ஊன்றிப் படிக்க! உண்மையை உணருக!
வந்தவர் மொழியா?
செந்தமிழ்ச் செல்வமா?
கணம்
இயல்பாக ஒருவன் கண் இமைக்கும் நேரத்திற்குப் பெயர். இச்சொல் கண் என்பதிலிருந்து பிறந்தது. கண் அம் கணம் ஆகி, அது கண்ணிமைக்கும் நேரத்திற்கானதை ஈறு திரிந்தோர் ஆகு பெயர் என்பர்.
இவ்வாறு கண் என்பது அம் பெறாமலே கண்ணிமைப்போது என்ற பொருள் தருவதும் உண்டு.
கயற்கணின் அளவும் கொள்ளார்
(சீவக சிந்தாமணி 1393)
என்று வந்துள்ளதும் கருதத்தக்கது. எனவே கணம் வந்தவர் சொல்லன்று. செந்தமிழ்ச் செல்வமே என்று கொள்க. இதைப் பார்ப்பனர் க்ஷணம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறுவார்கள். கணமும் க்ஷணமும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. கணம் என்ற தமிழ்ச் சொல் பழந்தமிழ் நூல்களில் நாம் எடுத்துக் காட்டியுள்ளவாறு காரணப் பெயராய் வந்துள்ளது. இந்நிலையில் நாம் அறிய வேண்டியது என்னவெனில், வந்தவர் நம் தமிழாகிய கணத்தை க்ஷணம் என்று தம் வாய்க்கு வந்தவாறு சொல்லிக்-கொண்டார்கள் என்பதே.
தானம்
தன்மை என்பது மைஈற்றுப் பண்புப்பெயர் ஆகும். மை ஈற்றுப் பண்புப் பெயர்கள் அனைத்தும் பல மாறுதல்களை அடையும்.
ஈறு போதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடி அகரம் ஐயாதல்
தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இணையவும் பண்புக்கியல்பே
என்ற நன்னூற் பாட்டினால் இன்னின்ன மாறுதல் அடையும் என்பது அறிக. மேற்சொன்ன தன்மை என்ற பண்புப் பெயர் ஈறுபோதல் என்ற சட்டத்தால் மை கெட்டுத் தன் என நின்றது. அந்தத் தன் என்பது ஆதி நீடல் என்ற சட்டத்தால் தான் என நீண்டு நின்றது. அந்தத் தான் என்பது அம் என்ற பண்புப் பெயர் இறுதிநிலை பெற்றுத் தானம் ஆயிற்று. தானம் என்பதன் பொருள் தன்மை, உயர்வு என்பன. எனவே, தானம் என்பது கொடைத்தன்மை என்று உணர்தல் வேண்டும்.
தானம் என்பது ஈண்டுக் காட்டிய பொருளில் அமைந்து இருப்பதை அடியில் வரும் சிந்தாமணிச் (2924) செய்யுளாலும் அறியலாம்.
கருங்கடற் பிறப்பின் அல்லால்
வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றும் தோன்றா
பிறை நுதல் பிணையினீரே.
அருங் கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம்
தெரியின் மண்மேல்
மருங் குடை யவர்கட் கல்லால்
மற்றையவர்க் காவ துண்டோ.
இச் செய்யுளில் வந்துள்ள அருங்கொடைத் தானம் என்ற தொடர் மேலே நாம் காட்டிய வண்ணம் தானம் என்பது தன்மை என்று பொருள்படுவது காண்க.
எனவே, தானம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் அன்றோ? இதைப் பார்ப்பனர் வடமொழிச் சொல் என்று கயிறு திரிப்பர். தானம் என்ற சொல் வடவர் இலக்கியத்திலும் இருக்கின்றதே எனில், ஆம், வந்தேறிகளாகிய வடவர் தமிழினின்று எடுத்துக் கொண்டார்கள் என்றோ அறிய வேண்டும்.
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
(குயில், 1.6.1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக