பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (காரணம்)

 

 -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

அக்டோபர் 16-31

காரணம்

இது தமிழ்ச் சொற்றொடர்.

கருமை+அணம் = காரணம் ஆயிற்று. மையீறு போதலும் ருகரத்தின் மேலுள்ள உகரம் போதலும், முதல் நீளலும் தமிழிலக்கணச் சட்டம்.

எனவே, கார்+அணம் = காரணம் ஆயிற்று. கருமையின் வேற்றுமையான் உற்ற கார் என்பதற்குப் பொருள் முதன்மை. அணம் அணுகுவது —-அஃதாவது நெருங்குவது, முதன்மையை நெருங்குவது என்ற பொருளில் அமைந்ததாகும்.

காரியம்

கார்+இயம் = காரியம். கார் முதன்மை. இயன்றது என்பது இயம் என வேறுபடுத்தும் காரணத்தால் இயன்றது காரியம் என்க. காரணமே காரியம் என்னும் கபிலர் எண்ணூலையும் எண்ணுக.

காரியம் தூயதமிழ்ச் சொற்றொடர். காரணம் காரியம் இரண்டையும் வட மொழியாளர்கள் எடுத்தாண்டார்கள் வேற்றுமையின்மையால்.

கடிகை

இது கடிகா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு கூறுவார் பார்ப்பனரும் ஏய்ப்பனரும். கடி, என்பதற்கு எத்தனை பொருள்கள் உண்டு?

கடி—வியப்பு, அளர், அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர்கலம், இன்பம், சினம், ஐயம், ஒளிக்கை ஒளி, ஓசை கடிதமும், கரிப்பு, திருமணம், களிப்பு. கால நுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சீறல், சிறுகொடி, விரைவு, ஓசை, பூங்கா, நீக்கம், பேய், பிணம், புணர்ப்பு, புதுமை, பொழுது, மிகுதி, மணம், விளக்கம்.

இங்குக் கடி என்பது கால நுட்பத்துக்கானது. கடி வினைத்தன்மை யடைந்து தொழிற்பெயர் இறுதி நிலை பெற்றது. நாழிகை என்பது பொருள். எனவே கடிகை வடசொல் என்பது கரடி. அது தூய தமிழ்ச் சொல்லே.

கடிகாரம்

இது கடிகார யந்திரம் என்பதின் திரிபென்று கதைப்பர். கடிகை ஆர்வது _- காட்டுவது – ஈற்று திரிவுற்றது. எனவே கடிகாரம் தூய தமிழ்ச் சொல்லே.

கற்பனை

இது கல்பனா என்ற வடசொல்லின் சிதைவு என்பார் வடவர். ஆம் என்பார் தமிழறியாத தமிழர் சிலர்.

கற்பனை கல்பனாவின் சிதைவு என்பவர், கற்பனையை வில்பனா என்பதன் சிதைவு என்பார் போலும். நகைப்புக் கிடமாகிறது.

கல்+பு = கற்பு. அனைத்துமோர் முதல்சிலை என்க. இது கற்பனையின் முதனிலையாயிற்று.

கற்பு+அன்+ஐ = கற்பனை என்க. அன் சாரியை, தொழிற்பெயர் இறுதி நிலை.

முதனிலையாகிய கற்பு என்பதன் பொருள் தோண்டுதல் என்பது. ஆகுபெயராய் தோண்டுதலின் பயன், எண்ணத்தின் ஊற்று, புதுப்புது கருத்துக்கள் என்க. எனவே கற்பனை தூய தமிழ்ச்சொல் என்பது வெட்ட வெளிச்சம்.

கல்பனா என்பதொரு சொல் வடமொழியில் இருக்கலாம். அது தமிழில் கற்பனை என்றுதான் திரிக்கப்படும். திரிக்கப்படவே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வடவர் சொல்லும் கற்பனைக்கும், தமிழர் சொல்லும் கற்பனைக்கும் தொடர்பில்லை என்பதாகும்.

அன்றித் தமிழின் கற்பனையையே வடவர் எடுத்தாண்டார்கள். எனினும் பொருந்துவதே. இந்த உலகில் சமஸ்கிருதம். தமிழுக்குப் பிந்தியது என்பதும், சமஸ்கிருதக்காரர் தமிழுக்குப் பிந்திய நாகரிகம் உடையவர்கள் என்பதும் மறத்தற்குரியன அல்ல.

வடிவு

இது அம் சாரியை பெற்று வடிவம் என்றும் வரும். இச்சொல் வடசொல் என்று ஏமாற்றுவர், ஏமாறற்க.

வார்ப்படக்காரர் தொழிலிடத்தினின்று தோன்றிய பெயர்களில் ஒன்று. வடி+வு = வடிவு. தொழிற்பெயர். தொழிலாகுபெயராக வடிவு செய்தலால் வரும் வடிவத்துக் காயிற்று. செம்பு முதலியவைகளைக் காய்ச்சி அச்சில் கசடு நீங்க வடித்தூற்றலின் ஆகும் வடிவம் எனக் காரணப் பெயராதல் காண்க. வார்ப்படம் என்பதும் இதே பொருளில் அமைந்த காரணப் பெயரே என ஒப்பு நோக்கித் தெளிக!

(குயில்: குரல்:  1, இசை 14, 02.09.58,  இசை 15, 09-09-58)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக