பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (மனிதர்)

 

ஏப்ரல் 16-30

மனிதர்

இது மனுஷ்யர் என்பதன் திரிபாம். மனு என்பவரின் வழிவந்த காரணத்தால் அப்பெயர் வந்ததாம் எனப் பலவாறு கூறி இடர்படுவார். மனு தோன்றுவதற்கு முன்னும் மன், மன்னுதல், மனம், மானம் என்று வேரும் வினையும் இருந்தன, என்று தோன்றுகின்றது. ஆரிய மறை தோன்று முன், மனு என்ற சொல் இல்லை என்பதால், தமிழன் மன் என்பதை வைத்தே மனுச்சொல் ஆக்கப்பட்டது எனல் வேண்டும்.

மனிதன், மனுசன், மானுயன், மானிடன், மனித்தன் அனைத்தும் மன் என்பதன் அடியாகப் பிறந்தனவே யாகும்.

மன் என்பதற்கு, நிலைதல், உயர்வு என்பன பொருள். மனிதன் மற்ற விலங்கு பறவை முதலியவற்றினும் உயர்வுடையவன் என்பதன் காரணத்தால், மனிதன் எனப்பட்டான்.

மன் முதனிலை, ‘இ’ சாரியை. ‘த’ எழுத்துபேறு. அன் ஆண்பாற் பெயர் இறுதி நிலை என்பது உறுப்பிலக்கணம்.

(குயில்: குரல்: 1, இசை: 32, 6-11-959)

விருத்தம்

இதையும் வடமொழி என்றே பேசியும் எழுதியும் வருகின்றார்கள் வடமொழிக்காரர்கள்.
புதுமை என்ற பொருளுடைய விருந்து விருத்து என இடை த், ந் என வலிந்து, அம் சாரியை பெற்று விருத்தம் ஆயிற்று.

சங்க காலத்தில் விருத்தம் இருந்ததில்லை. அதன்பின் புதிதாக வந்ததால் விருத்தம் எனப்பட்டது.
எனவே விருத்தம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.

தூது

இது வடசொல்லா என்று கேட்டு அஞ்சல் எழுதியுள்ளார் ஒரு தோழர்.

தூவல், தூதல், தூது இவையனைத்தும் ‘தூ’ என்ற முதனிலையுடைய தொழிற்பெயர்களே. முறையே இவற்றில் உள்ள அல், தல், து ஆகியவை தொழிற் பெயர் இறுதி நிலைகளே

தூது எனில் பொருள்? ஒருபாற் கருத்தை மற்றொரு பால், சென்று தூவுவது என்பதே.

இது ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தூதன், தூதுவன் எனவரும். அம் சாரியைப் பெற்றுத் தூதம் எனவும் வருவதுண்டு. தூதி பெண்பால். எனவே தூது தூய தமிழ்க் காரணப் பெயர்.

சுவர்க்கம்

இது துறக்கம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர்ச் சொல்லின் சிதைவு. அவ்வாறு வடவர் சிதைத்து எடுத்தாண்டார்கள். நம் பழந்தமிழ் இலக்கியத்தினின்று.

துறக்கம் – –விட்டநிலை, உள்ளத்தின் நிலை, ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள். எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம். பரனை நினைத்த இம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு, என்ற நம் ஔவை மூதாட்டியார் அருளிய செய்யுட் பொருளை உற்றுக் காண்க. குடும்பத் தொல்லையைத் துறந்த உள்ளப் பாங்கே துறக்கம் என்றான் தமிழன். இந்திரன் முதலியவர்க்குக் கள்ளையும், ஆட்டையும், மாட்டையும் கொடுத்துப் பெறுவதோர் மேலுலகம் என்றும் அதைச் செத்த பிறகே அடைய முடியும் என்றும் ஆரியர் புரட்டை ஒத்துக் கொள்ளாதவன் தமிழன்.

இன்னும் அறிய வேண்டுவது, அதாவது நினைவில் வைக்க வேண்டியது, தமிழன் இந் நாட்டில் என்றும் உள்ளவன். அவன் அன்றே நன்று வாழ்ந்தவன். ஆரியன் தமிழினிடத்தினின்றே பிச்சை எடுத்திருக்க வேண்டும்.

ஏன் இதை இவ்வளவாய் விடுத்தோம் எனின், கம்பராமாயணத்துக்குப் பொருள் கூற வந்த ஒரு பார்ப்பனப் பேதை, துறக்கம் சுவர்க்கம் என்ற வடசொல்லின் சிதைவு என்றாள். பொந்து தேடி ஓடிவந்த ஆரியக் குரங்கு பொன்னாடை கட்டி வந்தது என்பதை நிகர்க்கும் இது.

(குயில்: குரல்: 1, இசை: 34, 27-1-1959)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக