படிவு
இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.
படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.
படிமம்–வடிவம், படிவம் ஆயினவெனக் கூறுவர் ஏமாற்றுக்காரர்கள். அதற்கு ஒத்து ஊதுவார்கள் மீனாக்கி அழகு, சேது ஆகிய பிள்ளைகள். படிவு தூய தமிழ்க் காரணப் பெயர் என முடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 15, 9-9-58)
தாரம்
தாரம் அரும்பண்டம், வெள்ளி, அதன் ஒளி சேரும் ஏழ் நரம்பில் ஓர் நரம்பும் செப்பும் என்பது திவாகரம். இதில் தாரம் என்பதற்கு நான்கு பொருள் காணப்படுவதைக் காண்க.
வல்லிசைப் பெயரும், வாழ்க்கைத் துணைவியும், யாழின் நரம்பும், அரும்பண்டமும், தாராவும், நாவும், தாரம் என்பன. (வெண்தாதும்) என்பது பிங்கலந்தை.
இதில் தாரம் என்பதற்கு, ஏழு பொருள் காணப்படுவதைக் காண்க.
தாரம், வல்லிசை, நா, வெள்ளி,
தலைவி, ஓரிசை, கண், என்பன.
என்பது சூடாமணி நிகண்டு. இதில் கண் என்பதும் குறிக்கப்படுவதைக் காண்க.!
தாரம் என்ற சொல் வடமொழியே என்று சொல்லுகின்றவர்கள் அதற்கு எடுத்துக் காட்டாக என்ன சொல்லுகின்றார்கள் எனில், தாரம் ஏழிசையின் ஒன்று என்ற பொருள் வட மொழியில்தான் உண்டு என்கிறார்கள். அரும்பண்டம் முதலிய பொருள் தரும் போது அது தமிழ்ச் சொல்லே என்பதை அவர்களே ஒத்துக் கொள்கின்றார்கள்.
நாம் கேட்கின்றோம், ஏழிசையில் ஒன்றைக் குறிக்கின்ற போது அது வடசொல் என்றால், ஏழிசை வடவர்க்கு எப்போது எங்கிருந்து கிடைத்தது? — ஏழிசை தமிழரிடமிருந்து வடவர் எடுத்தனர் என்பதை மறுக்கக் கூடியதா? இல்லவே இல்லை. ஆதலின் ஏழிசையின் ஒன்றுக்கு அமைந்த தாரம் என்பதையும் வடவர் தமிழினின்றே எடுத்தனர் அல்லவோ?
இனி, அரும்பண்டம், ஏழிசையின் ஒன்று ஆகிய இரு பொருளிலும் வரும் தாரம் செந்தமிழ்ச் செல்வமே. ஆனால் நிகண்ட, பிங்கலம் முதலியவற்றில் பிற பொருளில் வரும் தாரம் என்ன மொழி? எனில், கூறுவோம்.
தாரம் என்பதை வடவர், வல்லோசையானும் மெல்லோசை யானும் சொல்லிக் கொண்டனர். ஆயினும் முதல் தாரம் என்பது தான் அது ஆகுபெயர் முதலிய சார்புப் பொருள் பெற்று வந்திருக்கலாம். அவையும் தமிழரால் வந்தனவே என்று உணர்தல் வேண்டும்.
எனவே, தாரம் என்பது தூய தமிழ்ச் சொல் என முடிக்க. இனியும் இசை இலக்கணம் தமிழினின்றே வடவர் எடுத்தார்கள் என்பதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:
க. இன்றைக்கு ஆயிரத்து நானூறு யாண்டின் முன் வடமொழியில் இசை நூல் இயற்றிய பரதரும், அறுநூற்றெண்பது யாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்க தேவரும், தமிழிசையிலிருந்து எடுத்தே வடமொழிக் கண் இசை வகுக்கப்பட்டது எனக் கூறினார் என்பர், இவ்வாராய்ச்சி வல்ல விருதைச் சிவஞான யோகிகள்.
உ. இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கண் சென்ற உண்மை ஆபிரகாம் பண்டிதர் மிக விரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூலில் நன்கு விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றது.
(குயில்: குரல்: 1, இசை: 16, 16-9-58)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக