பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (பகவன்)

 


ஜுன் 01-15

ஊன்றிப் படித்து உண்மையை உணருக!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

பகவன்

பகவான் என்று வடவர் சொல்லுகிறார்களே அதுதானாம் இது. இது கலப்பில்லாத முட்டாள்தனமான பேச்சு. பகல் என்பதும் பகவு என்பதும் ஒரே பொருளைய சொற்கள். பகல் என்பதில் பகு முதனிலை. பகவன் என்பதில் பகவு முதனிலை. பகல் என்பதற்கும் பகவு என்பதற்கும் நடுவுநிலை. அறிவு என்பன பொருள்கள்.

பகவு என்பதற்கு பாவேந்தர்கள் அன் இறுதிநிலை சேர்த்துப் பகவன் என்று சிறப்புறுத்துவார்கள். எனவே பகவு, பகவன் இவைகட்கு அறிவு, அறிவன் என்பன பொருள். பகவன் தூய தமிழ்ச்சொல். பகவன் வடசொல்லாம், அது திருவள்ளுவரின் தந்தையின் பெயராம். அந்த பகவனும் பார்ப்பனனாம். ஆதியும் பகவனும், புலைச்சியும் பார்ப்பனனுமாம். திருவள்ளுவர் பேரறிஞராகத் திகழக் காரணம் அவர் பகவன் என்னும் பார்ப்பனனுக்குப் பிறந்ததாகும். இப்படி அந்தப் பாவிகள் ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார்கள்.
(குயில், 24.6.58)

சலம்

ஜலம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள் கலகக்காரர்கள்.

சலம் என்பது காரணம் பற்றிவந்த தூய தமிழ்ச் சொல். சல, சல என்று இயங்குவது காரணமாக தண்ணீர் சலம் என்று பெயர் பெற்றது. இவ்வாறு மறைமலையடிகளும் கூறியருளினார். இதைப் பார்ப்பனர் ஜலம் என்கிறார்கள் அல்லவா? நாத்திருந்தாமை அவர் கொண்ட குற்றம். அதனால் சலம் அவர் மொழியாகிவிட்டது.
(குயில், 1.7.58)
உவமை

உவமை என்பது உபமானம் என்பதன் சிதைவாம். இவ்வாறு மொட்டைத் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிபோடுவர் பார்ப்பனரும், அவர் அடியாரும். பொருள் நிலை உணர்வித்து உவப்புறச் செய்வது உவமை. உவத்தல், உவமை ஒரு பொருட் சொற்கள். தாமரை மலர் முகம் என்பதில் தாமரை மலர் உவமை முகம் உவமை ஏற்கும் பொருள். இவ்வாறு கூறாமல் முகம் என்று மட்டும் சொன்னால் முகம் என்ற பொருளின் நிலையை நன்கு உணரச் செய்ததாகாது என்பதை நோக்குக. உவப்புறச் செய்வது உவமை எனின் இச்சொல் காரணப் பெயராதலும் அறிக. எனவே, உவமை செந்தமிழ்ச் செல்வமே என்க.

அமிழ்து

இது குன்று, குன்றம் என அம் சாரியை பெற்றது போல், அமிழ்தம் என்றும் வரும். அன்றியும் அமுதம் அமுது என்றும் மருவி வழங்கும். இதை பார்ப்பனரும் அவர்களின் அடியார்க்கடியாரும் அம்ருதம் என்னும் வடசொற் சிதைவு என்று கதைப்பர். அது கான்றுமிழத் தக்கதோர் கதை என்க. அமிழ்து என்பது அமிழ்+து எனப்பிரியும். இதன் பொருள் மேலிருந்து அமிழ்கின்ற உணவு என்பது மழைக்குப் பெயர். அமிழ்+து வினைத்தொகை நிலைத் தொடர். அமிழ்து மழைக்குப் பெயர் என்பதென்ன? மழையானது வாழ்வார்க்குப் பயன்படும் வகையில், வளவயல் வறளாது உயிர் மருந்தாய்ப் பெய்யும் நிலையில் அமுது எனப்படும். மேலிருந்து அமிழும் உணவும் என்றும் இத்தொடரின் பொருள் கண்டு இன்புறுக. து_-உணவு. இதனாற்றான் வள்ளுவரும்,
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
என்று குறித்தார். எனவே அமிழ்து, அமிழ்தம், அமுதம், அமுது என்பன அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்க.

மழை என்று தோன்றிற்று. அன்று தோன்றிற்று அதன் பெயராகிய அமிழ்து என்பது. அதன்பின் அதாவது கிரேதாயுகத்தில் பாற்கடல் கடைந்ததில் வந்ததாக உள்ள பொய்க்கதையில் வந்துள்ளது அம்ருதம் என்ற சொல். இதனால் அமிழ்தை அம்ருதம் என்று எடுத்தாண்டனர் வடவர் என்று தெளிதல் வேண்டும்.

(குயில், 08.07.1958)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக