– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் உருவ வணக்கத்திற்குரிய இடமாயிற்று என்றும் ஆராய்ந்துரைத்தார்கள் அறிஞர்கள் பலர். ஆலயம் இடம் என்ற பொருளில் இலக்கியங்களிலும் வந்துள்ளது.
……………… மழை இடிப்புண்டு ஓர் நாகம் ஆலயத்தழுங்கி யாங்கு மஞ்சரி அவல முற்றாள். (சீவக சிந்தாமணியின் 897 ஆவது பாடல்) என்று வரும் அடிகளில் ஆலயம் என்பது நாகம் தங்கும் இடம் என வந்துள்ளது. தான் விளையாடி மேனாள் இருந்ததோர் தகைநல் ஆலைத் தேன் விளையாடும் மாலை யணிந்தபொற் பீடம் சேர்த்தி யான் விளையாடும் அய்ந்தூர் அதன்புறம் ஆக்கி னானே! என்ற சிந்தாமணிச் செய்யுளையும் நோக்குக.
எனவே, ஆலயம் காரணப் பெயராகிய தூய தமிழ்ச் சொல்லே. நாகரிகம் நகர சம்பந்தம் நாகரிகம் என்று கரடி விடுவார் தமிழின் பகைவர். அன்று! நாகரிகம் தூய தமிழ்ச் சொற்றொடர் என்க, என்னை? நாகம் என்ற சொல்லுக்கு, நாகன் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பு யானை என்ற நூற்பாவினால், இத்தனை பொருள்கள் இருப்பது அறியப்படும். எனவே, நாகம் மலைக்கும் பெயர். நாகர் என்பது மலையாளிகள் என்பதாயிற்று. இனி இகத்தல் என்பது பகைத்தல் வெறுத்தல் என்பதாம். நாகரிகம் என்பது நாகர்களை _ மலையாளிகளை வெறுப்பதோர் பண்பாடு என்க. நாகரிகம் ஈறு திரிந்ததோர் ஆகுபெயர். பண்டு தீயொழுக்கத்தவரான ஆரியர் தமிழரால் புறந்தள்ளப்பட்டனர். அவ்வாரியர் மலைப்பாங்கில் ஒதுங்கி வாழ்ந்தனர். அவர் தீயொழுக்கம் தமிழர்க்குத் தீரா வெறுப்பை உண்டாக்கிற்று. தமிழரிடத்து _ ஓர் புதிய பண்பாடு தோன்றியது. நாகரை _ நாகரின் தீயொழுக்கத்தை வெறுப்பதென்று அன்று தோன்றியதே நாகரிகம் என்பது. ஆதலின் நாகரிகம் காரணம் பற்றி வந்த செந்தமிழ்ச் செல்வமே என்க. (குயில், 08.07.1958) வேட்டி! இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பனர் அடியாரும் பகர்வர்.
வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப்பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப் படுதலின் துணி என்றும், துண்டிக்கப் படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத் தக்கதாகும். முட்டி இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.
(குயில், 15-07-1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக