடசொல்லின் சிதைவாம். வர்ணம் சிதைந்தால் வருணம் என்றல்லவா வரவேண்டும். அப்படித்தானே வந்தும் உளது.
சமநிலைக்குமேல் ஏற்படும் சிறப்பு நிலையை வளமை என்பர் தமிழர். வண்மை என்ற சமநிலைக்கு மேல் ஏற்பட்ட அழகு, நிறம் இவற்றை வண்ணம் என்றனர். வண்மை - --வண்மம்- வண்ணம், வண்ணம் என்பதில் அம் பண்புப் பெயர் இறுதிநிலை, சிவப்பு என்பதிற் போல.
வண்ணம்-தூய தமிழ்க் காரணப் பெயர்
ஏளனம்
எள்ளுதல்-இகழ்தல். அதன்படி எண். அதுமுதலீட்சி பெற்று அன்சாரியையும் அம் தொழிற் பண்பு இறுதி நிலையும் பெற்று ஏளனம் ஆயிற்று.
இந்த ஏள் என்பதே கேள் - --கேளி - --கேலி என மருவிற்று. அவலல்- - -கவலல் ஆனதும் காண்க. எனவே ஏளனம் கேலி தூய தமிழ்க் காரணப் பெயர்களே என்க.
(குயில்: குரல்: 2, இசை: 11, 22-9-1958)
-உண்மை இதழ், 1-15.11.16
அலாதி
பிறமொழிச் சொல்லன்று. வடசொல்லும் அன்று. அலாதது- - அல்லாதது என்பதன் தொகுத்தல். இருப்பு முறை அல்லாதது, தனி என்பன அதன் பொருள்கள்.
அலாதது என்பதன் மரூஉ அலாதி என்பது.
எனவே, அலாதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்று தெளிக.
(குயில் : குரல் : 2, இசை : 11, 22-9-1958)
முந்திரிகை - முந்திரி
முந்திரிகை என்பதை வடசொல் என்று நம்பும் தமிழர்களும் இருக்கிறார்கள் இந்த இரங்கத்தக்க தமிழகத்தில்.
இது கீழ்வாய் இலக்கத்துள் ஒன்று, அதாவது ஒன்றை முன்நூற்றிருபது பங்காக்கியதில் அவற்றிலொரு பங்கின் பெயர்.
முந்திரிகை என்னும் தொடர் மொழியில் முந்து இரிகை என்ற இரு சொற்கள் உள்ளன. முந்து என்பது காலமுறையில் வைத்து எண்ணினால், கீழ் என்பது பொருளாகும். இரிதல் சாய்தல், ஒன்று என்பது கீழ் நோக்கிச் சாய்ந்த பகுதி அதாவது கீழ்வா யிலக்கத் தொன்று என்று பொருள் கொள்க.
எனவே, முந்திரிகை தூய தமிழ்க் காணப் பெயர் என்க.
இதுவே முந்திரி என்றும் ஈறு கெட்டு வழங்குவதுண்டு. கீழ் நோக்கிச் சாய்ந்துள்ள முந்திரிப் பழத்தையும் அவ்வழியே அதன் முதலாகிய முந்திரியையும் குறிக்கும் என்பதும் ஈண்டு அறியத்தக்கது.
கதை
இது கதா என்ற வடசொல்லின் சிதைவு என்று வடவர் கூறுவதும், அதைத் தமிழர் நம்புவதும் ஆகிய இரண்டுமே மொழியாராச்சி யில்லாமையினின்று தோன்றியவை.
கதுவல் - -பற்றுவது, தொழிற்பெயர். கது என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதுவே முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகக் காது என வரும். காது - -ஒலியைப் பற்றுவது. இக் கது- - ஐ தொழிற் பெயர் இறுதிநிலை பெறின் கதையாம். கதையை அனைத்துமொரு முதனிலையாகக் கொண்டு கதைத்தல் என்றும் வரும். கதை - -நடந்த, கேட்கப்பட்ட கருத்தைப் பற்றுவது என்று பொருள் கொள்க.
எனவே, கதை தூயதமிழ் காரணப்பெயர். வடசொல் அன்று, தமிழ்ச் சொல்லையே வடவர் எடுத்தாண்டனர்.
(குயில்: குரல்: 2, இசை: 12, 29-9-1959)
மது
மதுகை எனினும் மடுகை எனினும் பொருள் ஒன்றே. மெய்வழி ஊற்றை அகப்படுத்தலும், வாய் வழிச் சுவையை அகப்படுத்துதலும், கண்வழி ஒளியை அகப்படுத்தலும், மூக்கு வழி நாற்றத்தை அகப்படுத்தலும் ஆகிய ஓர் “ஆற்றல்” மதுகை, மடுகை என்பவற்றின் பொருள்.
மது என்பது மதுகை என்பதன் முதனிலைத் தொழிற்பெயர். அகப்பத்தால் உண்டாகும் இனிமைக்குத் தொழிலாகு பெயர். மடுகை என்பதும் இவ்வாறே. மடுகை மடுத்தல் எனவும் வரும்.
மது, தேன், கள், இனிமை தித்திப்பு முதலியவற்றைக் குறிக்கும்.
மது என்பதை வடசொல் என்று வடவர் கூறிப்  பொய்ப்பார். மொழி ஆராய்ச்சி இல்லாத நம் தமிழர்களிற் சிலரும் ‘ஆமாம் ஆமாம் இதுவடமொழி தான்’ என்று கூத்தாடுவர்.
மது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று கடைப்பிடிக்க. மடுகை மதுகை என்பவற்றில் எது முன்னையது எனின், மடுகையே முன்னதாதல் வேண்டும். எனவே மடுகையே மதுகை ஆயிற்று என அறிதல் வேண்டும்.
(குயில்: குரல்: 2, இசை: 13, 6-10-1959)
அச்சாரம்
ஓர் ஒப்பந்தம் பற்றி எழும் அச்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான முற்பணம் என்பது இதன் பொருள்.
இது முதலில் அச்சவாரம் என இருந்தது. பின்னர் அகரம் கெட்டு அச்சாரம் என்றாயிற்று. அச்சம் - -அஞ்சுதல். வாரம்- - பங்கு பகுதி, அச்சப் பகுதி ஆகிய இது, பணத்திற்கானது ஆகுபெயர் எனவே அச்சாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)
-உண்மை இதழ், 16-30.11.16

 
சாரம்
சார்தல், சார்கை, சாருதல், சாரம் அனைத்தும் ஒரே பொருள் உள்ள தொழிற் பெயர்கள். சார்+அம். அம் தொழிற்பெயர் இறுதிநிலை.
சாரம் ஒன்றைச் சார்ந்தது. சார்வது, ஒன்றை வடித்ததும் சாரம் எனப்படும். ஒன்றைச் சார்ந்து நிற்பதும் சாரம் எனப்படும். சுக்குநீர்ச் சாரம் என்பதில் சக்கை போகச்  சார்ந்து மிகுந்தது எனப் பொருள் படுதல் காண்க. நூற்சாரம் என்பதில் நூலின் இன்றியமையாக் கருத்தை வடித்தும், வேண்டாக் கருத்துக்களை விடுத்தும் காண்க! மற்றும் கட்டுச் சுவர் எழும் வரைக்கும் அதைச் சார்ந்து நிற்கும் சாரக்கட்டை உணர்த்தலும் காண்க. மேற்காட்டிய பொருளில் சாரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயரே என்க.
சுரம்
சுரம் என்ற ஒலி வடமொழியிலும் இருக்கலாம். அதற்கும் தமிழ்ச் சுரத்திற்கும் தொடர்பே இல்லை.
சுரம் என்பது வடமொழி அன்று என்றும், அது தமிழ்ச் சொல்லே என்றும் துணிக.
சுர் என்பது விரைவையும் ஒலியையும் குறிக்க வருவதோர் குறிப்பிடைச் சொல்.-இதனால் அது தீய சுவையின் தாக்குதலையும், தீய ஒளியின், தீய ஊற்றின், தீய ஓசை தீய நாற்றம் இவற்றின் தாக்குதலையும் குறிப்பதாயிற்று. சுர் என்பது அம் சாரியை பெற்றுச் சுரம் ஆனது. அருநெறி, கள், காடு, காய்ச்சல், பாலை நிலம், நெடுவழி இவற்றைக் குறிக்கத் தமிழில் சுரல் என்றால், பிழையாகாது. அது வடசொல்லன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். இதை சுவரம் என்று கூறிக் காய்ச்சலைக் குறிப்பவர் பிழை செய்தவராவார்கள். காய்ச்சலைக் குறிக்கும் போதும் சுரம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
ஆனால், சுவரம் என்றதோர் வடமொழி உண்டு. அதற்கும் சுரம் என்பதற்கும் தொடர்பே இல்லை. சுவரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இசை என்பது பொருள்.
(குயில்: குரல்: 2, இசை: 14, 13-10-1959)
விகுதி
இது விகுரிது என்ற வடசொல்லின் சிதைவென்று வட சொல்காரர் சொல்லி ஏமாற்றுவர். தமிழரும் ஆராய்ச்சி இல்லாமையானும், கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பனரைப் பின்பற்றுவதோர் நோயுடைமையானும் ஏமாறுவர். விகுதல், விகல், விக்கல், விக்குள், விகுதி அனைத்தும் இறுதிநிலை வேறுபடினும் ஒரே பொருளைத் தரும் தொழிற் பெயர்கள். உள்நின்ற புனலின் அளவு இறுதிபடுதலே விக்குள் ஆம். அதே பொருளுடையனவே பிறவுமாம். விகுதி- - விகு முதனிலை திரிந்த தொழிற் பெயர் இறுதிநிலை என உணர்க.
எனவே, விகுதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)
காந்தி
இது வட சொல்லே என்று வடவர் கூறினாலும் தமிழுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. காந்துதல், காந்தல், காந்தி அனைத்தும் ஒளிபடுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயர்கள். எனவே, காந்தி ஒளி செய்தல் என்ற பொருள்படும் தூய தமிழ்க் காரணப் பெயரேயாகும். இது ஒரு பொருளுக்கு ஆகும்போது ஆகுபெயராம்.
காந்தி என்ற சொல் வடமொழியில் இருக்கலாம். அது இதுவல்ல.
(குயில்: குரல்: 2, இசை: 20, 24-11-1959)
திசை, திக்கு
இவை திகழ்ச்சி என்பதன் அடியாகப் பிறந்த திகை என்பதன் திரிபுகள் திகை- - திசை.
திசை, திக்கு ஆகிய இரண்டும் வடசொற்கள் என்பர் திசை தெரியாது திக்கற்றுத் திரிந்த ஆரியர்.
(குயில்: குரல்: 2, இசை: 23, 15-12-1959)
-உண்மை இதழ், 1-15.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக