பக்கங்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2024

தமிழத்தின் இன்றைய பண்டைய பரப்புகள் – பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்


ஜனவரி 16-31

மிழகம் என்ற பெயர் இந்திய பெருநிலப்பரப்பில் தமிழ் வழங்கும் தனிப்பகுதிக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. இப்பகுதியின் இன்றைய எல்லை, பெரும்பாலும் எழுநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட  தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிக்கப்பட்ட எல்லையை ஒத்ததேயாகும். நன்னூலில்  தமிழகத்தின் எல்லை, குணகடல் குமரி குடகம் வேங்கடம் என்று கூறப்பட்டது.

அதாவது கிழக்கே கீழ்க்கடல் அல்லது வங்கக் குடாக்கடல்; தெற்கே குமரி அல்லது கன்னியாகுமரி முனை! மேற்கே குடகம் அதாவது மேற்குமலை அல்லது மேற்குத் தொடர்ச்சிமலை; வடக்கே வேங்கடம் என்னும் திருப்பதிமலை – ஆகியவற்றின் இடையிலுள்ள நாடு தமிழகம்.

தற்கால அரசியல் பிரிவுகளின்படி தமிழகப் பகுதி, சென்னை மாவட்டத்தின் இருபத்தாறு வட்டங்களுள் ஏறக்குறைய பதினொரு முழுவட்டங்களையும், தென்னிந்திய தனி அரசுகளில் (சமஸ்தானங்களில்) முழுத்தனியரசு ஒன்றையும் உட்கொண்டது. வட்டங் கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை(பாண்டிமண்டலம்), தஞ்சாவூர், கோயம்புத்தூர் (கொங்கு மண்டலம்): சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு (தொண்டைமண்டலம்) ஆகியவை. தமிழ்த் தனியரசு புதுக்கோட்டை. இவ்வெல்லைக்கப்பால், திருவிதாங்கூர்த் தனியரசின் பரப்பில் கிட்டத்தட்ட ஒரு பாதியிலும் (மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு), சிறுபான்மையாக நீலகிரி வட்டத்திலும், நெல்லூர் வட்டத்திலும் தமிழ் பேசப்படுகிறது.

இந்திய பெருநிலப்பரப்புக்கு வெளியேயும் தமிழ் பேசப்படும் இடங்கள் உண்டு. இவற்றுள் பழமையும் தலைமையும் உடைய பகுதி யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வட இலங்கைப் பகுதியே. நில இயல் முறைப்படி, இது இந்தியப் பரப்பிலிருந்து துண்டுபட்டுக் கிடந்தாலும், பண்பாட்டு முறைப்படிப் பார்த்தால் இது உண்மையில் தமிழகத்தின் ஒரு பகுதியே ஆகும். இங்குள்ளோர் இந்தியாவினின்று குடியேறியவர் என்று அடிக்கடிக் கூறப்படுவதுண்டு; இது தவறு. பல காலங்களில் தொழில் காரணமாகவும், ஆட்சிநிலை காரணமாகவும் மற்றத் தமிழகத்தார் இப்பகுதியில் குடியேறியது உண்மையே ஆயினும், அந்நாட்டு மக்கள் தொன்றுதொட்டே தமிழர் ஆதலால் அக்குடியேற்றம், தமிழகத்தின் ஒரு பகுதியிலுள்ளார் இன்னொரு பகுதியில் குடியேறுவது போன்றதே யன்றி வேறன்று. எனவே, நிற இயலை விடுத்துப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் விரிந்த எல்லையைக் கூறுவதானால், வட இலங்கையும், அதனுட் சேரவேண்டுவதே யாகும். ஆயினும், தமிழகம் எனும் பெயர் இந்தியப் பரப்பின் தமிழ் நிலத்திற்கே பெரிதும் வழங்கப் பெறுவதால், இரண்டும் சேர்ந்த பகுதியைப் பெருந்தமிழகம் என்று கூறுதல் பொருத்தமாகும். இப்பெருந்தமிழகத்திலேயே திருவாங்கூரின் உள்மண்டிலங்களில் – திருவனந்தபுரம் மண்டிலத்தின் தென்பகுதியாகிய தோவாளை, அகத்தீசுரம், இரணியல், கற்குளம், விளவங்கோடு ஆகிய அய்ந்து கூற்றங்களும்; கிழக்கில் செங்கோட்டைக் கூற்றமும், வடகிழக்கில் தேவிகுளம் மண்டிலத்தைச் சேர்ந்த தேவிகுளம், பீர்மேட்டுக் கூற்றங்களும் சேர்க்கப்பட வேண்டியவையாகும்.

பழந்தமிழகம் இன்றைய தமிழகத்தினும் விரிவுடையதாயிருந்திருக்க வேண்டும் என்பதில் அய்யமில்லை. இன்றைய தமிழ்நாட்டின் நாலு மண்டிலங்களாகிய பாண்டிமண்டிலம், சோழமண் டிலம், தொண்டைமண்டிலம், கொங்கு மண்டிலம் ஆகியவற்றுள், தொண்டை மண்டிலம் சோழ மண்டிலத்திலிருந்து பிரிந்த ஒரு பகுதியே யாகும். கொங்கு மண்டிலமும் பிற மண்டிலங்களுடன் அவ்வக்காலங்களில் ஆட்சிவகையில் ஒன்றுபட்ட உட்பகுதியே யாகும். மற்ற இரண்டு மண்டிலங்களே தொன்றுதொட்டுத் தனி மண்டிலங்களாகத் தனி யரசாட்சியுடையவையாய் இருந்தன. ஆனால் இவற்றுடன் ஒப்ப மூன்றாவதாகக் கருதப்பட்ட அரசு சேர அரசு; அது இன்றைய மலையாள நாட்டைக் குறிப்பது. இதிலிருந்து இன்று தமிழகத்துக்குப்  புறம்பாகக் கருதப்படும் மலையாள நாட்டுப்பகுதி, வரலாற்றுக் காலத்திலேயே (1000 ஆண்டுகட்கு முன்வரை) தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த பகுதிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்ததென்பது தெளிவு. இன்று மலையாள நாட்டுப் பகுதியில் ஆளும் கொச்சி அரசர் தம்மைப் பழந்தமிழ் சேர அரசனின் வழித்தோன்றல் என்றே கொள்கின்றார். திருவாங்கூர் அரசர்கூடச் சங்ககாலத்தின் கடை எழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன் வழிவந்தவரெனவே, அண்மையில் பல ஆராய்ச்சி யாளர் நிறுவுகின்றனர். இவை மட்டுமின்றித் தமிழின் மிகச்சிறந்த இலக்கியக் களஞ்சியமான சிலப்பதிகாரத்தின்  ஆசிரியர் இளங்கோவடிகள் சேரப்பேரரசன் செங்குட்டுவன் இளவலேயாவார். அந்நூலில் செங்குட்டுவன் தமிழரசன் என்பது மட்டுமன்று, அவன் தமிழரைப் புறக்கணித்துப் பேசிய வட அரசரை அடக்கி வடநாட்டில் தமிழ்ப் பெருமையை நாட்டியவனென்றும் கூறப்படுகிறது. போக பதிற்றுப்பத்து என்ற நூல் முழுவதுமே சேர அரசரைப் பாடுவது. எனவே 1000 ஆண்டுகட்கு முந்திய பழந்தமிழகம் மலையாள நாட்டையும் உள்ளடக்கி மேல்கடல் கீழ்கடல்களையே எல்லையாகக் கொண்டு வடவேங்கடம்வரை பரவியிருந்ததென்பது பெறலாம். இதனா லேயே நன்னூலுக்கு முந்திய தமிழ் இலக்கண நூல்களெல்லாம் தமிழகத்தின் எல்லை கூறுகையில் மேற்கெல்லை குடகம் அல்லது குடகுமலை என்று கூறாமல், கடல்களையே மேல்கீழ் எல்லைகளாகக் கொண்டன. வடவேங் கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்ற தொல்காப்பியப் பாயிரச் செய்யுளில் வடதென் எல்லைகள் மட்டுமே கூறப்பட்டது காண்க.

(வருங்காலத் தமிழகம் என்னும் நூலிலிருந்து…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக