மண்டலம்
இதை மண் தலம் என்று மேற்படியார் பிரித்தது சரி. அதன் இறுதியாகிய தலம் என்பது ஸ்தலம் என்ற வடசொற் சிதைவு என்று கூறியது அடாதது.
இடம் என்று பொருள் படும் தலை என்பது தொடர் மொழியின் இறுதிச் சொல்லாய் வரும்போது தலம் எனத் திரிந்து வரும். அவ்வாறு வந்ததே மண்டலம் என்பது.
எனவே, தலம் தூய தமிழ்க் காரணச் சொல்லேயாகும்.
(குயில்: குரல்: 3, இசை: 9, 16-8-1960)
தானம் பாடினான்
என்பதில் உள்ள தானம் வடசொல் என்றார் ஒரு புலி. தானம் என்பது வடசொல்லில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றது. தானம் பாடினான் என்பதில் உள்ள தானம் என்ன பொருளில் அமைந்திருக்கிறதோ, அதே பொருளில் பண்டைத் தமிழில் நாம் எங்கும் ஒரு சிறிதும் கண்டிலோம் என்றார் அந்தப் புலி. ‘ஆ’ ‘ஓ’ என்று வெற்றிசை பாடும் இசைப் புலவர்கள் தானம், தனம், ந்தனம் என்று சொல்லிப் பாடுவதைத் தானம் பாடுவது என்றே கூறினார்கள். தமிழிசைப் புலவர்கள், இந்தத் தானம் என்பது பண்டைத் தமிழிலக்கியத்தில் இல்லை, ஆனால் தானம் பாடினான் என்பதிலுள்ள தானம் வடசொல்லல்ல. என்னடா வேலையைப் பார்க்காமல் தந்தனந் தான் பாட்டுப் பாடுகின்றாய் என்று ஒருவனை கேட்கின்றான். இந்தத் தந்தனந்தான் என்பது பண்டைத் தமிழில் இல்லை. ஆதலால் இது தமிழல்ல என்று சொல்கின்றவன் படித்தவனா என்று நோக்குக.
எனவே தானம் பாடுதல் என்பதிலுள்ள தானம் என்பது செந்தமிழ்ச் செல்வமே என்க.
சிரத்தையா? சீர்த்தையா?
சிரத்தை என்பது பிறவிலேயே ஆரியம் அன்று. அது சீர்த்தை என்பதைத் திருடி மாற்றியமைத்தது.
சீர் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சிறப்பு என்பது பொருள். சீர் என்பதன் அடியாகச் சீர்த்தை தோன்றியது. சீர்த்து, குறிப்பு வினையாலணையும் பெயர். ஈற்று ஐ காரம் சாரியை.
சீர்த்தை என்றால் பொருள் என்ன பொதுவன்றிச் சிறப்பாக ஒன்றில் மனம் செலுத்துதல் என்பது.
உலகம் தோன்றிய நாளில் தோன்றியதும் தமிழகத்தில் வழங்குவதுமான தமிழ்ச் சொல் தமிழாகத்தான் நமக்குக் காட்சியளிக்க வேண்டும். கெட்ட காலத்தால், திருட்டுப் பசங்கள் சேர்க்கையால், காட்டிக் கொடுக்கும் கயவர் ஒத்தூதலால் தமிழர் கண்ணுக்கும் எல்லாம் வட மொழியாகத் தோன்றுகின்றன. யாரை நோவது!
சிரத்தை வடசொல்லன்று. செந்தமிழ்ச் செல்வந்தான்.
(குயில்: குரல்: 3, இசை: 38, 20-9-1960)
கவளம்
இது வடசொல் அன்று கவுள் என்பதன் அடியாகப் பிறந்த தூய தமிழ்க் காரணப் பெயர்.
கவளம் -ஒரு வாய் உணவு. கவுள்_-கவ்வி வாங்கப் பெற்ற இடத்தை நிறைத்த உணவு, இரண்டிற்கும் உள்ள கருத்தொற்றுமை காண்க.
கவளத்திற்கும், கவுளுக்கும் கல் என்பதே வேர்ச்சொல் என உணர்தல் வேண்டும்.
கவ்_-அளம் கவ்-_உள்.
எனவே கவளம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைப்பிடிக்க.
செந்தூரம்
இது வடசொற் சிதைவென்று ஏமாற்றுவாரும் உளர்.
செம்மை-_சிவப்பு. செம்மை_-ஈறு போகவே செம் என நிற்க. அதன்பின் தூரம் வந்தது. தூரம்-_நிறைவு. செம்மை நிறைந்தது செந்தூரம்.
எனவே செந்தூரம் தூய தமிழ்க் காரணப் பெயர்.
(குயில்: குரல்: 3, இசை: 38, 20-9-1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக