பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (தேவர்)

 


மே 01-15

தேவர்

இது வடசொல் அன்று. தெவ்வுப் பகையாகும் என்ற (தொல். உரி. 349) செய்யுளால் தெவ் என்பது பகை என்ற பொருளுடையது என்பதை அறிக! தெவ் என்பது முதனீண்டு அர் இறுதிநிலை பெற்றது. எனவே தேவர் எனில் பகைவர் என்பதே பொருள். தெவ் என்பதே தே என்றும் தேவு என்றும் வருவதுண்டு. தேவன் என்பது ஆண்பால் ஒருமை, இதன் பெண்பாலே தேவி என்க. தேவி என்பது கூட வடமொழியென்றே ஏமாற்றுவர். தே என்பது அப்படித்தானாம்!

தேவன் பகைவனா- – தேவர் பகைவரா என்ற வினாவுக்கு விடை காண்போம்.

அறிவு நிரம்பாத நாளில் மழையையும், வெயிலையும், காட்டாற்றையும், காட்டு கனலையும் தெவ் என்றும் தெய் என்றும் நேரிட்டு அழைத்தான் தமிழன். அறிவு பெற்ற நிலையில் அவற்றின் அருமை தெரிந்து அதனை வாழ்த்தலானான். தெய் என்றும் தெவ் என்றும் கூறி வெறுத்த செங்கதிரையும், திங்களையும் செங்கதிர் போற்றுதம், திங்களைப் போற்றுதும் என்றெல்லாம் கூறியது கேட்டோமன்றோ தெவ் என்பதன் அடியாகப் பிறந்த தேவன், தேவர், தே, தேவு என்பன கண்ணையும் மனத்தையும் கவர்வனவற்றையும் பயன்படு பொருள்களையும் குறிப்பனவே என அறிவோம். எனவே, இது தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 1, இசை: 35, 3-2-59)

அவி

அவிதல், அவியல் என்பனவற்றின் முதனிலைத் தொழிற் பெயரே அவி என்பது. வேவுதல் என்பது இதன் பொருள்.

இனி, அவி என்பது தொழிலாகுபெயர். வேவுதல் உடைய ஒரு பொருளைக் குறித்தது. அந்த வேவற்பொருள் எது? தேவர் உணவு என்று மழுப்பற் பொருள் கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆரியச் சார்பினர். ஆடுமாடுகளின் ஊன் என்றும், நிணம் என்றும் வெளிப்படையாகவே கூறுவார்கள்?

“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற குறட்பாவுக்குப் பொருள் கூற வந்த பரிமேலழகர், அவி என்பதற்கு நெய் முதலியவைகள் என்று கூறி மழுப்புகின்றார். கொலை வேள்வியும், தம் இனத்தார்க்கு உள்ள புலால் வெறியும் பரிமேலழகர்க்கே நாணத்தை உண்டாக்குகின்றன. வெளிப்படைப் பொருளை அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்!

கா. சுப்பிரமணியனார் (எம்.எல். பிள்ளை) திருக்குறள்- – –பொழிப்புரையுள் அவி என்பதற்கு ஊன் என்றே பொருள் கூறியருளியுள்ளார்.

ஆட்டைப் பல பார்ப்பனர் அமிழ்த்திப் பிடித்துக் கொள்வார்கள். அதன் விதையைப் பிசைந்து உயிர் போக்குவார்கள். மற்றும் சில கொலைகாரப் பார்ப்பன பசங்கள் எதிரில் உள்ள தீயில் அதை எடுத்துப் போடுவார்கள். அந்த ஆட்டின் நிணமே- – -கொழுப்பே அத் தீயை மூண்டெழச் செய்கின்றது. அந்த நிணத்திலேயே அந்த ஆட்டுடல் வேகுகின்றது. இந்தத் திருப்பணியில் பெரிதாக எண்ணப்படுவன இவ் விரண்டுமே! ஒன்று தீ எரியச் செய்கின்றது நிணம். கறியை வேகச் செய்கின்றது நிணம் என்பது மற்றொன்று. இவைகளைக் கருதித்தான் அவி “சொரிந்து” என்றார் வள்ளுவர்.

இனி, அவி என்ற சொல்லை வடமொழி நூற்களிற் கண்ட சில தமிழ் விபூடணர், இது வடமொழிச் சிதைவென்று கூறி மானமிழப்பர். தமிழ் நூலில், தமிழ் நாட்டில் அவி எனக் காணும் தமிழர்

தமிழிலக்கணத்தால்-தமிழ்மனத்தால் அச் சொல்லை நோக்க வேண்டுமேயன்றி ஆரியமனத்தினின்று நோக்குவது என்ன காலக்கோளாறோ நாம் அறியோம். எனவே, அவி தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 37, 17-2-59)

வாவி

இது வாபீ என்ற வடசொல் என்று கூறுவர். ஏமாறுகின்றவர் இருக்கும் வரை ஏமாற்றுகின்றவர் இருப்பர்.

வாவுதல் – –பரவுதல், தேங்குதல் என்று, வாவுதலையுடையது வாவி.
எனவே, வாவி தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 40, 10-3-1959)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக