விஞ்சை
இதை விந்த்யா என்பதன் திரிபு என்பார் தமிழறியார். விஞ்சுதல் (மிஞ்சுதல்) என்ற சொல் தமிழில்தான் உண்டு. வித்யா என்பதோ விந்த்யா என்பதோ விஞ்சை என வராது, வரத் தேவையுமில்லை.
விஞ்சுதல், விஞ்சை, விஞ்சு என்பவை முதனிலையாகக் கொண்ட தொழிற்பெயர்களே. பொருளும் ஒன்றுதான்.
சடை
இதைப் பலர் ஜடை என்று கூறி இழுக்குவர். இதுமட்டுமன்று. அவர்கள் சகரத்தையெல்லாம் ‘ஜ’ என்றே வாய்ப்படுத்து மகிழ்ந்து கொள்வர். இது பிழை என்பதும், மானக்கேடான செயல் என்பதும் அவர் அறியார். இந்தப் பிழையுணர்ச்சி எங்கிருந்து தோன்றியது எனில், சடை என்பது ஜடா என்ற வாய்ச் சொல்லின் சிதைவென்று கூறித் திரியும் ஆரியச் சார்பினரிடமிருந்தே தோன்றியது என அறிதல் வேண்டும்.
சடை தூய தமிழ்க் காரணப் பெயர். திரித்துவிட்ட தலை மயிரைக் குறிக்கும் சடை என்ற இச்சொல், முதலில் ஆலின் விழுதையும், வேரையும் குறித்தது. இது பின்னர் விழுது, வேர் போன்றதான மயிர்த்திரிக்கு உவமை ஆகு பெயராயிற்று. வடசொல் அன்று, வடநூற்களில் அச்சொல் உள்ளதே எனின் தமிழினின்று எடுத்தாண்டனர் எனத் துணிக.
(குயில்: குரல்: 1, இசை: 44, 7-4-59)
அவிசு
அவிசு, அவிது, அவிதல் ஒரே பொருளில் அமைந்த தொழிற் பெயர்கள். அ, து, தல் தொழிற்பெயர் இறுதி நிலைகள். வேகவைத்தல் என்பது பொருள். இது அவி என முதனிலைத் தொழிற் பெயராகவே நிற்பதும் உண்டு.
“அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று”
என்ற குறட்பாவில் நோக்குக!
அவிசு, அவிது, அவிதல், அவி இவை தொழிலாகு பெயராய், அவிக்கப் போகும் ஆடுமாடுகளின் தசையையும் அவித்த, அதாவது வெண்ணெயை அவித்த – -வேவைத்த – -காய்ச்சிய நெய்யையும் குறிக்கும்.
வேள்வியின் பெயரால் ஆடுமாடுகளைப் பலியிட்டு வேகவைத்துத் தின்னும் ஆரியர், இத்தமிழ்ச் சொல்லை எடுத்தாண்டார். அவர் ஆவிஸ் என வாயாடுவர். எனவே, அவி, அவிசு தூய தமிழ்க் காரணப் பெயர்கள்.
அவை, சவை
அவை என்னும் தூய தமிழ்க் காரணப்பெயர். ஆரியரால் சவை, சபை, சபா என்றெல்லாம் வாயாட்டுப் பெற்றது. பெறவே இடைக்காலத்தில் அவை வேறு, சபை வேறு என்று ஆகிவிட்டது.
அவை சவை குழாம்விற் பந்நர்
அஃறிணைப் பன்மைச் சுட்டாம்
சவைவீடு அம்பலம் தக்கோரின்
சமூகம்பண் டிதன் சூது என்ப.
என்னும் நாநார்த்த தீபிகையிற் காண்க.
அவ்வுதல் என்பதும் அவ்வை என்பதும் தொழிற் பெயர்களே. அழுந்துதல், வீழ்தல் என்பன இவற்றின் பொருள். மனம் நன்னெறிக்கண் அழுந்துதல், வீழ்தல் என்று பொருள் கொள்க. வீழ்தல் – –மனஞ்செலுத்தல் மனம் ஆழ்தல் என்க!
வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அணி என்ற குறட்பாவில் நோக்குக.
அவ்வை என்பது வகரத் தொகுத்தல் பெற்று அவை என ஆயிற்று.
எனவே அவை தூய தமிழ்க் காரணப் பெயராதல் காண்க.
இனி அவையினின்று தோன்றிய சவை, சபை, சபா என்பன தமிழ் வேர்ச்சொல் பெற்றவையேனும் அவைகளைத் தமிழர் எடுத்தாளல் சிறப்பன்று. சவையை எடுத்தாளுவதில் குறைவு இன்று.
சங்கமே கணைக்கால் ஓரம்
சவை சங்கு புலவர் நெற்றி
என்ற நிகண்டாசிரியர் சவை என்பதை எடுத்தாளல் நோக்குக!
(குயில்: குரல்: 1, இசை: 46, 2-4-59)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக