சொந்தம்
இது வடசொல் அன்று. தொன்மை, தொன்று தொட்டு, தொந்து, தொந்தம், அனைத்தும் ஒரு பொருள் உடைய சொற்கள். தொன்மை-யினின்றே மற்றவை தோன்றின! தொந்தம் என்பது சொந்தம் என்று மருவிற்று. தகரம், சகரமாதல் தமிழியற்கையே யாகும்.
பழமை என்பதற்குச் சொந்தம் என்ற பொருள் உண்டா எனில் ஆம், ஒருவனிடத்தில் ஒரு பொருள் பழமை தொட்டு இருந்தது எனில் அது அவனுக்கு உரியது ஆயிற்றன்றோ!
ஆதலின் சொந்தம் தமிழ்ச் சொல்லே என உணர்க!
(குயில்: குரல்: 2, இசை: 24, 22.12.1959)
அனுப்புதல்
இதில் உள்ள வேர்ச் சொல்லாகிய அனு என்பது வடமொழியா என்று புலவர் ப. முத்து கேட்கின்றார்.
அது வடசொல் அன்று, தூயத் தமிழ்ச் சொல்லே, விளக்கம் கீழ் வருமாறு:
ஒருவனிடம் ஒரு வேலைக்காரன் இருக்கிறான். மற்றொருவன் அவனுக்குச் செய்தி அனுப்பு என்று சொல்கிறான். அப்படி என்றால் என்ன பொருள்.
நீ கொண்டிருக்கும் வேலைக்காரனை அன்மையாக்கு அதாவது அவனை இழந்துவிடு என்பதேயாகும்.
ஒருவனிடமுள்ள ஆயிரம் வெள்ளியை அனுப்புக என்று மற்றொருவன் சொன்னால் அதன் பொருள் என்ன?
நீ கொண்டிருக்கும் ஆயிரத்தை (என்னிடம் சேர்ப்பதன் மூலம்) வெறுமையாகிவிடு, ஆயிரத்தை உள்ளவனாய் இராதே அல்லவனாய் விடு என்பதேயாகும்.
இவ்வாறு அனுப்புதல் என்பதன் பொருளை அறிந்தால், அனு என்பதைத் தெரிந்து கொள்வது முடியும்.
அன்மை என்பதன் மை கெட்டு மேலும் அடைந்த திரிபே அனு. அனுவும் ப் என்ற எழுத்துப் பேறும் மற்றும் ப் என்ற இணைப்பும், உ என்ற சாரியையும் ஆக அனைத்துமோர் முதனிலையே அனுப்பு என்பது.
அனுப்பு என்ற முதனிலை ‘தல்’ என்ற தொழிற்பெயரின் இறுதிநிலை பெற்று அனுப்புதல் என்றாயிற்று. அனு_-அன்மை, இளமை_-இல்லாமை.
எனவே அனுப்பு என்பதிலுள்ள அனு வடசொல்லன்று. தூயத் தமிழ்ச் சொல்லே என்பது பெற்றாம்.
அனுபோகம்
இது அநுபவம் என்ற வடசொற்றிரவு என்று கூறுவார் கூற்று அறியார் கூற்றே.
அனு அன்மையின் திரிபு. போகம், போதல் போ+கு+அம், முதனிலை இறுதிநிலை இடையில் சாரியையும் என உணர்க.
அனுபோகம் அன்மை அதாவது ஒன்றை உடையவனாயிருந்த நிலை ஒழிந்தது.
அனுபோகம்_-இல்லாமை தீர்ந்தது, ஒன்றின் மேல் ஏற்பட்ட நிலை.
ஆதலின் இது தூயத் தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க.
உச்சரித்தல்
இதை வடசொல் என்று (வடவர்) பார்ப்பனர் சொல்லுகின்றார்கள். ஆதலால் இது பற்றியும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
உம்+உந்து+உத்து+உச்சு, உச்சு உத்து என்பதன் போல!
உச்சு+அரித்தல்=உச்சரித்தல் அள அரி எனத் திரிந்து தல் இறுதிநிலை பெற்றது.
உச்சரித்தல் என்பதன் பொருள் எழுத்தொலியை வெளியிற் செலுத்துதல். மேலே உம், உந்து, உத்து உச்சு பொருளில் மாற்றமில்லை.
எனவே உச்சரித்தல் தூயத் தமிழ்க்காரணப் பெயர் ஆதல் அறிக.
(குயில்: குரல்: 2, இசை: 27, 12.1.1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக