– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
காமம்
இது வடசொல் என்றே கூறிப் பொய்ப்பர். ஏனெனில் வடமொழி நூற்களில் பெரிதும் வருவதான ஒரு சொல் இது. தமிழினின்று திருடியது.
காமக்கணிப் பசலியார் என்பது ஒரு பெண்பால் புலவர் பெயர். இதுல் காமம்,கண் என்பன முதலிரு சொற்களாகும். இது காமாட்சி என்பதனின் தமிழ் மொழி பெயர்ப்பு. இவ்வாறு மொழி பெயர்த்தவர் சங்கப் புலவர் என்க. சாம்பூநதம் என்னும் ஒருவகைப் பொன்னை, நக்கீரனார் நாவலொடு பெயரிய பொலம் என்று தமிழிற் பெயர்த்ததும் காண்க. காமாட்சி என்பதில் காமம், ஆட்சி என்ற இரு சொற்கள் உண்டு. ஆட்சி மட்டும் வடசொல் ஆதலால் காமாட்சி – காமக்கண் என்றார். எனவே காமம் தமிழச் சொல்லே. ஆதலும் அதை வடவர் எடுத்தாண்டார் ஆதலும் காண்க. காமம் – தோற்றத்துக்கு முன்னது. அது காம்பு என்பதன் வேர்ச்சொல் ஆகிய காம் என்பதனின்னு தோன்றியது.
இது போல் ஓம்பு என்பதன் வேர்ச்சொல்லாகிய ஓம் என்று வழங்கி வருவதும் ஊன்றி அறியற்பாலது.
ஓம்
இது வடசொல் அன்று. தூய தமிழ்ச் சொல். காக்க என்பது இதன் பொருள்.
சங்கம்
சங்கமே, கணைக்கால், ஓரம், சவை, சங்கு, புலவர், நெற்றி என்பது நிகண்டு. சங்கம் இத்தனைப் பொருளைத் தருகிறது. சவை புலவர் என்று குறிக்குமிடத்தில் அது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா என்றுதான் ஆராய்ச்சி இங்கே.
தொல்காப்பிய காலத்துக்கு முன்பே தென்பால் தென் கழகம் என்பதொன்றும் வடசொல், வடகழகம் என்பதொன்றும் இருந்ததாக பழைய இலக்கியங்கள் நமக்கு நவிலுகின்றன.
வடகழகமிருந்து கருத்து வேறுபட்டு, அகத்தியர் தென் கழகம் போந்தார் என்றும் கூறுவார். தென் கழகம் என்பது தென்னகம் என்றும், தெங்கம் என்றும் செங்கம் என்றும் ச என்ற எழுத்துத் தமிழில் சொல்லுக்கு முதற்கண் வரத்துவங்கிய பின் சங்கம் என்றும் வழங்கலாயிற்று என அறிதல் வேண்டும். வடபுலம், தென்புலம் என்பன கூட முதற்கண் வடகழகம், தென்கழகம் என்ற பொருளிலேயே வழங்கினவாதல் வேண்டும். புலம் – அறிவு.
தென்கழகம் என்பதே சங்கம் என மருவியது எனின், வடபால் சங்கம் என்ற சொல் என்ன பொருளில் வழங்குகின்றது என்றால், வழங்கவில்லை என்றுதான் பதில் இறுப்போம். சங்கம் என்ற சொல் பிற்பட்ட தமிழிக்கியத்துள் மட்டும் காணப்படுகின்றதும் காண்க.
சங்கம் வடமொழியன்று என்று அறுதியிட்டுக் கூறுவோம். அது தமிழ்ச் சொல்லே என்று உறுதியிட்டுக் கூறுவோம்.
பதி
அரசன், இடம், கொழுநன், தலைவன், பதிவு, வீடு இத்தனை பொருள் பயக்கும். பதி என்பது வடசொல்லன்று. வழங்கிடுவோர், வடவரும் அவர் அடியார்களும்.
எஞ்சிய எல்லாம் எஞ்சிய இலவே.
(தொல்காப்பியம் மொழிமரபு – சச)
என்ற நூற்பாவின் உரையில் பதி என்பது குறிக்கப்பட்டது காண்க. அது வடசொல்லாயின் குறியார் என்க. எனவே பதி தூய தமிழ்ச் சொல்லே.
கலை
இதுவும் தூய தமிழ்ச்சொல்லே. மேற்படி நூற்பாவுரையும் இதை வலியுறுத்திற்று. கல்வி, ஆண்மான் என்பன இதன் பொருள்.
பிலம்
பில்கல் என்பதன் முதநிலையாகிய பில் என்பது நீர் பொசியும் இடம். அதாவது கீழ் அறையைக் குறிக்கும் – பில் அம் பெற்று பிலம் ஆயிற்று. இது தூய தமிழ்ச் சொல்.
குலம்
இது குலை என்பதன் திரிபு. இதை வடவர் எடுத்தாண்டதில் நமக்கு வருத்தமில்லை. அது வடசொல்லே என்று புளுகும்போது தான் எரிச்சல் உண்டாகிறது. இது தூய தமிழ்ச்சொல் என்பதற்கு முன் காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் உரையே சான்றாகும்.
(குயில், குரல்: 1, இசை: 9, 29.7.1958)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக