பக்கங்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2024

பழந்தமிழ் – மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்


ஜனவரி 16-31

“செந்தமிழ் என்று பெயரிட்டு அழைக்கப்பெறும் தமிழ் மொழியின் இலக்கியத் தமிழ், திராவிடப் பழங்குடியினர் வழங்கிய தொன்மொழியின் நிலையினைத் தெளிவுற உணர்த்துகிறது என்று சிலர் கருதுகின்றனர். செந்தமிழின் பெருமதிப்பைக் குறைத்துக் கூறாமலே திராவிட மொழியின் தொன்மை நிலையைத் தெளிவுறக் காட்டும் கண்ணாடியாம் தனித் தகுதி எம்மொழிக்கும் இல்லை என்றே நான் கருதுகின்றேன். இன்று வழக்கிலிருக்கும் அனைத்து மொழிகளின் ஒப்பீட்டு ஆராய்ச்சியே அம்மொழிகள் தோன்றத் துணைபுரிந்த திராவிடத் தொன்மொழி வழக்கின் நிலையை உணர்த்தவல்ல நனிமிகச் சிறந்த வழித் துணையாகும். செந்தமிழே அல்லாமல் திருந்தா மொழிகள் உட்பட, இன்று ஆட்சியிலிருக்கும் அவ்வின ஒவ்வொரு மொழியும் இம்முயற்சியில் தத்தம் துணையினை அளிப்பது முக்காலும் உண்மை. பழங்கன்னட மொழியின் துணையில்லாமல் தமிழ் மொழியின் தன்மை முன்னிலை இடப் பெயர்களின் இயல்பினை உணர்ந்து கொள்வது இயலாது. தன் மொழியின் இலக்கண விதிமுறைகளை ஒருசில ஆண்டிற்கு முன்னரே எழுத்துருவில் வகுத்துக் கொண்ட குறையுடையதும் திருந்தா மொழிகளுள் ஒன்றும் ஆகிய கூ மொழியே திராவிட மொழியின் படர்க்கை இடப்பெயரின் ஆண்பால் பெண்பால் பற்றிய விளக்கத்தை அறியத் துணைபுரிகிறது. என்றாலும், திராவிட மொழியின் தொன்மை நிலையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணை யினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும். திராவிட மொழிகள் அனைத்தினும், அது (தமிழ்) நனிமிகப் பழங்காலத் திலேயே நாகரிக நிலை பெற்றுவிட்டதன் விளைவாகும் இது.

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் — பக்கம்  – 105.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக