குடம்
இது தூய தமிழ்ச்சொல். இதையும் வடசொல் என்று ஆக்கிவிட எண்ணினர் வடவர். குடாகாயம் என்ற ஒரு தொடரைக் கட்டித் தத்துவ நூற்களில் விட்டிருந்தார்கள். சிவஞான போதத்திற்கு உரை எழுதவந்த சிவஞான யோகிகள் அங்கு இந்த குடாகாயத்தைக் கண்டாராதலின் அது பற்றிய புனைசுருட்டை விளக்க எண்ணினார். குடம் என்ற தமிழ்ச் சொல்லும், ஆகாயம் என்னும் வடசொல்லும் புணரவேண்டுமானால், குடவாகாயம் என்று புணர வேண்டும். ஆதலால் யோகிகள் குடாகாயம் என்று புணர்ந்துள்ள இது மரூஉ என்று கூறி, குளம் ஆம்பல் என்பன குளாம்பல் என்று புணர்ந்துள்ளதையும் எடுத்துக் காட்டினார். இதனால் வடவர், குடம் என்பதற்கு வடமொழிச் சட்டை போட்டதும், அது தமழ்ச் சொல்தான் என்று சிவஞான யோகிகள் அந்தச் சட்டையைக் கிழித்-தெறிந்ததும் உலக வெளிச்சமாகி விடவே வடவருக்கு வந்தது எரிச்சல். சிவஞான யோகிகள் மேல் படை எடுக்க வேண்டும், நேரடி நடவடிக்கையில் நுழைவாரா வடவர்? அதுதானே இல்லை! கோடரிக் காம்பொன்று தேடினார்கள், சிவஞான யோகிகளைத் தொலைக்க.
இதற்குமுன் வைத்தியநாத தேசிகர் என்ற ஒருவர் இலக்கண விளக்கம் என்பதொரு நூல் எழுதியிருந்தார். அந்நூல் வடமொழியினின்றே தமிழ் வந்தது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைச் சிவஞான யோகிகள் இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலின் வாயிலாக மறுத்துத் சிதறடித்தார். உள்ளதைச் சொன்னால் நொள்ளையனுக்கு நோக்காடு தானே? வைத்தியநாத தேசிகர்க்குச் சிவஞான யோகிகள் மேல் பகை உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. குடம் தமிழ்ச் சொல்லே என்று எடுத்துக்காட்டியதற்காக அச்சிவஞான யோகிகள் மேல் ஏவினார்கள் வடவர், கோடாரிக் காம்பாகிய வைத்தியநாத தேசிகரை.
எடுத்தார் தேசிகர் இறகை! குடம் என்பது வடசொல்லே! என்று எழுதினார். இப்போது வண்ணாஸ்த்ரிதான் வண்ணாத்தி ஆயிற்று என்று தெ.பொ.மீ. சொன்னது போல, சிவஞான யோகிகளின் உண்மைக் கருத்தைத் தேசிகரின் இந்த மறுப்பு அசைத்து விடவில்லை. ஆயினும், தமிழர்களுக்கு அது தமிழ்ச் சொல்லே என்பதை நன்றாக விளக்க வேண்டுமே என்ற அருள் உள்ளத்தால், சிவஞானயோகிகளின் மாணவராகிய சபாபதி நாவலர் தாம் எழுதிய திராவிடப் பிரகாசிகை வாயிலாக ஒரு விளக்கம் தரலானார். அது வருமாறு:
குடம் தமிழ்ச் சொல் ஆதல் குடந்தம்பட்டு, குடக்கூத்து, குடமுழா என்றற்றொடக்கத்தாற் பயின்று வரும் தமிழ் வழக்குரைகளால் அறிக. இன்னும் குடம் தமிழ் இயற்சொல் என்பது குடந்தம்பட்டு எனவரும் திருமுருகாற்றுப் படைத் தொடர்க்கு வழிபட்டு என்றும், வணக்கம் பட்டு என்றும் உரைப்பர் என்றும், ‘குட’ என்பது ‘தட’ என்பது போல வளைவு உணர்த்துவதோர் உரிச்சொல் ஆதலின் அதனடியிற் பிறந்த பெயருமாம் என்றும் நச்சினார்க்கினியார் உரை கூறுதலால் அறிக.
இதுவரைக்கும் கூறியவற்றால், சிவஞான யோகிகளும், நச்சினார்க்கினியரும், குடம் தமிழ்ச்சொல் என்பதையும், மேலும் காரணப் பெயர் என்பதையும் விளக்கியது அறிவிக்கப்பட்டது. அதுபற்றி இன்னும் சில கூற விரும்புகின்றோம். தட என்பது வளைவுக்குப் பெயர்.
அவற்றுள், ‘தட என்கிளவி கோட்டமும் செய்யும்’ என்றது காண்க. அதுபோலவே ‘குட’ என்பதும் வளைவுக்குப் பெயர் என்க. வளைவு பெற்றுள்ள காரணத்தால் குடம் காரணப் பெயர். குடம் போல் அதாவது உடல் வளைந்து வணங்குதற்கும் குடந்தம் என்பர் தமிழ் சான்றோர் என்பது காட்டப்பட்டது.
இனி, இவ்வாறு வளைவின் பெயரால் வணங்குதலைக் குறிப்பதென்பது தமிழ் நூற்களில் பெருவரவினதாகும். தோட்டி என்பது யானை செலுத்துவோன் வைத்திருக்கும் கருவி, அது வளைந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. அதனால் வணங்குதலைத் தோட்டி என்ற பெயராலும் குறித்துள்ளார்கள் பழந்தமிழ்ச் சான்றோர்.
(குயில், குரல்: 1, இசை: 22, 28-10-58)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக