பக்கங்கள்

திங்கள், 21 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?(சாரம்)

 


 

 

சாரம்

சார்தல், சார்கை, சாருதல், சாரம் அனைத்தும் ஒரே பொருள் உள்ள தொழிற் பெயர்கள். சார்+அம். அம் தொழிற்பெயர் இறுதிநிலை.

சாரம் ஒன்றைச் சார்ந்தது. சார்வது, ஒன்றை வடித்ததும் சாரம் எனப்படும். ஒன்றைச் சார்ந்து நிற்பதும் சாரம் எனப்படும். சுக்குநீர்ச் சாரம் என்பதில் சக்கை போகச்  சார்ந்து மிகுந்தது எனப் பொருள் படுதல் காண்க. நூற்சாரம் என்பதில் நூலின் இன்றியமையாக் கருத்தை வடித்தும், வேண்டாக் கருத்துக்களை விடுத்தும் காண்க! மற்றும் கட்டுச் சுவர் எழும் வரைக்கும் அதைச் சார்ந்து நிற்கும் சாரக்கட்டை உணர்த்தலும் காண்க. மேற்காட்டிய பொருளில் சாரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயரே என்க.

சுரம்

சுரம் என்ற ஒலி வடமொழியிலும் இருக்கலாம். அதற்கும் தமிழ்ச் சுரத்திற்கும் தொடர்பே இல்லை.

சுரம் என்பது வடமொழி அன்று என்றும், அது தமிழ்ச் சொல்லே என்றும் துணிக.

சுர் என்பது விரைவையும் ஒலியையும் குறிக்க வருவதோர் குறிப்பிடைச் சொல்.-இதனால் அது தீய சுவையின் தாக்குதலையும், தீய ஒளியின், தீய ஊற்றின், தீய ஓசை தீய நாற்றம் இவற்றின் தாக்குதலையும் குறிப்பதாயிற்று. சுர் என்பது அம் சாரியை பெற்றுச் சுரம் ஆனது. அருநெறி, கள், காடு, காய்ச்சல், பாலை நிலம், நெடுவழி இவற்றைக் குறிக்கத் தமிழில் சுரல் என்றால், பிழையாகாது. அது வடசொல்லன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். இதை சுவரம் என்று கூறிக் காய்ச்சலைக் குறிப்பவர் பிழை செய்தவராவார்கள். காய்ச்சலைக் குறிக்கும் போதும் சுரம் தூய தமிழ்க் காரணப் பெயர்.

ஆனால், சுவரம் என்றதோர் வடமொழி உண்டு. அதற்கும் சுரம் என்பதற்கும் தொடர்பே இல்லை. சுவரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு இசை என்பது பொருள்.

(குயில்: குரல்: 2, இசை: 14, 13-10-1959)

விகுதி

இது விகுரிது என்ற வடசொல்லின் சிதைவென்று வட சொல்காரர் சொல்லி ஏமாற்றுவர். தமிழரும் ஆராய்ச்சி இல்லாமையானும், கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பனரைப் பின்பற்றுவதோர் நோயுடைமையானும் ஏமாறுவர். விகுதல், விகல், விக்கல், விக்குள், விகுதி அனைத்தும் இறுதிநிலை வேறுபடினும் ஒரே பொருளைத் தரும் தொழிற் பெயர்கள். உள்நின்ற புனலின் அளவு இறுதிபடுதலே விக்குள் ஆம். அதே பொருளுடையனவே பிறவுமாம். விகுதி- – விகு முதனிலை திரிந்த தொழிற் பெயர் இறுதிநிலை என உணர்க.

எனவே, விகுதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.

(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)

காந்தி

இது வட சொல்லே என்று வடவர் கூறினாலும் தமிழுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. காந்துதல், காந்தல், காந்தி அனைத்தும் ஒளிபடுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயர்கள். எனவே, காந்தி ஒளி செய்தல் என்ற பொருள்படும் தூய தமிழ்க் காரணப் பெயரேயாகும். இது ஒரு பொருளுக்கு ஆகும்போது ஆகுபெயராம்.

காந்தி என்ற சொல் வடமொழியில் இருக்கலாம். அது இதுவல்ல.

(குயில்: குரல்: 2, இசை: 20, 24-11-1959)

திசை, திக்கு

இவை திகழ்ச்சி என்பதன் அடியாகப் பிறந்த திகை என்பதன் திரிபுகள் திகை- – திசை.

திசை, திக்கு ஆகிய இரண்டும் வடசொற்கள் என்பர் திசை தெரியாது திக்கற்றுத் திரிந்த ஆரியர்.

(குயில்: குரல்: 2, இசை: 23, 15-12-1959)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக