-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கன்னி
இதை வடசொல் என்று பார்ப்பனரும் அவர் அடிவருடிகளும் சொல்லுவார்கள். இது தூய தமிழ்ச் சொல்லென்றே அறியவேண்டும். கன்னி-இளமை. கன்னித்தமிழ் என்றால், இன்றும் இளமையோடு திகழும் தமிழ் என்பது பொருள்.
இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:
தொல்காப்பியம் நூன் மரபு 30-ஆம் பாட்டு.
மெய்ந்நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம்முற் றாம்வருஉம் ரழஅலங் கடையே
என்பது. இஃது என்ன சொல்லிற்றெனின் ர், ழ் என்னும் இரண்டு எழுத்துகள் தம்முன் தாம் வரும் என்றது.
இதில் ன் என்பதன் முன் ன வருவதற்கு எடுத்துக்காட்டாகக் கன்னி என்ற தூயதமிழ்ச் சொல் காட்டப்பட்டிருக்கின்றது.
காலம்
கால், காலை, காலம் ஒரு பொருட்சொற்கள். இது தூய தமிழ்ச்சொல்லே, எனினும் பார்ப்பனரும் பழிப்பனரும் இதையும் வட்சொல் என்று ஏமாற்றுவர். இதனாலன்றோ தொல்காப்பியச் சொல்லதிகார உரைகாரர் காலம் உலகம் என்ற 58 ஆம் நூற் பாவுரையில், காலம் உலகம் வடசொல்லன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணங்கூறார் என்று விழிப்பூட்டினார்.
உலகம்
இது லோகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று புகலும் பொய்யரும் உள்ளார் அன்றோ! மேலே காலம் என்பதன்கண் உரைத்த தொல்காப்பியச் செய்யுள் உரையாய் இதுவும் தமிழ்ச் சொல் என்றே வற்புறுத்தியுள்ளார். உலகம்- உலகு என்றும் வரும். உலகத்தில்- – துன்பம், –துன்பம் நிறைந்ததாதலின் உலகம் காரணப்பெயர். இவ்வாறு மறைமலையடிகளாரும் வரைந்தனர்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்ற குறளின் முதற்பாட்டில் திருவள்ளுவர் தம் பெற்றோர் நினைவாக அவர் பேர்களாகிய ஆதி பகவன் என்பனவற்றை வைத்தாராம்.
ஆதி பகவன் என்பது வடசொற்றொடர் என்று பரிமேலழகர் கதைத்ததற்குக் காரணம் கண்டு கொள்க. இன்னொரு முறையும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுகிறேன், பகவன் தூய தமிழ்ச் சொல்.
ஆகுலம்
இது வடமொழியன்று தூய தமிழ்ச் சொற்றொடர், ஆகு+உலம் எனப்பிரியும்? ஆகு-ஆகின்ற (ஒருவன் முயற்சியாலாகின்ற) உலம்- – -ஒலி. வினைத்தொகை நிலைத்தொடர். கடல் முதலியவற்றில் உண்டாகும் இயற்கை ஒலியைப் பிரிப்பதற்கு ஆகு என்ற அடை வேண்டியதாயிற்று.
உலம் என்பது உலம்பு என்றதன் கடைக்குறை என்பர். ஆகவே ஆகுலம் என்றது தூய தமிழ்ச் சொற்றொடர் என்க. வியாகூலம் என்பது போன்ற சொற்கள் வடமொழியிற் கேட்ப்படுகின்றன. ஆயினும் அவற்றிற்கும் ஆகுலம் என்பதற்கும் தொடர்பில்லை என அறிதல் வேண்டும். ஆகுலம் என்ற சொற்றொடரை வள்ளுவர் தக்க இடத்தில் வைத்து செய்யுள் செய்து காட்டியருளினார்.
மனத்துக்கண் மாசு இலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
என்பது குறள்.
மனத்துக்கண் மாசற்ற நிலையில் உண்டாகும் நினைப்பும் செயலும் அறமாகும். அல்லாதவை அனைத்தும் அறமாகா. வேறு என்ன எனின் நான் அறம் செய்தேன், நான் அறம் செய்தேன் என்று ஒலிபரப்புதலும் ஒலிபரப்பும்படி செய்தலும் ஆகிய தன்மையுடையவைகளே என்பது இதன் கருத்து. ஈண்டு ஆகுலம் என்பது இன்றியமையாத சொற்றொடர் ஆதல் கண்டு இன்புறவேண்டும்.
(குயில்: குரல்: 1, இசை: 11, 12-08-1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக