பனாதி
இது தமிழ்ச் சொல்லே. பன் + அத்து + இ = பன்னத்தி. அத்துச் சாரியை, ‘இ’ பெயர் இறுதி நிலை. பன்-ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கையிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது, பள்ளத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி–பசையற்றவன், வளமில்லாதவன். ஆதலின் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-1958)
ஆய்தம்
தமிழரின் ஆய்தத்தை வடவர் பறித்துக் கொள்ள பெரிதும் முயன்றுள்ளனர். மு. இராகவையங்கார் இதை வட சொல்லாக்கத் தலைகீழ் நின்றார் என்பதை, அவர் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சித் தொகுதி கண்டார் அறிந்தாராவார்.
ஆய்தல் அகம், ஆயுதல் அகம், ஆயல் அகம், ஆய்தகம் என்பன அனைத்தும் பயிலிடத்துக்கு ஆன பெயர்கள். சிறப்பாக அது படைப்பயிற்சி செய்யுமிடத்துக்கு ஆம். இந்த ஆய்தகம் என்பது ஆய்தம் என ஈறு திரிந்த ஆகு பெயராய் படைக்கு ஆயிற்று.
இனி ஆய்தம் என்பது (ஃ) ஆய்தவெழுத்துக்கும் ஆம். அப்படி ஆம் போது அது உவமை ஆகு பெயர் என்க.
ஆய்தம் என்பது (படை) தானேயன்றித் தான் மற்றொன்றை-தன்னை எடுத்தாள்-வோனைச் சார்ந்து பயன்படுவது.
ஆய்த வெழுத்தும் வல்லெழுத்தைச் சார்ந்து பயன்படுவது, ஆய்த எழுத்து-சார்பெழுத்துக்-களில் ஒன்று.
“சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலஎனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்.”
என்னும் தொல்காப்பிய நூற்பாவை நோக்குக. எனவே ஆய்தம் வடமொழியன்று. தூய தமிழ்ச் சொல்.
(குயில், குரல்: 1, இசை: 26, 25-11-1958)
சிங்கம்
இது ஹிம்ஸ என்ற வடசொல்லின் சிதைவாம். ஹிம்ஸ என்பது சிம்ஹ என்றாகப் பின் சிங்கம் என்று ஆயிற்றாம். இவ்வாறு வடவர் கூறுவதோடு தமிழ்ப் புலவர் சிலரும் கூறுகின்றார்கள்.
சிலப்பதிகாரப் பதிகம் 47-ஆம் அடியில்
“சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து”
என்றதை உற்று நோக்குவாருக்கு உண்மைப் புலப்படாமல் போகாது. இது மட்டுமல்ல, கம்பராமாயணம் நாடுவிட்ட படலம் 40இல் செய்யுளாகிய
“சிங்கல் இல் கூதாலி”
என்பதையும் நோக்குக. தமிழ்ச் செய்யுள்களில் பல இடங்களில் இவ்வாறு வந்துள்ளதென்பது தமிழறிந்தார் அறியாததன்று.
சிங்கம்-கெடுதல் என்பது பொருள். எனவே பிற உயிர்கட்குக் கேடு சூழ்வது அதனால் தானும் கெடுவது சிங்கம் என்றாயிற்று. உயிர்நூற் புலவரும், சிங்கம் இந்நாட்டிலும் பிற நாட்டிலும் இல்லாது குறைந்து வருவதற்குக் காரணம் பிற உயிரை அரிப்பதுதான் என்று கூறுவார்கள். சிங்கத்துக்கு அரிமா எனப் பெயருண்டு. சிங்கல் சிங்கத்துக்கு ஆன ஆகுபெயர்.
எனவே சிங்கம் தூய தமிழ்ச்சொல் என்க!
வரம்
வரல் என்பது ஈறுதிரிந்த தொழிற் பெயராய் வருதலுற்ற பொருளைக் குறிக்கும். இந்த வரல் என்பது வரத்து என்றும் வழங்கும். அதனாலன்றோ கம்பராமாயணம் ஆரணிய காண்டம், விராதன் வதைப்படலம் 22ஆம் செய்யுளில்
வரத்தின்-வருதலினால் என்று பொருள் கொண்டதும் என்க. எனவே வரம் என்பது தூய தமிழ்ச் சொல்லே என்று கடைப்பிடிக்க.
(குயில், குரல்: 1, இசை: 27, 2-12-1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக