பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (கங்கை)

 


மே 16-31

கங்கை

நவ்வல், நாவல் என்பன ஒரு பொருள் உடைய தமிழ்ச் சொற்கள். இது இந்தியாவின் நடுப்பகுதியில் மிகுதி. நாவல் மிகுதியாக நடுப்பகுதியில் இருந்த காரணத்தால் பண்டைத் தமிழர்கள் இத்தீவை நாவலந் தீவு என்றார்கள்.

தென் என்பது அழகு. அது கண்ணுக்குப் பொருளாகும் போது அழகு எனப்படும். மனத்துக்குப் பொருளாகும் போது இனிமை எனப்படும். எனவே தென்_-அழகு, இனிமை என்க. தென் என்பதிலிருந்து தென்னை தென்கு என்பன தோன்றின.

இவற்றின் பொருள் அழகியது, இனியது என்பன. எனவே தென்னையும் தென்கு அல்லது தெங்கும் அவ்வகையான மரத்துக்குக் காரணப் பெயர். தென்னை மரம் அதாவது தெங்கு அழகியதாக இருத்தலையும் நோக்குக!

இத் தென்னை நாவலந்தீவின் தென்புறம் மிகுதி. தென்னை இருந்த காரணத்தினாலேயே இப்புறத்திற்கு தெற்கு என்று கூறினார்கள் பண்டைத் தமிழ் மக்கள்.

வடம் என்பது ஆலமரம். அது வட்டமாக மேலோங்கித் தழைப்பதால் அவ்வாறு காரணப் பெயர் பெற்றது.

வடமரம் அதாவது ஆலமரம் நாவலந் தீவுக்கு வடபுறத்தில் மிகுதி. அந்தப் பக்கத்தை வடக்கு என்ற சொல் வடமரம் இருந்ததால் வந்த காரணப் பெயர் என அறிக. எனவே நாவல் மரங்கள் மிகுதியாக நடுவிடத்தை அழகு செய்ததால் இத்தீவுக்கு நாவலந்தீவு என்கிறார்கள் பண்டைத் தமிழர்கள்.

தென்னை மரங்கள் அழகு செய்து சிறக்க இருந்ததால் இப்பக்கத்தை தெற்கு என்கிறார்கள். வடமரம் மிகுந்திருந்த காரணத்தால் அப்பக்கத்தை வடக்கு என்றார்கள். யார்? பண்டைத் தமிழ் மக்கள். இன்னும் மேற்கு என்பதற்கு மேல் (உயரம்) என்பதுதான் பொருள். உயர்ந்திருக்கும் பக்கம் ஆதலால் அது மேற்கு என்கிறார்கள்.

கிழக்கு என்றால் கீழ் (தாழ்ந்த) என்பதுதான் பொருள். அப்பக்கம் தாழ்ந்திருத்தல் கருதியே கிழக்கு என்கிறார்கள். இதுவரைக்கும் சொல்லியவற்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னவெனில்:

1.    நாவலந்தீவு முழுவதும் இருந்தவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.

2.    நாவலந்தீவு முழுவதும் வழங்கியது தமிழ் மட்டும்தான்.

3.    நாவலந்தீவு முழுவதும் இருந்த _ -இருக்கின்ற பொருள்கள் அனைத்துக்கும் உள்ள பெயர்கள் அனைத்தும் தமிழர் இட்ட தமிழ்ப் பெயர்களே!

ஆரியர்கள் பிறகு வந்தவர்கள். பிறகு வந்தார்கள் என்றால் அவர்கள் பிறகு இந்நாட்டுப் பொருள்களுக்குப் பெயர் வைத்திருக்கலாம் என்றால் அது எப்படி முடியும்? எந்த இடத்திலிருந்து வந்தார்களோ அந்த இடத்தில் இல்லா இமையத்துக்குப் பெயர் எப்படி அவர்கள் கொண்டு வந்திருக்க முடியும்?

கங்கு என்பது கரைக்குப் பெயர். தமிழில் கங்கு _- கங்கை என்று வருவதற்கு இலக்கணச் சட்டம் இருக்கிறது. அதை அய்யீற்றுடைக் குற்றுகரச் சொல் என்பார்கள். கங்கையாறு கரையாற் சிறப்புற்றது பற்றி அதைக் கங்கு அல்லது கங்கை என்கிறார்கள் அங்கிருந்த பண்டைத் தமிழர்கள்.

கங்கா என்ற வடமொழிச் சிதைவுதான் கங்கை என்று பார்ப்பனர் பகர்வர். அவர் கால்நத்திகள் கழறுவர்.

நாவலந்தீவுக்கே உரிய பொருள்களுக்-கெல்லாம் நாவலந்தீவின் மொழியாகிய தமிழ்ப் பெயர்தான் உண்டு என்று காட்டப்பட்டது இதுவரைக்கும்.

பொதுவான பொருள்களுக்கு அமைந்த சொற்களிற் பெரும்பாலனவும் தமிழ்ச் சொற்களாகும் என்பது மறுக்க முடியாததாகும்.

(குயில், 1.7.58)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக