படித்தல்
கற்றல் என்ற பொருளில் படி என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் காண வியலாது என்றும், பட் என்ற வடமொழித் தாதுவின் அடியாகப் பிறந்ததே இச்சொல் என்றும் (இலக்கணச் சிந்தனைகள்) என்ற நூலின் 101ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார் திரு.எஸ். வையாபுரி பிள்ளையவர்கள்.
அன்பு சார்ந்து விளக்குக என்று அ. கணபதி (திருமதிக் குன்றம்) நமக்கு எழுதியுள்ளார்.
பண்டைத் தமிழ் நூற்களில் படித்தல் என்ற சொல் காணப்படாவிடில் அதன் பிற்காலத்தில் படித்தல் என்ற சொல் ஏற்பட்டிராதா?
பண்டைக்காலம் போனால் அதன் அண்டைக் காலத்தில், பட் என்ற வடசொல் அடியை வைத்துத்தான் தமிழறிஞர்கள் ஆக்கியிருப்பார்கள் என்பதற்கு வையாபுரிகள் என்ன ஆதாரம் காட்டுகிறார். பட் என்ற வேர்ச்சொல் இங்கு வழக்கத்தில் இல்லாததும், தமிழறிஞர்களால் அறியப்படாததும் ஆகுமன்றோ! கற்றல் என்ற வடசொல் வேரையா தேடிக் கொண்டு போயிருப்பார்கள்.
அந்நாளிலும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகள் இருந்தார்கள் என்று சொல்லவே முடியாது. புதிதாக வந்து நுழைந்து வடசொற்களைக் கையாண்ட தமிழர்கள், அந்நாளில் இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை.
கற்றல் இருக்கும்போது அதற்குப் போட்டியாக வடசொற் குறுங்காட்டில் புகுந்து பட் என்பதைத் தேடிப் பிடித்தவர்கள் அந்த நாளில் இருந்தால் அந்த நாளிலேயே தமிழ் அடியோடு மறைந்திருக்குமே?
இனி,
படி என்பதை ஆராய்வோம். படி என்றால் ஆழ்தல் என்பது பொருளன்றோ? நீரிற் படிந்தான், குளத்திற் படிந்தான் என்ற சொல்வழக்குப் பண்டைத் தமிழில் உண்டு அன்றோ?
இதனடியாகப் பண்டை காலத்தின் அண்டைக் காலத்தவர் படி என்பதன் அடியாகப் படித்தல் என்பதை வழக்கத்திற் கொண்டுவர வையாபுரிகளையா உத்தரவு கேட்க வேண்டும்? பண்டைக்காலத்தில் படிதல் இருந்திருக்கவும் இல்லை என்று சொல்லுவோன் ஆராய்ச்சி-யுள்ளவன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
படிதலும், படித்தலும் ஒன்றேயாகும் என்பதையும் நோக்குக.
இனி,
படித்தல், படிதல் கற்றலாகுமா என்று கேட்கலாம். இவ்வாறு கேட்பவர் கற்றல் என்பதன் பொருளையும் நோக்க வேண்டும். கற்றலின் முதனிலை கல். கல் என்றால் கல்லுதல் எதைக் கல்லுதல்? அறிவு என்னும் கல்லை சிரத்தையால் கல்லுதல்! அது போல் படி, அறிவு என்னும் வெள்ளத்தில் உள்ளம் படிதல் என்று இங்கு ஆவதும் காண்க.
படிதல் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருக்கையிலும், படித்தலும் இருக்கிறதா என்று கேட்பவன் தமிழறிஞனாயிருக்க முடியாது, ஆரியர் அடிவருடியாகத் தான் இருக்க முடியும். வையாபுரி எப்படி? தமிழே வடமொழியினின்று வந்தது என்ற மானமற்றவர் அன்றோ? அறிவிலி அன்றோ!
படிதல் என்பதில் படி என்ற முதனிலையும் தல் என்ற தொழிலிறுதி நிலையும் அடங்கின. படித்தல் என்பதில் படி என்பதும், த் என்பதும், தல் என்பதும் அடங்கின. த் என்பது எழுத்துப் பேறு. இடைவரும் எழுத்து என்பது தமிழிலக்கணம், படிதல் என்பதற்கும் படித்தல் என்பதற்கும் வேறுபாடு இருப்பதாக எண்ணற்க.
பண்டைய இலக்கியத்தில் காணப்படாமல் இடைக் காலத்தில் அல்லது இன்று காணப்படுகின்ற சொற்கள் அனைத்தும் வடசொற்களா? முட்டி என்ற சொல், பண்டை தமிழிலக்கியத்தில் காணப்படவில்லை. அதனால் அது முஷ்டி என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறி விடுவதா?
வேட்டி என்பது முன் இல்லை. அதனால் அது வேஷ்டி என்பதன் சிதைவு என்று சொல்லிடுவதா? முண்டு பழந்தமிழில் காணப்படுகின்றது. அது கொண்டு முட்டி பிற்காலத்தில் தோன்றியது எனில் வையாபுரிகள் மனமெரிந்து போவாரா?
வெட்டல் என்பது பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. அதனின்று வேட்டி தோன்றுவதற்கு வையாபுரியை உத்தரவு கேட்க வேண்டுமா?
இன்று வரை இருந்து வரும் தமிழ்ப்புலவர் இடையில் ஒழிந்தா போய்விட்டார்கள். தமிழறிவின் வாழையடி வாழைகட்கு வெட்டுவதினின்று வேட்டியை ஆக்கும் ஆற்றல் இல்லை எனில், மொழிவளர்க்கும் ஒரு கால இயற்கையும் செத்துப்போய் விட்டதா? வேட்டியை வேஷ்டி என்று கூறி, அதன்பிறகு வேஷ்டியின் சிதைவுதான் வேட்டி என்பது என்றும் வடவர் சார்பில் இன்று கூறப்படுவதுண்டு.
இப்படியெல்லாம் தாய்மொழிக்கு மாசுபடச் செய்து விட்டனர். வையாபுரியும், இன்று அவர் வழிபற்றி ஒழுகும் சில பாவிகளும். இதில் நமக்கு வியப்பு இல்லை. அந்தப் பாவிகளைப் பாராட்டிப் பெருமைப்படுத்தி விடவும் தமிழ் ஏடுகள், நாளிதழ்கள் இருக்கின்றன என்பதுதான் நமக்கு வியப்பை உண்டாக்குகின்றன.
எனவே படித்தல் என்பதன் அடியாகிய படி என்பது பட் என்ற வேர்ச்சொல் அன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 3, இசை: 38, 20-9-1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக