மார்ச் 16-31

கண்டம்

இது வடசொல் என்கின்றனர் வட மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள். வடமொழி பற்றுள்ளவர்களும் அப்படி. இடைக்காலப் புலவர்களும் இதை வட சொல்லென்றே வைத்துச் செய்யுள் செய்தார்கள். இனிக் கண்டம் என்பதைக் கண்டோம் என்று உச்சரிப்பதுதான் நாகரிகம் என்று எண்ணி அவ்வாறு சொல்லுகின்றார்கள் சிலர் இந்தத் திக்கில்லாத தமிழகத்தில்.

கண் என்பதின் பொருள் என்ன? இதை அணுகி ஆராய்தல் வேண்டும். கண் என்பதன் பொருள் இடம் என்று சிலர் பொருள் சொல்லி விடுகிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் மட்டும் போதாது. கண் பொதுவிடத்தை நீக்கிய சிறப்பிடம் என்று பொருள் காணவேண்டும்.

இது விழியைக் குறிக்கும்போது உடம்பாகிய பொதுவிடத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய விழியைக் குறிப்பது காண்க.

கண் என்பது பொது நீக்கிச் சிறப்பைக் குறிப்பதால், அது பொதுவிடத்தை விடக் கவர்ச்சியுள்ளதாக- சிறப்பிடமாகக் கண்ணை வுணர்த்திற்று. கண் எங்கு வந்தாலும் அது கவர்ச்சிப் பொருளைக் குறிப்பதாகும்.

கண் என்பதன் அடியாகக் கண, கண, கணீர், கண் என்று ஒலித்தது என்பன வரும். பொதுவிடமாகிய ஒலியினத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய ஒலியில் கண, கண என்பன முதலியவைகளைக் குறித்தது காண்க.

கண் என்பதன் அடியாகக் கணம் வரும் பொதுவாகிய நேரத்தை நீக்கிக் கைந்நொடிப் போதைக் குறித்தது காண்க. கணிதம், கண்ணல் அனைத்தும் அவ்வாறே. கண் என்பது கண்டு எனத் திரிந்து வரும். வேர்ச் சொல் கண் என்பதுதான். கண்டு என்றால் என்ன? தளை நூலாகிய பொது இடத்தை நீக்கி நாணற் குழலின்மேல் சுற்றப்படும் சிறப்பிடத்தைக் குறிப்பது காண்க. கண்டு-நூல் சுற்றப் பெற்ற நாணற் குழை, இதைத் தார் என்றும் சொல்லுவர்.

இனி, கண்டு உடலாகிய பொதுவிடத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய கழுத்தைக் குறித்தது காண்க.
கண்டு-_கழுத்து, “நஞ்சுண்டு கறுத்த கண்டி” (சிலம்பு: வேட்டுவ வரி) என்பதில் கண்டு என்பதை அதாவது கழுத்துடையவள் கண்டி, இதில் இ பெண்பால் இறுதிநிலை.

இனி, இக் கண்டு என்பது கண்டம் என அம் சாரியை பெற்று வரும். மன்று_-மன்றம், கூற்று_-கூற்றம். -வேடு_வேட்டம் என்பவற்றிற் போல.

இனியும் கண்டம் துணிக்கைக்குப் பெயர். மரத்துணிக்கையில் வைத்து நோக்குக. பொதுவிடமாகிய மரத்தை நீக்கிச் சிறப்பிடமாகிய துண்டத்தை, துணிக்கையை கண்டத்தைக் குறிப்பது காண்க.

கண்டம் என்பதை அடியாகக் கொண்டு, கண்டித்தான் முதலிய வினைகள் தோன்றும் அங்கும் அப் பொருளே காண்க.

எனவே,

கண்டம், கழுத்து, துண்டம், நூற்கண்டு, பெருநிலம் பரப்பு முதலியவற்றைக் குறிக்கையில் அது தூய தமிழ்க் காரணப் பெயரே ஆதல் மறுக்கக் கூடியதன்று.

கண்டம்: நம் செந்தமிழ்ச் செல்வம்.

(குயில்: குரல்: 2, இசை: 29, 2-2-1960)

இலேசு

லேசு தமிழினின்று வந்ததல்லவாம் _ வேறு எதிலிருந்து குதித்து விட்டதோ தெரியவில்லை. இலது என்ற தமிழ்ச் சொல்லாகிய குறிப்பு வினைப் பெயர் தெலுங்கரால் லேது என்று அழைக்கப்படுதல் காணுகின்றோம்.

இலது_-இல்லாதது, சிறியது.

இது போலவே அரிது_-அரு¬மாக வழங்குவது, இல்லாதது என்று வழங்குவது காண்க.

இந்த இலது தெலுங்கில் லேது என்றும், வடமொழியில் லேசு என்றும் வழங்கும்.

எனவே இலேசு, இலது என்பதன் திரிபுதானே. இலேசு தமிழ்க் காரணப் பெயர் என்க.
(குயில்: குரல்: 2, இசை: 30-31, 16-2-1960)