பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (வாரி)

 


பிப்ரவரி 01-15

வாரி

கம்பராமாயணத்துக்கு உரை எழுதவந்த வை.மு.கோ. தமிழ்ச் சொற்களையெல்லாம் வேண்டுமென்றே வட சொற்கள் என்று காட்டி மகிழ்பவர். அதில் வாரி என்பதும் ஒன்று. பாலகாண்டம், ஆற்றுப்படலம் 8ஆம் செய்யுள் உரையிலும் மேலும் பல இடங்களிலும் வாரி, இலக்கனையாய்க் கடலை குறித்தது. ஆதலின் அது வடசொல் என்று கூறியுள்ளார்.

வார் என்றால் தமிழில் நீருக்குப் பெயர். நீண்டு ஓடுதல் என்ற காரணப் பொருளுடையது. அதுவே வார்தல் வார்ந்தது என்றெல்லாம் வினைப்பெயர் முதனிலையாய் வரும். எனவே வார் என்ற முதனிலை தொழில் பெயருக்குப் பெருகுதல், ஒழுகுதல் என்ற பொருள் உண்டு. அந்த வார் என்பது வினைமுதற்பொருள். இறுதி நிலையாகிய இகரம் பெற்று வாரி என்றாயிற்று. வாரி என்பதற்கு நீர்ப் பெருக்கு, நீர் மட்டம், வெள்ளம் என்றெல்லாம் பொருள் பட்டுத் தமிழிலக்கியங்களில் வரும். இதுவே ஆகுபெயராய்க் கடலையும் உணர்த்தும். ஊர்வாரி நன்செய் எனப் பேச்சு வழக்கில் வருவதும் அனைவரும் அறிந்ததொன்றாம். எனவே, வாரி என்பது தூய தமிழ்க் காரணப் பெயர் என்க. இனி,

வாரிதி

வார் என்பது முதனிலை. தி தொழிற் பெயர் இறுதி நிலை. இகரம் சாரியை. ஆகவே வார்தி ஆயிற்று. இது தொழிலாகு பெயராய்க் கடலை உணர்த்தும். வாரிதி என்பதை வடமொழி என்பவர், தமிழினின்று அது எடுக்கப்பட்டது என்று உணர வேண்டும்.

வாரி என்பதற்குக் கூறியது கொண்டு வாரிதியும் தூய தமிழ்க் காரணப் பெயரே என்று கடைப்பிடிக்க.

தாமரை

இதை தாமாசம் என்ற வடசொல்லின் சிதைவு என்று தமிழர்க்குக் குல்லாய் தைப்பர். மரு என்பது தமிழில் மணத்துக்குப் பெயர். அது ஐ என்ற பெயர் இறுதி பெற்று “முற்றும் அற்று ஒரோ வழி” என்ற சட்டத்தால் மரை என்றாயிற்று. இதுவும் முதலுக்கு ஆவதால் பண்பாகு பெயர் என்பர்.

இனி, மரை என்பது தாம்பு என்பதன் கடைக்குறையான தாம் என்பதை முன்னே பெற்றுத் தாமரை ஆனது

எனவே (தாம்+மரை) தாமரை என்பது நீண்டதும் மணமுடையதுமான ஓர் கொடியின் பெயரைக் குறித்த காரணப் பெயர்.

இது தாமரை மலரைக் குறிக்கும்போது முதலாகு பெயர் ஆம். இது செம்மை அடைபெற்றுச் செந்தாமரை என்றும், வெண்மை அடைபெற்று வெண்டாமரை என்று வரும்.

தாமரை தூய தமிழ்க் காரணப்பெயர் என அறிந்து உவக்க.
(குயில்: குரல்: 1, இசை: 24, 11-11-1958)

பஞ்சம்

பஞ்சின் தன்மை பஞ்சம் ஆயிற்று, ஈறுதிரிந்த ஓர் ஆகுபெயர் என்க.

பஞ்சின் தன்மையாவது எளிமை, நிறை இல்லாமை, அதனடியாய்ப் பிறந்த பஞ்சம் என்பதும் எளிமை, நுகர்ச்சி இல்லாமை, பொருளில்லாமை எனப் பொருள்படும்.

இன்னும் பஞ்சு என்பது ஐ இறுதி பெற்று ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பாற்கும் வரும். அவன் பஞ்சை, அவள் பஞ்சை, அது பஞ்சை என. அதுவே உயர்திணை அஃறிணையாகிய பலர் பாலுக்கும், பலவின் பாலுக்கும் அர், கள் பெற்று வரும்.

அவர்_-பஞ்சையர், அவர்கள்_-பஞ்சையர்கள், அவை_-பஞ்சைகள், அவைகள்_-பஞ்சைகள் என.

அவை_-பஞ்சை எனினும் இழுக்காகாது.

பஞ்சம் என்பதைத் தமிழர் சிலர் வடசொல் என்று ஏமாற்றுகிறார்கள் என்பதறிந்து, ஐயம் நீக்குதற் பொருட்டே இவ்வாறு விளக்கப்பட்டது. பஞ்சம், பஞ்சை தூய தமிழ்ச் சொற்கள்!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-58)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக