குமரி
குமைதல் எனில், அழிதல், உரி எனல் உரு உடையது. உரு என்ற முற்றுகரம் இகரத்தை முற்றும் அற்று என்ற இலக்கணச் சட்டத்தால் உரி எனப் புணர்ந்தது
குமை+உரி=குமையுரி. இது குமரி என வேறுபாடுற்றது.
எனவே குமரி என்பதன் பொருள் குமரி முனைக்கு ஆகும்போது அழிவை அடைந்தது என்ற பொருளை அடையும்.
குமரி என்பது சிறுமை, நிரம்பாமையுடைய பெண்ணுக்கு ஆவதும் காண்க.
எனவே,
குமரி தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
(குயில்: குரல்: 2, இசை: 32, 23-2-60)
கொட்டாரம்
இது வடசொற் சிதைவென்று நம் தோழரிடம் பார்ப்பனர் ஒருவர் கூறினாராம். அவர் தம் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. அது மட்டுமல்ல, பார்ப்பனர் பேரையும் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை.
நம் தோழருக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது, இப்படிக் கலகக்காரப் பசங்கள் இல்லாததும் பொல்லாததும் சொல்லிவிட்டு மகிழ்ச்சியடைந்து கொள்வதுண்டு. அப்படி நடந்து கொண்டால் இவர் நம்மை உதைப்பாரே என்று அவர்கள் நினைக்கும்படி நம்மைக் காட்டி வைக்க வேண்டும்.
கொட்டரவு என்றால் கெட்டுதல். குவித்தல் சேர்த்தல் என்பது பொருள். கொட்டரவு என்பதில் அரவு தொழிற் பெயர் இறுதி நிலை, தேற்றரவு என்பதிற் போல! அந்த அரவு என்ற இறுதிநிலை திரிபு பெற்றுக் கொட்டாரம் ஆயிற்று. கொட்டாரம், கொட்டுதல் என்பதே. இது தொழிலாகு பெயராய் நெல் முதலிய கொட்டிவைக்கும் ஒரு பெரும் பேழையை உணர்த்தும் அல்லது கொட்டி ¬க்கும் தனியிடத்தைக் குறிக்கும். எனவே, கொட்டாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று உணர்க.
பந்து
என்பது பந்தம் என்ற சொல்லினின்று வந்ததென்று சடகோபராமாநுசர் சாற்றி மகிழ்ந்தார்.
பை என்பது தமிழில் பொட்டணத்துக்குப் பெயர். அந்தப் “பை’’ என்பதனடியாகப் பிறந்த பெயரே பந்து என்பது.
பைந்து என்றே முதலில் வழங்கிற்று. பின்னர் போலியாகப் பந்து ஆயிற்று.
தாரகம் புதைத்த தண்மலர்ப் “பைந்து’’ (பெருமககாண்டம்)
நொம்பைந்து புடைத்து ஒல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் (தே.ஞா.)
பொட்டணம் போல் கட்டிப் பெண்கள் விளையாடுவதினின்று தோன்றியது பைந்து, பந்து என்ற பொருளே உடையது.
ஆதலின் பந்து வந்தவர் மொழியன்று, செந்தமிழ்ச் செல்லவமே என்க.
(குயில்: குரல்: 2, இசை: 36, 12-4-1960)
சிப்பம்
இதைச் சிப்பம் என்ற வடசொற் சிதைவு என்பர் ஏமாற்றுகின்றவர். இது சிம்பு என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்.
சிம்பு – –மூங்கில் முதலியவற்றின் சிறு பிளவு.
சிம்புதல் என்றால் இழுத்தல் என்ற பொருளில் வழங்குகிறது.
பிரம்பு + காடு = பிரப்பங்காடு
இரும்பு + ஆணி = இரும்பாணி
கரும்பு + சாறு = கருப்பஞ்சாறு
மருந்து+பை=-மருத்துப் பை.
என்பவற்றில் மெல்லெழுத்து வல்லெழுத்தானது போல சிம்பு என்பதும் சிப்பு ஆயி அம் மீறு பெற்று சிப்பம் ஆனது.
சிப்பம்-கட்டு, சிம்பு வைத்துக் கட்டுவது என்க.
எனவே,
சிப்பம் தூய தமிழ்க் காரணப் பெயர். வந்தவர் மொழியன்று
(குயில்: குரல்: 2, இசை: 38, 31-5-1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக