ஓரை
இது தூய தமிழ்ச் சொல். இராசிகளின் பொதுப் பெயர். ஆனால், வடமொழி நூலுள்ளும், கிரேக்க மொழியுள்ளும் காணப்படுதலின், வடமொழியே என்று புகலுவர். அதற்குக் காரணம் இரண்டு. தமிழரை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைப்பதொன்று. ஆராய்ச்சியில்லாமை மற்றொன்று.
தொல்காப்பியத்துக் களவியல் 44_ஆம் நூற்பாவாகிய
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
என்பதன் கண் காணப்படும் ஓரை என்னும் சொல்லைக் கிரேக்க மொழி எனக் கொண்டு, அவ்வாற்றால் தொல்காப்பிய காலத்தையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று கூறி மகிழ்ந்து கொள்ளும் பகைவரும் உண்டு. இதையே சிலர் வடசொல் என்று கூறிக் கொக்கரிப்பர். ஓரை என்னும் இது மட்டுமன்று. ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்றே ஏமாற்றித் திரிவார்கள், அவர்கள் யார்? தமிழ்மொழி கொண்டு தம் மொழி பெருக்கிய மொழிவெறியர். தொல்காப்பயித்துக்கு முற்பட்ட காலத்திலேயே ஓரை என்னும் சொல் வடமொழியிலேனும் கிரேக்க மொழியிலேனும் வழங்கப்பட்டிருக்குமாயின் அது அப் பிறமொழிச் சொல் எனலாம். காட்டட்டுமே!
மறைமலையடிளார் கூறுகின்றார்: ஆராய்ந்த மட்டில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டாதலால் அதற்கு முற்பட்ட காலத்திலாதல் இயற்றப்பட்ட கிரேக்க ஆரிய நூற்களில் ஓரை என்னும் சொல் வழங்குவதைக் காணோம். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவராகமிகிரரால், கிரேக்கரின் வானநூல் ஆராய்ச்சியைத் தழுவி ஹோரா சாத்திரம் என்னும் ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதைக்கொண்டு ஹோரா என்னும் சொல் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குச் சிறிது முற்பட்ட காலத்திய கிரேக்க மொழியில் வழங்கப்படாமை மட்டும் அறியப்படும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிரேக்க ஆசிரியரான ஹிப்பார்க்கஸ் காலத்திலேதான், கிரேக்கரின், வான் நூலாராய்ச்சி ஓர் ஒழுங்குபெறத் தொடங்கியது. அதன் பின் அது தாலமி என்பவரால் முற்றுப் பெற்றாயிற்று.
(குயில்: குரல்: 1, இசை: 17, 23.09.1958)
வித்தகம்
இது தூய தமிழ்ச் சொற்றொடர். இரு சொற்களால் அமைந்தது. வித்து+அகம்.
வித்தகம் என்பது பழந்தமிழ் நூற்களில் பல்லிடத்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
நத்தம் போற் கேடும், உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது. (குறள்)
வித்தகப் பெண்பிள்ளை நங்காய். (ஔவையார்)
வித்து எனில் முதன்மை: காரணம், அகம் எனில் மனம். எனவே வித்தகம் (வெற்றிக்குக்) காரணமாகிய மனம் ஆற்றல்! அவ்வாற்றலும் தோல்வியடையாத ஆற்றல் ஆகும். மேற்படி குறளில் வரும் வித்தகர் என்பதற்கு பரிமேலழகரும் சதுரப்பாடு உடையவர் என்று பொருள் கூறினார்.
சதுரப்பாடு _ -ஆற்றல்.
வித்தகம் என்னும் இது நாளடைவில் வித்துக்கும் வழங்கலாயிற்று. அதன் அருமை காட்ட உழவர்கள் வித்து என்ற சொல்லை வித்தகம் என்றே சொல்லுவதுண்டு. மணிமேகலையில் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை 227ஆம் அடி நெல்வித் தகத்துள் நெல்முனை தோற்றம் என்பது.
வித்தகம் தமிழ்ச் சொற்றெடர் என்பதில் ஐயப்பாடு அடையக் காரணமே இல்லையாகவும், தமிழ் மாணவர் நலம் கருதி நாம் இதற்கு விளக்கம் தர முன் வந்தோம், இது வடசொல் என்று ஒரு நண்பர் சொன்னதால்.
(குயில்: குரல்: 1, இசை: 20, 14.10.1958)
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக