வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காவியம், காப்பியம்
இவை இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையவை. இவை வடசொற்கள் என்று கூறிப் பிழைப்பர் பார்ப்பனரும் அவர் அடி நத்துவாரும். காத்தல், காப்பு இவை இரண்டும் தொழிற்பெயர்கள். முன்னதில் தல் தொழிற்பெயர் இறுதிநிலை. பின்னதில் பு தொழிற்பெயர் இறுதி நிலை. இந்த இரண்டு தொழிற்பெயர் இறுதிநிலைகட்குப் பதிலாக அம் என்ற இறுதி நிலை பெற்றுக் காவம், காப்பம் என வரின் அது பிழையாகாது. எனவே, காவம், காப்பம் என்ற இரு தொழிற் பெயர்களும் இடையில் இகரச்சாரியை பெற்று காவியம், காப்பியம் என வந்தன என அறிதல் வேண்டும். இது எதுபோல எனில், ஓவம் என்பது இகரச்சாரியை பெற்று ஓவியம் என வந்தது போல என்க.
நெஞ்சைப் பயனற்ற வழியிற் செல்லாது நன்னிலைப்படுத்திக் காப்பது காப்பியம் காவியம் எனப் பொருள்பட்டுக் காரணப் பெயர்களாகியவாறு காண்க. காவியம் காப்பியம் வடமொழி இலக்கியத்திலும் வருவதால் அவை வடமொழியே எனக் கூறுவாரை நோக்கி உங்கள் வடமொழி இலக்கியத்தின் ஆண்டு என்ன? சொற்கள் உங்கட்கு ஏது? நீங்கள் இந்த நாட்டுக்கு வரும்போதே எல்லாச் சொற்களையும் கொண்டு வந்தீர்களா? என்று கேட்க வேண்டும். எல்லாச் சொற்களையும் நாங்கள் கொண்டு வந்தோம் என்று அவர்கள் கூறினால் இமையம் என்ற சொல்லை வரும்போதே கொண்டு வந்தீர்கள் எனில் நீங்கள் இருந்த இடத்தில் இமையம் என்ற மலை இருந்திருக்க வேண்டுமே- _ இருந்ததா? என்று கேட்க வேண்டும்.
இமையம் இமைத்தல் _ –ஒளித்தல். இமையமலை பனிமூட்டத்தால் ஒளி செய்தலால் அப்பெயரிட்டு அழைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.
எனவே, காவியம், காப்பியம், இமையம் என்பன செந்தமிழ்ச் செல்வங்கள். அனைவரும் வந்தவர் மொழியல்ல என நெஞ்சில் நிறுத்துக.
வேதம்
வேதம் வந்தவர் மொழியன்று, வேய்தல்- _ மறைத்தல், வேதல் என மருவியது. வேய்ந்தான் என்பது வேய்ந்தன் என மருவியது போல, பின் வேதல் என்பது வேதம் என ஆனது. ஈறுதிரிந்த தோர் ஆ.குபெயர். கபிலம் என்பதிற் போல.
வேய்ந்தன் என்பதின் வேய்தல் எனின் கொற்றக் குடையால் மறைத்து காத்தல் என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு மறைமலையடிகளும் உரைத்தார். எனவே, வேதம் செந்தமிழ்ச் சொல்லே எனக் கொள்க.
மானம்
மன்னல் தொழிற் பெயர். மன் ஈறுகெட்ட தொழிற்பெயர். அதாவது முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். அது முதனிலைப் பொருள் இறுதிநிலையாகிய அம் பெற்று மானம் என ஆயிற்று. மேற்சொன்ன மன்னல் அதாவது மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள். அதனால்தான் மானம் என்பதற்குப் பொருள் கூறிய தமிழ்ச் சான்றோர் தன்னிலையில் மாறாது நிற்றலும், மாற்றம் நிகழ்ந்துழி வாழாது சாதலும் என்று பொருள் கூறிச் சென்றார்கள்.
தீப் பார்ப்பனர்களும் தேப்போ மீக்களும் இதை வட சொல் என்று தமக்குத் தோன்றியவாறே கூறி மகிழ்வர். மானம், உலகம் தோன்றியது முதல் மானத்துக்காக வாழ்ந்து வரும் தமிழரின் சொல் என்க.
ஆதி
ஆதி என்பது வடசொல்லாம். அச்சொல்லும் திருவள்ளுவருக்கு தாயின் பெயராம். அந்தத் தாய்கூட ஒரு புலைச்சியாம். ஆதி வட சொல்லன்று. தூய தமிழ்ச் சொல்லே. அஃது ஆதல் எனப் பொருள்படும் தொழிற்பெயர். ஆ_முதனிலை, தி_-இறுதிநிலை செய்தி, உய்தி என்பவற்றிற் போல, ஆதி_-முதன்மை, இதை வடவர் மூலப் பிரகிருதி என்பர்.
(குயில், 24.6.58)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக